சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு. இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள். அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும். அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார். குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும்.
அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர். அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள்: - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும், உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினியாலும், வழி தெரியாமல் ரயில் தண்டவாளங்கள் அடியில் நசுங்கியும் என அந்த மாதிரி மரணங்கள் தாம் எத்தனை. வீட்டில் உட்கார்ந்த மட்டில் உணவு கிடைக்கும் பெருங்கூட்டம் இருக்க, பசியால் பட்டினியால் உணவின்றி மரணித்த குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என ஒரு மனித கூட்டமும் வாழ்கிற அதே கணத்தில் வாழ்ந்த நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் அவை கொலைகளே, மரணங்கள் அல்ல. ஏதோ ஒரு வகையில் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் இருந்த நாமும் இக்கொலைகளின் பங்குதாரர்களே!!
மக்களே, அவசியம் வாசிக்கவும் நமது குழந்தைகளிடையே வாசிக்க கொடுத்து விவாதிக்கவும் வேண்டுகிறேன். எளிய ஆங்கிலத்தில் அழகிய வடிவமைப்பில் அவ்வளவு ஒன்றும் பெரிய விலையில் இல்லாத ஒரு தரமான புத்தகம்.
Comments