சில நூல்களுக்கு அதன் ஆசிரியர் பெயர் ஒன்றே போதும், அந்நூலினை கையில் எடுப்பதற்கு. என்னை பொறுத்தவரையில் அப்படியான பெயர் தியடோர் பாஸ்கரன் என்பது. அதிலும் அவர் சினிமாவைப் பற்றி எழுதுகிறார் என்றால் எனக்கு ஏதும் தயக்கம் இருப்பதில்லை. அப்படியான ஒரு நூல் தான் நான் சமீபத்தில் வாசித்த சினிமா கொட்டகை.
சினிமா என்னும் கலை தமிழகத்தில் வந்த புதிதில் அக்கலை பெற்ற வரவேற்பு வியக்கத்தக்கது. மௌன மொழியில் குறும்படங்களாகவே நிறைய வந்துள்ளதாகவும், அவைகளுள் சிலவை பற்றி மட்டுமே குறிப்புகள் கிடைத்துள்ளதாகவும் என்பதான பல புதிய செய்திகள். வெறும் மௌனப் படங்களை பற்றி மட்டும் பேசாமல், திரைக்கலை நமது சமூகத்தின் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், தேவதாசியரை விடுவித்த செய்தி குறித்தும் நிறைய நிறைய தகவல்கள்.
யமுனா ராஜேந்திரன் அவர்களோடு தியடோர் பாஸ்கரன் நடத்தும் உரையாடல் பகுதி மிக நன்றாக வந்திருக்கிறது. சினிமா என்னும் கலை வரவு குறித்த அரசியல் வாதிகள் நிலைபாட்டில், காந்தி மற்றும் ராஜாஜி அவர்கள் எதிர்நிலைப்பாட்டை எடுக்க, மாமேதை லெனின் அவர்களோ இக்கலை மிக முக்கியமானது, இதை வலுப்படுத்த வேண்டும் என சொல்லியிருப்பதும் புத்தகத்தில் வருகிறது.
சினிமா என்னும் கலை வடிவத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். அது சரி, சினிமா பிடிக்காத தமிழ் மனம் இருக்கிறதா என்ன? காலச்சுவடு வெளியீடு, தியடோர் பாஸ்கரனின் "சினிமா கொட்டகை" ஒரு சுவாரசியமான புத்தகம்.
Comments