கம்யூனிஸ புரட்சி நடைபெற்று விடுதலை அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும்
புரட்சி அரசு நடத்திய முதல் அரசியல் நிகழ்வு ”அனைவருக்கும் கல்வி”. ரஷ்யா
தொடங்கி கியூபா வரையிலும் அதுவே முக்கிய முதல் நிகழ்வு. அதிலும் கியூபாவின்
அனைவருக்கும் எழுத்தறிவு திட்டமும் செயலாக்கமும் வியப்பளிப்பவை,
அனைவருக்கும் உதாரணமாக விளங்க கூடியவை.
விடுதலை கிடைக்கின்ற போது
வெறும் 40 சதம் மட்டுமே இருந்த அந்நாட்டின் எழுத்தறிவு புரட்சி நடைபெற்ற
ஓராண்டில் – ஒன்றரையாண்டில் 100 சதமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆய்வு
செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தன் நாட்டு குடிகள் அனைவரும் எழுத்தறிவு
பெற்றவர்களாக மாற்றிய உலகின் முதல் நாடு கம்யூனிச கியூபா.
இது
எப்படி சாத்தியம் ஆனது என்பது மிக சுவாரசியமான உண்மைக் கதை. வாருங்கள் நம்
நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குவோம் என அழைத்த தோழர் பிடலின்
குரலுக்கு அந்நாட்டின் இளைஞர்கள், மாணவ மாணவியர் என எல்லாரும் தயாராயினர்.
WE SHALL PREVAIL என கோஷம் முன்வைக்கப்பட கியூப தலைநகராம் ஹவானாவில் 50000
பேர் கையில் புத்தகத்தோடும், 10 அடி உயர மாடல் பென்சிலோடும், ஆம் நாங்கள்
வெல்வோம் என பாடியபடி சென்ற பேரணி காட்சி எப்படி இருக்கும் என எண்ணிப்
பாருங்கள். ஆம், நாடு தயாராகிவிட்டது.
கியூபாவில் பள்ளிகளுக்கு
ஓராண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, 12 வயதே ஆன
மாணவ மாணவியர்கள் கூட எழுத்தறிவின்மையை போக்க ஆசிரியர்களாக மாறலாயினர்.
ப்ரிகேடிஸ்டா என பெயரிடப்பட்டு எழுத்தறிவின்மையை போக்கும் படை தயாரானது.
அவர்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் சென்று, காடு மலைகளுக்கும் சென்று,
எழுத்தறிவு பெறாதவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து அவரக்ளுக்கு பகல்
பொழுதில் கூடமாட வேலை செய்தும், பின் மாலை தொடங்கி இரவு வரை அவர்களுக்கு
கல்வி பயில்விக்கும் மகத்தான வேலையை செய்ய வேண்டும்.
கியூபாவின்
தலைநகரில் இருந்த ஒரு பெண் குழந்தை ஒன்று பிரிகேடிஸ்டாவாகும் கனவு கொள்ள
சர்வாதிகார ஆட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட பழமைவாதமும், பெண் அடிமைத்தனமும்
ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே செல்வதா என எதிர்ப்பாக வீட்டிற்கு உள்ளாகவே
எழுகிறது. நகர வாழ்வினை அனுபவித்த குழந்தை காடு மலைகளுக்கு சென்று அங்கேயே
தங்கி ஓராண்டு இருப்பது என கொடுமை பெற்றோர்கள் தவிக்கிறார்கள். அதையும்
மீறி செல்கிறாள். கியூபாவின் மலைப்பகுதி கிராம வீடு ஒன்று அவளுக்கு
ஒதுக்கப்படுகிறது. வீட்டில் அவர்களோடு குதிரை ஓட்டுகிறாள், வயல்களில் வேலை
செய்கிறாள், தண்ணீர் எடுத்து வருகிறாள், அவர்கள் உணவை உண்டு அவர்களோடே அவள்
வாழ்வு நகர்கிறது. மாலை நேரங்கள் மட்டும் ஆசிரியராக மாறுகிறாள். ஒரு
பக்கம் உழைத்து உழைத்து இறுகி போன கரங்களில் பென்சில் பிடிக்க வைக்க
சிரமப்படுவதும், சர்வாதிகார ஆட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கு ஏன்
கல்வி என்கிற பழமைவாத சிந்தனையையும் எதிர்கொண்டு வெல்கிறாள்: சர்வாதிகார
ஆட்சியின் கடைசி எச்சங்கள் சில இந்த பிரிகேடிஸ்டாக்களை கொலை செய்ய
துடிக்கின்றனர். சாவின் வாசல் வரை வந்து இந்தப் பெண் தப்பிக்கிறாள், அம்மலை
கிராம ஏழை மக்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றுகிறாள்.
புரட்சியின் பெருங் கனவினை ஆகப் பெரும் கடமையினை சாத்தியமாக்கிய
பிரிகேடிஸ்டாக்களுக்காக ஹவானா மிகப் பெரிய வரவேற்பினை தருகிறது. தோழர்
பிடல் காஸ்ட்ரோவின் கனவு மட்டுமல்ல, புரட்சிகர நாட்டின் முதல் அத்தியாவசிய
அரசியல் நிகழ்வு அழகாய் அரங்கேறியது.
MY BRIGADISTA GIRL என்னும்
இச்சிறு புத்தகம் சுவாரசியமாக இருக்கிறது. என்ன, வழக்கம் போல் அமெரிக்கான
ஆசிரியர் கியூபாவில் மனித உரிமை நசுக்கப்படுகிறது என்ற பழம் உலுத்துப் போன
பொய்யையும் இந்த புத்தகத்தில் ஓரிடத்தில் பதியாமல் இல்லை. ஒரு சாகச பயணம்
போலும், அதே சமயத்தில் பெருங்கனவு நனவான ஒரு அற்புதமான செயலையும் அனுபவிக்க
இப்புத்தகம் ஏலுகிறது.
Comments