Skip to main content

சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் - நூல் அறிமுகம்


"மனிதக் கழிவு அகற்றுவோரைப் பெருமளவில் ரயில்வேத் துறை பணியமர்த்துகிறது. அதற்கு பாவ விமோசனமாக, ரயில்வேயில் சமையலுக்கும் உணவு பரிமாறும் வேலைகளுக்கும் அவர்களைப் பணியமர்த்த வேண்டும். அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இந்த வேலைகள் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டிருந்தால் இவர்களைத்தான் அந்த வேலைகளுக்கு எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஒப்பந்தத்திலேயே சேர்க்க வேண்டும்”.
---ஒரு நிமிஷம் இவ்வாசகங்களை கண் மூடி அசை போட்டு பாருங்கள். கழிவு அகற்றுவோரை உணவுப் பரிமாறும் வேலைகளை செய்ய சொல்வது என்பதென்பது எவ்வளவு புரட்சிகரமானது. தகழி சிவசங்கரன் பிள்ளை தோட்டியின் மகன் நாவலில் புறவாயில் வெளியே நின்று சாப்பாட்டை எட்டி கேட்ச் பிடிக்கும் ஒரு தோட்டி (நாவலுக்காக இந்த பெயரை பயன்படுத்துகிறேன்) வீட்டினுள் வந்து சமைத்து அந்த உணவினை அந்த வீட்டு மக்களுக்கு உணவு பரிமாறுகிறார் என்றால்... இதுதான் affirmative action. ஒரு வேளை இவ்வாசகங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அரசு ஏற்றுக் கொண்டால்...? ஆனால், நடந்தது என்ன...? இவ்வாசகங்கள் பரிந்துரைகள் ஆகின, சட்ட முன்வடிவில் இடம் பெற்றிருந்தும் இருந்தன. ஆனால் சட்டமாகும் போது இல்லை... ஆம், அமரர் தோழர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இந்த பரிந்துரைகளை "மனிதக் கழிவு அகற்றுவோரை பணிக்கு அமர்த்துதலுக்கான தடை மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கான சட்டம் -2013 வரைவில் செய்திருந்தார். அரசு இதை தவிர்த்தது.

பி.எஸ்.கிருஷ்ணன் இதோடு மட்டும் நிற்கவில்லை. மலம் அள்ளும் தொழில் செய்வோரை மறுவாழ்விற்காக நகரத்தில் பால் பூத்துகளில் பணி அமர்த்த வேண்டும் எனக் கூட சொல்கிறார். நமக்கு இது புரட்சிகர சிந்தனையாகிறது. ஆனால், பி.எஸ். கிருஷ்ணன் அவ்வாறெல்லாம் ஒரு coinageசெய்து அரசை சங்கடப்படுத்தவில்லை. (அரசுக்கு புரட்சி என்ற வார்த்தையே சங்கடம் தானே!). அவர் இப்படி சொல்கிறார், "இது இட ஒதுக்கீடு அல்ல. தீண்டாமையை சமூகத்தில் அதன் கட்டித்தட்டிப் போன மட்டத்திலிருந்தும், நாம் இவ்வாறு செய்துவிட்டோமே என்ற வருத்தத்தை சமூகத்தில் கிளறிவிட்டும் தீண்டாமையை ஒழிப்பதன் பகுதி இது.”.

