Skip to main content

Posts

Showing posts from March, 2011

சிவந்து விடிகிறது மார்ச் எட்டு !

ஓ எங்கள் கிளாரா கடந்த நூற்றாண்டின் கனல் பொறியே காலகாலத்திற்குமான அணையாத தீபமே ஓர் எண்ணத்தின் விதை ஊன்றப்பட்டதில் உலகு கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகளிர் தினத்தை உரிமைகளின் ஆவேச உருவமே உணர்வுகளின் தூரிகைத் தீற்றலே நூற்றாண்டு நிறைவின் சிலிர்ப்பில் விடிகிறது இந்த மார்ச் எட்டு... உழைக்கும் பெண்களின் ஓங்கிய குரலே உணர்ச்சிகளின் காவியப் பெருக்கே கோபன்ஹெகனில் நடந்த கூட்டத்திற்கு வயது நூற்றியொன்று தீப் பற்றி எரிந்த டிரயாங்கில் தொழிற்சாலையின் வெளியேற இயலாத சுவர்களுக்குள் இரும்புக் கதவுகளுக்குள் தகர்த்தெறிய முடியாதுபோன சாளரங்களுக்குள் சிக்கித் திணறிய பெண் தொழிலாளரிடமிருந்து குமுறிப் புறப்பட்ட கதறல்களை- நெருப்பில் வீழ்ந்து கொதித்த கண்ணீர்த் துளிகளை - அவற்றிலிருந்து சினந்து கிளர்ந்த பதாகைகளில் ஏந்தினீர்கள் சமத்துவ வேட்கையின் நெடிய மூச்சே பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமே எதிரொலிக்கிறது பெண்களின் எழுச்சி கீதம் இப்போது மேற்காசியாவிலும்.... சுதந்திரத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் நீதியின் பெயரால் நம்பிக்கை வானத்துத் தாரகையே கரை கடந்து சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளமே ஓ எங்கள் கிளாரா ஜெட்கின்