குரங்கு பெடல் – இரண்டு நாட்கள் முன்பு பார்த்த படம். முதலிலேயே சொல்லிடறேன். அந்த லாங் ஷாட், டிரோன் ஷாட் என்பதாக தொடங்கி விஎபெக்ஸ் சரியில்ல என்பது மாதிரியான சினிமா மொழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் எல்லாம் ஒரு சராசரி தமிழன், சினிமாவும் முக்கியமான உலகம் என்று நம்புகிறேன். அதன் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போகிறேன், அவ்வளவே.
Disclaimer எல்லாம் முடிஞ்சு, இனி விஷயத்துக்கு வருவோமா.. உண்மையிலேயே என்னை மாதிரி 80களின் மக்களுக்கு இன்ப நினைவலைகளை இனிமையாய் மீட்டு கொடுக்கும், எனக்குக் கொடுத்த திரைப்படம் தான் குரங்கு பெடல். நான் ஒன்னும் கிராமத்தில் வளர்ந்தவன் இல்லை. ஆனால் காஞ்சிபுரம் மாதிரியான ஒரு டவுனில் எங்களுக்கு ஒரு குசால் சா இருந்தார், அவர் ஹவர் சைக்கிள் வச்சிருந்தார், நாங்களும் ஓட்டி இருக்கோம், பந்தயம் வைச்சிருக்கோம், விழுந்து முட்டி எல்லாம் பேத்து இருக்கோம், பார்த்துக்குங்க.
சைக்கிள்… அதுதாங்க வாகனம். நம்ம மனசறிந்து நடக்கும் ஒரே வாகனம் அதுவே. இன்னைக்கு வரை அரை டிரவுசரில் இருக்கும் குசால் சா அப்போது வகை வகையாய் சைக்கிள் வைத்திருந்தார். வேகவதி பாலத்தின் கரையோரத்தில் (நான் கல்லூரி முடிக்கிற வரைக்கும் கூட அந்த பாலம் காஞ்சிபுரம் கூவமாகவே இருந்தது, இப்போ இல்ல) அவரது கடையில் ரிப்பேருக்கு வருகிற ஏராளமான சைக்கிள்களுக்கு நடுவே ஒரு ஓரமாக சின்னது பெரிதுமாக வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஹவர் சைக்கிள்கள். குட்டி பசங்களுக்கு கூட சைக்கிள் இருக்கும் அவரிடத்தில். ஸ்டெண்டே இருக்காது, வீல் பம்பர் இருக்காது, மணி இருக்காது, அது ஒரு எலும்புகூடு அவ்வளவே. ஆனா பாருங்க, அதுதான் கிடைக்கவே கிடைக்காது. கொஞ்சம் பெரிய பசங்களுக்கு, ஸ்டேண்ட் இருக்கும், கூடவே மனுசன் அவங்களுக்கு மட்டும் கறாராக டைம் பார்ப்பார், ஆனால் காசில் எல்லாம் பெரிசாக கண்டுக்க மாட்டார். எப்படா கடை திறப்பான் மனுசன், பெருக்கி முடிப்பான், சைக்கிள் டையரியை எடுப்பான் என தவம் கிடப்போம். ஒரு வழியாய் எடுத்து ஓட்ட ஓட்ட அவ்வளவு வேகமாக நேரம் ஓட்டமா ஓடி நம்மளை கஷ்டப்படுத்தும். ஆனாலும் என்ன, அன்றைக்கு ஷோ அவ்வளவே. இந்த மாதிரி காத்திருத்தல், சின்ன சின்ன ஏமாற்றம் என்ற உணர்வுநிலை அனுபவித்ததால் தானே தானோ என்னமோ இந்த காலத்து பூமர் பயலுக விட நான் மன உறுதியாய் இருக்கின்றேன்.
6ஆம் கிளாஸ் ஆண்டுத்தேர்வு லீவு நாட்களில் காஞ்சிபுரம் முனிசிபாலிட்டியில் எங்கள் வீட்டுக்கு எதிரே தண்ணீர் திறந்துவிடும் அன்பு என்பவரே எனக்கு ஆசான். பின்னாடி புடிச்ச படியே கூடவே ஓடிவருவார். அந்த கல்லும் மண்ணும், புல்லுமாக, கூடவே பய புள்ளைக அசிங்கத்தோடும் ஓட்டி பழகிய நாட்களை குரங்கு பெடல் எடுத்த மனுசன் மீண்டும் நினைவு படுத்திட்டாரு. அதற்கே வாழ்த்துகள் புடியுங்க. அப்படியாக நாமும் கத்துகிட்டோம். அன்னைக்கு புடிச்ச கிரகம், இப்ப வரைக்கும் பசையாய் ஒட்டி இருக்கு. சைக்கிள் கத்துக்கிட்ட பின்னாடி இறங்கவே மனசு வராது, என்னமோ உலகத்தையே சுத்தி வருகிற மாதிரி நினைப்பு, ரஜினி நடிச்ச படிக்காதவன் படத்தில சொல்வாரு இல்ல, லஷ்மி சொன்னா கேளு என்பது மாதிரியே நானும் சைக்கிளோட பேசுவேன்.
