அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் காலந்தொட்டே அங்கொன்றும் இங்கொன்றுமாக
எழுந்து வருகின்றன. அவ்வாறான குரல்கள் ஏதோ ஒரு வகையில் கொடூர ஒடுக்குதலை
சந்திக்கின்றன. கொடூரமான உயிர் பலியாகவுமே பல சமயங்களில் இருக்கின்றன.
லாபம் என்னும் வார்த்தை கொண்டு மக்களின் இயல்பான அடிப்படை தேர்வுகளான உடை
உடுத்துதல், உணவு உள்ளிட்ட பலவற்றை நாகரிகம் என்ற வேறொரு சொல்லில் வீழ்த்தி
அவர்களை அதே தேர்வுகளில் இருந்து விடுவிப்பதாக சொல்லி பிறிதொன்றில் அடிமை
செய்வது என்பது தொடர்கதையாகிறது. அதோடு மட்டுமல்ல, நிலங்களின்
இயற்கையான வளத்தை பாழாக்கி அந்நிலத்தை தனது லாப வேட்கைக்கு அடிமை
செய்வதும் இயல்பாகிறது. எல்லாம் உங்கள் நலத்திற்காகவே, வளமான வாழ்விற்காகவே
என தேன் வார்த்தைகள் தூவி மாய அடிமை சங்கிலியை வீசி அவர்களை கவ்வுகிறது,
முதலாளித்துவம். இவ்வாறான கதைகளும், அதிகாரத்திற்கு எதிராக மிக
சன்னமாகவேனும் குரல்கள் எழுப்பிய மாவீரர்களின் கதை தொகுப்புமே இந்நூல்.
இன்றைக்கு அந்த நாள், நாளை அந்த நாள் என்பதான நாட்களின் கொண்டாட்டம் பின்னே உள்ள உண்மைகளையும், அந்த நாள், இந்த நாள் என்றில்லாது வருடம் முழுக்கே உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு குரல் அதிகாரத்திற்காக எழுந்திருக்கிறது, எங்கோ ஒரு போராட்டம் நடந்தே இருக்கிறது என்பதான ஒரு காலண்டரே இந்த புத்தகம். பெரும்பாலும் லத்தீன் அமெரிக்காவின் வரலாறாக இருந்தாலும், மகாத்மா காந்தி, வியட்நாம் தோழர் ஹோ சி மின் என்பதான பலரும் வருகின்றனர். ஹிரோஷிமா, நாகசாகி தரைமட்டமாக்கி பல தலைமுறைகளுக்கும் அணுஆயுதத்தின் கோர முகத்தை காட்டிய பின்னும், அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸின் மிகவும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஒருவர் பல வருடங்கள் கழித்து "அணு ஆயுத விளைவு என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஜப்பானியர்கள் சும்மா பொய் சொல்லுகிறார்கள்" என அமெரிக்காவிற்கு நற்சான்றிதழ் கொடுத்த ஊடக சித்துவிளையாட்டும் பதிவாகி இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை "இப்படி" என சொல்வது கடினமானது. ஏனென்றால், ஒரு நாளுக்கே ஒரு பக்கம். அநேகமாக அடுத்த நாளைக்கும் இந்த நாளைக்கும் சம்பந்தமே இல்லாததாக இருக்கிறது. சில சின்ன கதைகளும் சுவாரசியமான கவிதைகளும் இருக்கின்றன. தொடர்ச்சியாக எந்த தடையும் இல்லாமல் தடதடத்து நகர்கிறது இப்புத்தகம். சிந்தன் புக்ஸ் நிறுவனமும் பாராட்டுக்குரியது. அவ்வளவாக glaring ஆக தவறுகள் தெரியவில்லை, சிற்சில எழுத்துப் பிழைகள் மட்டுமே. வாழ்த்துக்கள் சிந்தன் புக்ஸ். சிந்தன் புக்
Comments