நூல் முழுக்க ஒரு விஷயம் திரும்ப திரும்ப வருகிறது, அது அவ்விஷயத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது. அது நில உரிமை. கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் திரைப்படங்களின் டிரேட்மார்க் விஷயமான வாய்ஸ் ஓவரைப் போல தோழர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இந்நூலின் அநேக இடங்களில் நில உரிமை தொடர்பாக பேசியிருக்கிறார். “பட்டியல் சாதியினர் ஒட்டுமொத்தமான முறையில் நிலம் இல்லாத நிலையில் இருப்பது என்பது அவர்கள் எதிரான தீண்டாமையோடு தொடர்புடையது. அனைத்து விதமான தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட, அவர்களுக்கு எதிரான சாதிய பாகுபாடுகளோடும் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளோடும் தொடர்பு கொண்டது அது. ஒவ்வொரு நிலமற்ற பட்டியல் சாதியினர் குடும்பத்துக்கும் நியாயமான அளவு நிலத்தைக் கொடையாக அளிப்பதும், அதற்கு பாசன வசதி அளிப்பதும், பட்டியல் சாதியினரின் நிலைமையை மேம்படுத்துவதோடும், சகஜமாக, சாதாரணமானதாக அவர்களின் வாழ்வை மாற்றுவதோடும், மனிதத் தன்மை கொண்டதாக அவர்களின் வாழ்நிலையை மாற்றுவதோடும், அவர்களுக்கு எதிரான தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் ஒழிப்பதோடும் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பது ஆகும்.” என இங்கேயும் அவர் நிலம் வழங்கு என மட்டும் சொல்லவில்லை, நிலம் வழங்கு, அவர்களது இடத்தில் வழங்கு, இல்லையென்றால் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கு, அதற்கு பாசன வசதி செய்துகொடு, அவரகள் விளை பொருளுக்கு சந்தை என எல்லா தொடர் நடவடிக்கைகளையும் சொல்கிறார். “தலித் மற்றும் தலித் அல்லாத சமூகத்தினர், குறிப்பாக நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவர்கள், மற்றும் நிலத்தைசக் கட்டுப்படுத்தும் சாதியினருக்கிடையேயான பகை முரண்பாட்டை பகுத்தறியவும், புரிந்துகொள்ளவும் கார்ல் மார்க்ஸ் பயன்படுவார். அதே போல் தலித்துகளுக்கும் மீனவர்கள், கல்லுடைப்பவர்கள் உள்ளிட்ட தலித் அல்லாத, நிலவுடைமை அல்லாத, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான நட்பு முரண்பாடுகளை வேறுபடுத்தி அறியவும் மார்க்சிய பகுப்பாய்வு உதவும்" என்கிறார். இதோடு, "நிலசீர்திருத்த சட்டங்களிலேயே முக்கியமான ஒன்று, வங்கத்தில் இருந்த இடதுசாரி அரசால் 1970களில் இயற்றப்பட்ட பர்காதாரர்களுக்கு நிரந்தர அனுபோக உரிமை வழங்கும் சட்டம்தான். அப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டு வந்து அடிப்படையான சீர்திருத்தத்துக்கு வழிவகுத்த அரசியல் தலைமை ஆளும் மேற்குவங்கத்தின் இடதுசாரி கூட்டணிக்கு இருந்தது"என்கிறார்.

இவற்றை சொல்பவர் ஒரு தொழிற்சங்கவாதியோ, கட்சி உறுப்பினரோ, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவரோ(இந்த குரூப் இங்கே ஏன் வருகிறது), போராளியோ அல்ல. ஒரு அரசாங்க அதிகாரி என்னும்போதுதான் அதற்கான முக்கியத்துவம் கூடுகிறது. ஆமாம், அதிகார வர்க்கத்தினராக பணிக்கப்பட்ட ஒருவர் எப்படி எளிய மக்களின் வாழ்விற்காக தன் செயல்பாடுகள் முழுவதையும் குவித்தார் என்பதே இந்நூல். நிலவுடைமை சமூகத்தில் அதிகாரத்தின் நுகத்தடியில் இருப்பவர் அந்நிலவுடைமையை தகர்த்தெறிவதற்காக பேசுவது, உழைத்தது என்பது எவ்வளவு பெரிய செயல் என வியப்பு மேலிடுகிறது.

