மிஷா, சோவியத்லைப், ராதுகா பதிப்பகம், சிவப்பு நிற கெட்டி அட்டையில் மாமேதை லெனின் முகம் கொண்ட புத்தகங்கள், அந்த பச்சை நிறம் கொண்ட ஒரு தனி ரக வழவழப்பான அதே சமயம் சற்றே கெட்டியான அட்டையோடு அமைந்த "குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என இவையெல்லாம் அதிகபட்சம் ஒரு 25 ரூபாய்க்குள் கிடைத்திட்ட பொழுதில் நானும் இருந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. கோவையின் உக்கடம் பகுதியின் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பழைய கடைகளில் 2003ல் கூட நான் வெறும் 10 ரூபாய்க்கு மார்க்ஸிம் கார்க்கியின் தாய் புத்தகம் வாங்கியுள்ளேன். சோவியத் என்ற அந்த சொல்லே ஒரு பாதுகாப்பு உணர்வு மற்றும் ஏதோ நம்மோடது போல ஒரு நினைப்பு. இனி இந்த புத்தகத்திற்கு வருவோம்.
Leftwordபதிப்பகத்தின் மார்ச் 2019 வெளியீடு EAST WAS READ. ஒரு புத்தகத்தின் அட்டை உள்ளிட்டு மிக கவனத்துடன் வடிவமைப்பதில் தொடர்ந்து இந்த பதிப்பகம் சிறக்கிறது. தவறவே விட கூடாததாகவும், இந்தப் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வினை தோழர் விஜய் பிரசாத் அவர்களின் முன்னுரை நமக்கு கடத்துகிறது. 1896-97 காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்ச பொழுதில் ஒரு பக்கம் 4 மில்லியன் இந்தியர்கள் மரணித்ததும், அதே சமயம் விக்டோரியா மகராணி அவர்களின் 60 வருட ஆட்சியை சிறப்பாக கிழக்கு இந்திய கம்பெனி கொண்டாடியதும் இங்கே இந்தியாவில் அதை எதிர்த்து தாதாபாய் நௌரோஜி அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றதும், ராணியாரை queen of black death and empress of famine என அவர் வர்ணித்ததும் விஜய் பிரசாத அவர்களுக்கு 2001ல் வெளிவந்த M.G. Davis அவர்களின் புத்தகம் ஒன்றில் காண கிடைக்கிறது. இவ்வாறாக புத்தகத்தின் சமூக பாத்திரம் குறித்து எடுத்துக்காட்டுடன் புரட்சிக்கு பின்னான காலக்கட்டத்தில் சோவியத் நாடெங்கும் எழுப்பப்பட்ட எழுத்தறிவித்தல் பணிகள் குறித்தும் சிறப்பாக விளக்குகிறார்.
இப்புத்தகத்தின் ஹைலைட் என நான் நம்புவது, தீபா பஸ்தி மற்றும் ரேவதி லால் எழுதியுள்ள கட்டுரைகள். சற்று உணர்வு பூர்வமானது. அதே சமயம் ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ ரஷ்யாவின் "செகாவ் வீட்டில்" தான் இரத்த பூவிதழ்கள் எழுதியுள்ளதையும், கவிஞர் பயஸ் அகமது பயஸ் அவர்கள் லோட்டஸ் என்ற tricontinental புத்தகம் நடத்தியதும், பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ் பின்னாளில் எவ்வாறு ராதுகா ஆனது என்பதாகவும், பல புதிய செய்திகள் நினைவுகளாக விரவி இருக்கின்றன. சுதான்வா தேஷ்பாண்டேவின் மேடை நாடகம் குறித்த பதிவு சிறப்பு. ஆம், கியூபாவின் சினிமாவும், அங்கே நடைபெற்ற முத்தரப்பு (ஆசியா, ஆப்பிரிகா, அமெரிக்கா) கூட்டிணைவு மாநாடு நடந்த விதமும் சிறப்பு.
ஆமாம், மறக்காமல் சொல்ல வேண்டியது, 1991ல் ராதுகா பதிப்பகம் நின்ற போது அதிலிருந்து சுமார் 2000 தலைப்புகளில் புத்தகங்கள் பல மொழிகளில் சுமார் 30 மில்லியன் பிரதிகள் கண்டிருந்ததாம். அதோடு தமிழ் நெஞ்சங்களுக்கு சொல்ல வேண்டியது, நமது நா. தர்மராஜன் அவர்கள் சுமார் 60 புத்தகங்களை 7 வருடங்களில் மொழிபெயர்த்திருக்கிறாராம், ராதுகா பதிப்பகத்திற்காக. இன்னும் நிறைய நிறைய உள்ளே உள்ளன.
சரி, யாருக்கெல்லாம் இந்தப் புத்தகம் பிடிக்கும். குறுகிய காலமே நீடித்தாலும் இன்னும் சோவியத் என்னும் மாய சொல்லுக்கு பின்னே கிறங்கி நிற்கும் பலருக்கும், அந்தக் காலத்தில் ஒரு சின்ன வண்டியில் குறைந்த விலையில் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் மிஷா, சோவியத் லைப் இந்த புத்தகமெல்லாம் படித்து மகிழ்ந்த மனங்களுக்கும். இன்னும் எங்கேயாவது அந்த ஒரிஜினல் தாய் கிடைக்குமா எனவும், கிடைக்கிற சிவப்பு நிற கனத்த அட்டை கொண்ட புத்தகங்களை நெஞ்சோடு ஒட்டி வைத்து ஒரு நிமிடமேனும் நெகிழ்ந்து நிற்கும் நெஞ்சங்களுக்கு, எத்தனையோ பின்னடைவுகளை சந்தித்தாலும் சோசலிசமே மனித குல விடுதலைக்கு தீர்வு என எண்ணும் மக்களுக்கு ஒரு nostalgic பயணம் செல்ல இந்தப் புத்தகம் பரிந்துரைக்கிறேன்., வாசித்து மகிழுங்கள்.
Comments