Skip to main content

பணிக்கரின் பேத்தி - ஷர்மிளா சய்யித் --- நூல் அறிமுகம்

வாழ்வாங்கு வாழ்தல் என்று சொல்வார்கள். அது சிலருக்குத் தான் அமையும் என்பார்கள். வாழ்வாங்கு வாழ்தல் என்பது குறித்து பலருக்கும் பல புரிதல் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். நான் அப்படி வாழ்வாங்கு வாழ்ந்த (என் புரிதலில்) ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து ரசித்தேன். ஷர்மிளா சய்யித் அவர்களின் "பணிக்கரின் பேத்தி" படித்ததை தான் சொல்கிறேன்.


பெரு தனக்காரரின் பரம்பரையில் பிறந்து பின் எல்லாம் இழந்து இளம் வயதிலேயே வறுமை பற்ற, பின் தன் அயராது உழைப்பினால் ஓரளவிற்கு ஒரு நிலைக்கு வந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தியின் வாழ்வே பணிக்கரின் பேத்தி. விடாத உழைப்பு, அதற்கான ஒரு பெரு முயற்சி அவை நல்கும் தளராத நம்பிக்கை என இனிதாய் கடக்கிறது வாழ்க்கை. உழைப்பது என்பது நேர்ந்து விட்ட ஒன்றாக முதலில் அமைந்து பின் அது ரசிக்கத்தக்க ஒன்றாக மாறி ஒரு கட்டத்தில் போதையாகவே மாறி போகிறது போல பலருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அவர்கள் மகன்கள் வாழ்வில் செட்டில் ஆகி விட்ட பிறகும் இன்னும் வீட்டுக்கு வீடு பால் ஊற்றும் தொழிலை விடவில்லை. கேட்டால், இது தொழிலப்பா என்பார். இது தொழிலா, ஒரு போதையா அல்லது உழைப்பின் மீது உள்ள பக்தியா என்ன என்பது எனக்குப் புரிபடவில்லை. 

சகர்வான் என்னும் அந்த பணிக்கரின் பேத்தி இள வயதில் தந்தையை தாயை இழக்கிறாள், கட்டிய கணவன் பிரிந்து செல்கிறாள், எஞ்சி இருந்தது அவள் தாத்தனின் பெருமை மட்டுமே. தாத்தனின் பெருமையிலிருந்து அவள் உழைப்பை காண்கிறாள். உழைத்த வண்ணம் இருக்கிறாள். ஒரு பெரு வாழ்வு வாழ்ந்து மறைந்து போகிறாள், சகர்வான். ஆம், ஷர்மிளா செய்யித் நூலின் பின் அட்டையில் சொல்வது போல், தாத்தன் பணிக்கர் யானையை அடக்கினான், பணிக்கரின் பேத்தி உழைப்பு, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையை யானையாக பார்க்கிறாள்.

காலச்சுவடு வெளியீடு.. சிறப்பாக வந்திருக்கிறது.

Comments