செல்வா இந்த பெயர் எப்போதும் நான் ஒற்றையாய் அறிந்ததில்லை.. அடைமொழி போலவும் இனிஷியல் போலவும் எப்போதும் SFI செல்வாதான். 90களின் இறுதியில் என நான் நினைக்கிறேன். ஒரு படம். மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என போலீஸ் லத்தியால் விளையாடி அவர்களை வேனில் தூக்கி போடும் ஒரு போட்டோ. வேறெங்கு தீக்கதிரில் தான். அப்படித்தான் எனக்கு செல்வா அறிமுகம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் போராடி மண்டை ஒடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் செல்வா என்ற செய்தி. மீண்டும் தீக்கதிரில்தான். இப்படியாக எப்போதும் களத்தில் நிற்கும் ஒரு தோழர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்றால், எப்படி இருக்கும் என்ற திரில் ஒரு பக்கம், ரமேஷ்பாபு என்னும் மூத்த SFI தோழரின் "பிறிதொரு பொழுதில்" என புத்தகம் வாசித்த பரவசம் ஒரு பக்கம் என உடனே சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன், “எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க" புத்தகம். வாசகசாலை வெளியீடு. மெரினா எழுச்சி என்னும் சிறு பிரசுரத்திற்குப் பின் இப்புத்தகம்.
நிச்சயமாக சொல்வேன், களத்தில் நிற்பது மட்டுமல்லாது தீராத வாசிப்பும் ஒரு போராளிக்கு தேவை. இப்புத்தகத்தில் சோவியத் புரட்சி, மெரினா எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை என்னும் தலைப்புகளில் கீழ் உள்ள பக்கங்களில் உள்ள மொழியில் செல்வாவின் வாசிப்பு தெரிகிறது. தோழர் ரமேஷ் பாபு தனது புத்தகத்தில் ஒரு பிளாட்பார மனிதரிடம் மிகவும் அன்போடு பேசுவார், இதில் செல்வா ஜல்லிகட்டு போராட்டத்தின் கடைசி பக்கங்கள் போலீசாரின் ரத்தத்தால் எழுதப்பட அதில் சிக்கிய அப்பாவிகளோடு உரையாடுகிறார். தோழர் சங்கரய்யா மற்றும் காஷ்மீர் தோழர் தாரிகாமியோடும் உடனான பயணத்தில் செல்வா நம்மையும் காலம் தாழ்த்தி் அழைத்துச் செல்கிறார். எனக்குப் பிடித்த கட்டுரையாக, போராட புதிய வழிகள் மற்றும் இருவர் ஆவணப்படம் குறித்த ஒன்றும், கையூர் பயணக் கட்டுரை ஆகியவை.
இன்னும் சொல்லலாம், ஆனாலும் சுருக்கமாக... போராளிகள் சமூக ஆர்வலர்கள், குறிப்பாக SFI & DYFIதோழர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
என் தந்தையிடம் படிக்க கொடுத்தபோது சொன்னேன், "அப்பா, செல்வா ஒரு புக் எழுதியிருக்காரு.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு". ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு அப்பா என்னிடம் சொன்னார், “செல்வா எல்லாம் சொத்து.. என்ன அனுபவங்கள்ல.. நல்லாவும் எழுதியிருக்காரு...”.
Comments