அப்பா, இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன். வேற
என்ன, நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான்.
ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு
நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம்
மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே.
பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா
என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள்.
நமக்கும் ஏக குஷி.
அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு
ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும்
முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை
தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு.
பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும்
தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக்கு கதை சொல்வது என்பது எளிதல்ல. கதை சொல்ல தொடங்கும்
நொடியிலேயே அசரணும், இல்லையின்னா அந்த கதை சோபிக்காது. பழுப்பு நிறத்தில குண்டா இருந்த
பேன், கண்ணு ரெண்டும் பெரிசு பெரிசா இருந்த பூதம் போன்ற விவரணைகள் இல்லாம, பேன் ஒன்னு,
ஒரு பூதம் என்று தொடங்குவதிலேயே இந்த கதை தொகுப்பு சுவாரசியமாகிறது என நினைக்கிறேன்.
அது மட்டுமில்லாம, இதை எல்லாம் சொன்னா இந்த காலத்து குழந்தைங்க நம்புவாங்களோ என்ற தயக்கமில்லாம,
பேன் மாங்காவை தூக்கிட்டு போச்சு, நரி ஓணாணோடு சண்டை போட்டுச்சு, ஒரு ஜான் மனுஷனோட
ஒரு காதுல நரி, மறு காதுல சிங்கம்ன்னு கதைகள்
ரொம்ப சுவாரசியம். எல்கேஜி படிக்கிற கீர்த்தனாவும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபியும்
அப்படியே ரசித்து நின்றார்கள். என்னப்பா இப்படி ரீல் விடுறியே என்கிற பேச்சே கிடையாது.
உண்மையிலேயே இந்த கதை தொகுப்பின் வெற்றியாக நான் காண்பது குழந்தைகளுடனான ஓர் உரையாடலை
நிகழ்த்துகிற அந்த தமிழ் எளிமை. இந்த எளிதான மொழி நடைதான் ஒரு குழந்தை புத்தகத்திற்கு
அவசியம் கை கூட வேண்டியது. அப்புறம் என்னங்க, நீதிமணி அவர்களின் ”பூதம் தூக்கிட்டுப்
போன தங்கச்சி” தொகுப்பில இருக்கிற எல்லா கதைகளும் சூப்பரு ரகம்.
பாரதி புத்தகாலயம் வழவழ பேப்பரில நிறைய வண்ணங்களோடு
கேலிசித்திரம் எல்லாம் வரைஞ்சு புத்தகத்தின் சுவாரசியத்தை மேலும் கூட்டியிருக்காங்க.
விலை 95/- என்றாலும் 64 பக்க வண்ண வழவழ தாள்களுக்கு விலை நியாயமே என்றது. இதோ புதுச்சேரியில்
இருக்கிற என் தோழர்கள் படிக்கும் 5 பள்ளிகளில் இந்த புத்தகம் அவர்கள் நூலகத்தில் இடம்
பெற்றுவிட்டது.
பாரதி புத்தகாலயத்தாரே, நீதிமணி அவர்களே உங்களுடைய
காம்பினேஷனில் அடுத்த புத்தகம் எப்போது என நானும், அபியும், கீர்த்தனாவும் காத்திருக்கிறோம்.
சீக்கிரம் ப்ளீஸ்.
Comments