2018ஆம்த ஆண்டின் சிறப்பு கவனம் பெற்ற சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்த தோழரது
அடுத்த தொகுப்பு அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்திருக்கிறது. கடந்த
தொகுப்பு ஒரு கலவர சூழலில் முளைத்திடும் கதைக் களங்களாகவே இருந்தன. மூடுண்ட
சமூகமான சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை, அதிர வைக்கும் உண்மைகளை
எளிய வார்த்தைகளில் இவரது கதைகள் வாசகருக்கு கடத்தி நின்றன. தாழிடப்பட்ட
கதவுகள் தொகுப்பினை படித்த எவருடைய மனநிலையும் கொதித்தே போயிருக்கும். அந்த தொகுப்பினை தொடர்ந்து இந்த தொகுப்பு.
முன்னுரையில் ராஜூ முருகன் சொல்வதைப் போல இவரது கதை மாந்தர்கள் அனைவருமே
எளியவர்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் துன்பங்கள், அவஸ்தைகள், சாதிய
முரண்கள், முகம் அறியா நேச கரங்கள் என எல்லாமும் கதை களமாக்கியுள்ளார்
கரீம் இயல்பாக.
”சிதார் மரங்களில்..” முத்தாய்ப்பான ஒன்று.
காஷ்மீரத்து சோபியன் பகுதியில் 8 வயது ஆசீபாவின் படுபாதகமான படுகொலை அவளது
குதிரையின் வாய்மொழியாக. அடுத்து ”பூ மயில்” ஒரு திரைப்படம் போல அழகாய்
விரிகிறது, அதிர்ச்சியில் முடிகிறது. ஒரு கணம் உடல் சில்லிட்டு நிற்கிறது.
என்ன நடந்தது என்ற விவரணை இல்லை, ஆனால் காட்சிப்படுத்தும் அந்த கடைசி
நிகழ்வு கனத்த உண்மையை அதிர்ச்சியை அழகாய் நம்முள் கடத்துகிறது. ”நிலம்”
முக்கியமான ஒன்று. கரீமின் சாதுர்யம் கனமான விஷயங்களை, சமூக அவலங்களை மிக
எளிதாய் நுட்பமாய் நமக்கு இயல்பாய் சொல்கிறார். நாம் அயர்ந்து போகிறோம்.
இத்தொகுப்பினுள்ள 9 கதைகளில் 4ல் பெண்கள் கதை நாயகர்கள். ”அகழியாகும்
கோடுகள்” – அதிகார வேட்கையினால் விளையுற்ற வேற்றுமைகள் தாண்டி மனிதம்
நேசக்கரம் நீட்ட எயலும் ஒரு விழைவு.
பாஸ்கர் சக்தி எனக்குப்
பிடித்த சிறுகதை எழுத்தாளர். எளிய மனிதர்கள் அவர்கள் வாழ்வில் நடக்கும்
எளிய விஷயங்களை சின்ன சின்ன வார்த்தைகளால் மிக இயல்பாக நேசமாக தோள் தட்டி
ஒருவர் சொல்வது போல சொல்லி செல்வார். அவரது சாயல் படிந்த கதைகளாக நான்
“சுருட்டு நாணி” மற்றும் “வெக்கை”யையும் சொல்வேன். எனக்கு மிகவும்
பிடித்தவை இந்த தொகுப்பில் இந்த இரு கதைகள் தான். ”அகம்” மற்றும் “இருள்”
சொல்லும் யதார்த்தங்கள் மிரள கூடியவை, பேச வேண்டியவை, பேசி களைய வேண்டியவை.
இத்தொகுப்பினை கொண்டு வந்த பாரதி புத்தகாலயத்தாருக்கு மிகுந்த
நன்றியும், சில கவன ஈர்ப்புகளும். இன்னும் கவனம் எடுத்து எழுத்துப் பிழை
களையவும். வார்த்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளியும், பக்கங்களில் இன்னும்
வெற்றிடங்கள் கூடுதலாகவும் இருந்திடல் நலம்.
Comments