அப்போ அட்லாஸ் தான் பேமஸ், இருந்தாலும் ஒலியும் ஒளியும் இடையே ஹெர்குலிஸ் காப்டன், டிரிங், டிரிங் என ஒரு விளம்பரம் வரும். எப்படா நமக்கும் ஒரு சைக்கிள் என்ற ஏக்கமே அநேகமாக எனக்கு இதுவரைக்கும் இருந்த பெரும் ஏக்கம் என நினைக்கிறேன். ஆனால் அதிக நாட்கள் இல்ல. எங்க அப்பா லோன் போட்டு 7ஆம் கிளாஸ் இறுதித் தேர்வில் ஆமாங்க அதே செர்ரி பழ சிவப்பு என்பாங்க இல்ல அந்த கலர்கேப்டன் சைக்கிள் புதிதாக வாங்கி கொடுக்க, அன்னைக்கு காஞ்சிபுரம் நகரெங்கும் இறக்க கட்டி பறக்க ஆரம்பித்தது, காலேஜ் இறுதி வரைக்கும் சைக்கிள் தாங்க வாகனம். அப்பா மீண்டும் லோன் போட்டு ஒரு கைனடிங் ஹோண்டா வாங்க, அப்பா சைக்கிள் என் வசமாகியது. என்னவெல்லாம் செய்து இருக்கேன், இரண்டு கை விட்டு ஓட்டி இருக்கேன், வாங்க அம்மா சும்மா வாங்க என தைரியம் சொல்லி முதன் முதலா டபுள்ஸ் ஏத்தி உணவு இடைவேளை முடிந்து ஆபீஸ் கொண்டு விடுகிறேன் என சொல்லி பெருமையாய் ஏறி வந்த அம்மாவை ஒரு இறக்கத்தில் கீழே தள்ளி இருக்கேன்.. இன்னும் என்ன என்னமோ…
காஞ்சிபுரத்தில் 80, 90 களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும். கலக்டர் ஆபீஸ் இல் இருந்து விளக்கடி கோயில் இடையே ஒரு பெரிய பள்ளத்தாக்கு போல் இருக்கும். அப்படியே இறக்கத்தில் சர் சர்ரென வேகமாக இறங்கி வர, திரும்ப புஸ் புஸ் என அந்த மேடு ஏறிய பொழுதுகள் எல்லாவற்றையும் என குரங்கு பெடல் நினைவூட்டியது. சின்ன சின்ன பொருட்களில் சின்ன சின்னதாய் ஏதோ செய்து அதிலும் பெரிய மகிழ்வினை அடைந்த ஒரு காலமும் இருக்கிறது என பனையோலை காத்தாடி, நுங்கு வண்டி, தீப்பட்டி போன் என அருமையாய் காட்சிப்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.
ஈரோட்டில் ஒரு மூன்றரை வருடம் என் வாழ்வில் மிக முக்கியமான வாழ்வினை வாழ்ந்திருக்கிறேன் என்பதால் கேட்கிறேன், அந்த ஆறு பவானி ஆறுதானே..?! அந்த பாலம் குமாரபாளையம் பாலமோ?!! (இல்ல என்பதாகவே நினைக்கிறேன்).
சரி போதும் என நினைக்கிறேன், இதுக்கு மேல படிக்கிற பொறுமையை பலரும் இழந்துவிட்டார்கள் என புரிந்து கொண்டு முடிக்கிறேன். ஒரு டிவிஸ்ட், ஒரு உணர்வு ஏற்ற இறக்கம், ஒரு மாஸ் என எதையும் எதிர்பாராமல் ஒரு பீல் குட் படம் பார்க்கணுமா குரங்கு பெடல் பாருங்க.
2000த்திற்கு பிறகு பிறந்தவர்களா நீங்கள், கியூ, காத்து இருப்பது என எதுவும் பிடிக்காதவரா நீங்கள், நீங்களும் பாருங்க, அப்பவும் உலகம் இயங்கியது, அப்போது பிறந்த நாங்களும் ஒரு ரசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கோம், சின்ன சின்ன பரிசுக்கெல்லாம் விலை பாராமால் மகிழ்ந்து இருக்கோம், சின்ன சின்ன முரணில் கூட முறித்து கொள்ளாமல் அட போப்பா என மீண்டும் இணைந்து என ஒரு நல்ல வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறோம் என நீங்களும் தெரிந்து கொள்ள அவசியம் குரங்கு பெடல் பாருங்கள்.