நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில்
நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன்
வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள்
எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்பாக பார்க்கையில் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது.
இந்த நூலில் சமூகத்தின் இருண்ட வெளி மக்கள் மீதான கனிவும், அவர்களின் தேவை குறித்த
புரிதலும், அவர்களோடு உறவாட, இணைந்து செயல்பட நினைக்கும் பரிவும், வரலாற்றை மறுவாசிப்பு
செய்தலும் என எல்லாம் இருக்கிறது.
”மனிதர்களை உற்றுப் பார்ப்போம்”- இந்த நூலில் ஆக
சிறந்தது என நிச்சயமாய் சொல்லலாம். மேம்பாலத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர் ஒருவரோடு
ரமேஷ் பாபு நிகழ்த்திய உரையாடல். நான் அன்றாடம் சந்திக்கும்(கண்ணுறுகிறோமா?!) சாதாரணர்கள்
பின்னான வாழ்க்கை குறித்த ரமேஷ் பாபுவின் பார்வை நிச்சயமாய் நாமும் கை கொள்ள வேண்டியது.
கணப்பொழுதுவில் இம்முதியவர்களை நாமும் கடந்து வருகிறோம், பல சமயங்களில் நம் சிந்தனையில்
அவர்கள் பதிவதுமில்லை. மேம்பால கைப்பிடிச் சுவர்களும் இவர்களும் ஒன்றாகவே காலப்போக்கில்
நமக்கு படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரோடு அருகில் உட்கார்ந்து அவரோடு ஒரு உரையாடலை
நிகழ்த்திய தன்மை உண்மையிலேயே நெகிழ்வானது. ஒரு “தோழருக்கு” உரியது.
வளர்ச்சி, வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லாடலில் போட்டியினை
உருவாக்கி பலரை பின்னுக்கு தள்ளி தான் முன்னேறும் சூதில் பலியாடுகள் கருணையற்று வெட்டப்படுவது
தெருக்கள் தோறும் நிகழ்கிறது. இங்கேதான் ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. புரட்சி நடந்த
பத்தாண்டுகளில் கல்லாமையை இல்லாமல் செய்த கியூபாவில் அரிசி குக்கர் வந்தது கிட்டத்தட்ட
25 ஆண்டுகள் கழித்து. அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணம் என்றாலும்,
எதற்கு முக்கியத்துவம் என்பதில் கியூபாவின் தோழர் பிடல் காஸ்ட்ரோவிற்கு இருந்த தெளிவு
வியக்கத்தக்கது. ஆம், வளர்ச்சி என்ற பெயரில் மொபைல்கள் கையருகில் உலகை கொண்டு வந்திருந்தாலும்,
அதில் எப்படி அடுத்தவரை தொடர்பு கொள்வது எனத் தெரியாமல் யாருடைய உதவியையாவது தேடி அலையும்
எளியர் எத்தனை பேர் நம் நாட்டில்?
ரமேஷ் பாபுவின் புனைவுகள் ரொம்ப சுவாரசியமானது.
ராஜ்ஜியங்களுக்கு பின்னேயும் மனிதர்கள், அரசர்களும் மனிதர்களே என்ற புரிதலில் இரண்டு
புனைவுகள். ரமேஷ் பாபுவின் வாசிப்பு நிச்சயம் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் இந்த
புனைவுகள் சாத்தியமில்லை. இன்னும் பல புனைவுகள் எழுத வேண்டும்.
சென்னையின் அசல் வீதிகளில் அவரது பயணக் குறிப்புகள்
நான் ஏற்கெனவே ரசித்த ஒன்று. புலம் பெயர்ந்தவர்களது பிரச்சனைகள், அவர்களோடு மொழி வேற்றுமை
கடந்து இணைந்து நடத்திய போராட்டங்கள், இன்குலாப் அவர்களோடு நடத்திய உரையாடல் என இவை
சிறப்பாக வந்திருக்கின்றன.
இறுதியாய், எனக்குப் பிடித்த ஒன்று. அவரது மொழி
வளம். தமிழ் மொழி வளம். எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு
மொழி மீதான காதல் என்பது பொதுவெளியில் அவ்வளவாக வெளிப்படுவதில்லையோ என்று. திராவிட
கட்சிகளின் தமிழை, நெல்லை கண்ணனின் கம்பனை நாம் எவ்வாறாக பயன்படுத்துகிறோம் என்ற விமர்சனம்
எப்போதும் என்னுள் உண்டு. தோழர் இந்த நூலில் அதை தகர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நக்கீரனின் ”காடோடி” தமிழ் மிக சிறப்பான ஒன்று. இங்கே தோழர் ரமேஷின் தமிழ் நடையும்
மிக சிறப்பாகவே உள்ளது.
Comments