நில உச்சவரம்பு சட்ட காலத்தில் அப்போது ஆட்சியராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் நில அளவை ஆவணங்களை சரிபார்த்து பகிர்ந்தளிக்கும் விதத்தை விவரிக்கிறார், “கிராமத்தில் திறந்த பொதுவெளியில் கிராம வரைபடத்துடன் அமர்ந்து ஒவ்வொரு நிலத்தின் புல எண் மற்றும் உட்பிரிவு எண்களைக் காட்டுவது. திறந்தவெளிதான் தற்காலிக அலுவலகம். அலுவலக அறை போன்ற உள்ளரங்கம் சாதாரண மக்களுக்கு உளவியல் பீதியை ஏற்படுத்தும். திறந்தவெளியில் அவர்கள் இயல்பாக உணர்வார்கள். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் முன்னறிவிப்பு செய்வது, மாலை நேர கூட்டம், மக்கள் மொழியில் பேசுவது என செய்தோம்". சுதந்திரத்திற்கு முன்னான காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கொள்கைகளை பரப்ப மக்களை திரட்ட இந்தியாவில் செய்த வடிவங்களை தோழர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நடவடிக்கைகளில் காண முடிகிறது. மற்றொரு இடத்தில் அவர் சொல்கிறார், “பரம்பரையாக நீளும் கர்ணம் பதவியிலொரு தலித் நியமிக்கப்படுவது ஆந்திராவில் இதுதான் முதல்முறை. ஒருவேளை இந்தியாவில் கூட முதன்முறையாக இருக்கலாம். அடித்தட்டு மக்களின் பார்வையில், ஒரு தலித் கர்ணம் ஆக நியமிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவமிக்க வரலாற்று நிகழ்வு. அவர்கள் வாழ்க்கையில் கர்ணம்தான் மிகவும் அதிகாரம் வாய்ந்த நபர். மாவட்ட ஆட்சியர், பிற அதிகாரிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து நெடுந்தூரத்தில் விலகி இருப்பவர்கள். “. குடியுரிமை திருத்த சட்ட காலத்தில் கர்ணம் பதவியிலிருப்பவர்கள் அனைவருக்குமே மிக முக்கியமான நபர்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக அதிகார பீடத்தில் இருந்தும் எளிய மக்களிடம் செல்வதற்கான பாதைகளை செயல்வடிவங்களை வடிவமைத்ததில் பி.எஸ்.கிருஷ்ணன் எடுத்துக்காட்டாக இருக்கிறார். ஆனால் இவை யாவும் எளிதல்ல என்பதனை கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். அவரது பதவி உயர்விற்கான தகுதி ஆய்வு படிவங்களில் அவரது குறைகளாக எளிய மக்களோடு நிற்பவர், அலுவலங்களை கிராமத்தில் கிணற்றடிக்கு கொண்டு சென்றவர் என்பதாக சொல்லப்பட்டுள்ளன. இன்னும் மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வந்தது, வன்கொடுமை தடுப்பு சட்டம், பழங்குடியினர் மறுவாழ்வு சட்டம் என்பதாக பி.எஸ். கிருஷ்ணன் என்னும் ஐ..எஸ் அதிகாரியின் அடிப்படை மக்களுக்கான அதிகாரங்கள் மீட்டெடுப்பு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அதிகார பீடங்களில் இருப்பவர்கள் மனது வைத்தால் நடு இரவிலும் அரசு இயங்கும் என்பதற்கு உதாரணம் மண்டல் கமிஷன். இவரது பணி நிறைவு என்பது 1991 ஆம் ஆண்டோடு முடிந்தது. பின்னும் அவர் வாழ்ந்த வந்த 28 ஆண்டுகளோடு சேர்த்து கிட்டத்தட்ட ஒரு 70 ஆண்டு காலம் எளிய மக்களின் வாழ்விற்காக, சமூக அந்தஸ்திற்காக, முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த ஒரு மாமனிதராக பி.எஸ். கிருஷ்ணன் நம்முள் வியாபித்திருக்கிறார்.

ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு என்பது இத்தகைய நூலாக இருக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என்.சங்கரய்யாவிடம் அவரது வாழ்க்கை வரலாற்றினை நூலாக கேட்ட போது அவர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, “எனக்கென்ன வரலாறு? என் செயல்பாடுகளே முக்கியம், மற்றபடி பிறந்தது வளர்ந்தது என்பதான சமூகப்பணிக்கு வருவதற்கு முன்பான காலங்கள் தேவையற்றவை". அதையே தான் இந்நூலில் பி.எஸ்.கிருஷ்ணன் செய்திருக்கிறார். அவரது வாழ்க்கையை நூலாக்க மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் முன்னாள் துணைவேந்தர் தோழர் வசந்தி தேவி அவர்கள் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் உரையாடலாக அவரது செயல்பாடுகளை வாழ்வாக வடித்திருக்கிறார். கேள்வி பதில் வடிவில் இந்நூல் அமைந்திருக்கிறது. அதுவே புத்தகத்தை எளிதாக கடக்க உதவுகிறது. புத்தகம் இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது. முதல் பகுதி அவரது செயல்பாடுகள், கொள்கைகள் என்பவையாக பின்னான பகுதி சமூக சமத்துவத்திற்கு வழிகாட்டும் செயல்திட்டம் என உள்ளது. அந்தப் பகுதி களத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைப்பவர்களுக்கு சிறந்த கையேடாக இருக்கும் என்பது எளிதாக புரிகிறது.

மறந்துவிடாமல் சொல்ல வேண்டிய ஒன்று இப்புத்தகத்தின் பதிப்பகமான சவுத் விஷன். இந்தியாவில் கம்யூனிசத்தின் நூறாவது ஆண்டு இது. தமிழக பதிப்பு சூழலில் இடதுசாரி பதிப்பகங்களில் மிக முக்கியமான இடத்தை பெறுவது சவுத் விஷன் ஆகும். இவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் இன்றளவும் வரவேற்பினை பெற்று வருகின்றன. கோதாவரி பாருலேகரின் வாழ்க்கையாகட்டும், கலாச்சாரத்திற்கான கையேடு என்னும் பணிக்கரது புத்தகமாகட்டும் எல்லாமும் இன்றளவும் வரவேற்பினை பெறுபவை. மக்கள் பதிப்பு என்னும் வகையில் குறைந்த விலை புத்தகங்களை வெளியிட்டும் நின்றது சவுத் விஷன். சில வருடங்களாக புதிதாக புத்தகங்கள் வெளியிடாத இப்பதிப்பகம் "சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்" என்னும் இப்புத்தகத்தின் மூலம் தமிழக பதிப்பக சூழலில் நல்வருகையை புரிந்திருக்கிறது. மதஅடிப்படைவாதம், பெரும்பான்மைவாதம் ஆகியவை நாட்டின் இயல்பை சூறையாடி வரும் இப்பொழுதில் மீண்டும் சவுத் விஷன் வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. இன்னும் பலப் பல புத்தகங்கள் வரட்டும். வாழ்த்துக்கள் சவுத் விஷன் நிறுவனத்தாருக்கு.

அருவருக்கத்தக்க சாதியத்தின் அதிபயங்கர கோரப் பற்களாக தீண்டாமை இருக்கிறது என சொல்லும் தோழர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்களின் மகளின் வார்த்தைகளில், "மாக்கு குலம் லேது மேமு மனுஷ்யுலமு" (எங்களுக்கு சாதி இல்லை, நாங்கள் மனிதர்கள்) என்னும் வார்த்தைகள் இந்நாட்டின் ஒவ்வொரு குடியின் வார்த்தைகளாக நாளுக்காக உழைக்கு ஒவ்வொருவருக்கும் இந்நூல் கையேடு என்பதில் மாற்று இல்லை.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற