செல்வா இந்த பெயர் எப்போதும் நான் ஒற்றையாய் அறிந்ததில்லை.. அடைமொழி போலவும் இனிஷியல் போலவும் எப்போதும் SFI செல்வாதான். 90களின் இறுதியில் என நான் நினைக்கிறேன். ஒரு படம். மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என போலீஸ் லத்தியால் விளையாடி அவர்களை வேனில் தூக்கி போடும் ஒரு போட்டோ. வேறெங்கு தீக்கதிரில் தான். அப்படித்தான் எனக்கு செல்வா அறிமுகம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் போராடி மண்டை ஒடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் செல்வா என்ற செய்தி. மீண்டும் தீக்கதிரில்தான ். இப்படியாக எப்போதும் களத்தில் நிற்கும் ஒரு தோழர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்றால், எப்படி இருக்கும் என்ற திரில் ஒரு பக்கம், ரமேஷ்பாபு என்னும் மூத்த SFI தோழரின் "பிறிதொரு பொழுதில்" என புத்தகம் வாசித்த பரவசம் ஒரு பக்கம் என உடனே சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன், “எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க" புத்தகம். வாசகசாலை வெளியீடு. மெரினா எழுச்சி என்னும் சிறு பிரசுரத்திற்குப் பின் இப்புத்தகம். நிச்சயமாக சொல்வேன், களத்தில் நிற்பது மட்டுமல்லாது தீராத வாசிப்பும் ஒரு போராளிக்கு தேவை