அது ஒரு கடற்கரையோர கிராமம். இந்தியாவின் தென் எல்லையில் கடைகோடியாய் இருந்த சுவடு தெரியாமல் இருந்திட்ட கிராமம் அது. தனது சிறு சிறு தேவைகளுக்கு தொடங்கி வாழ்வாதாரம் வரைக்கும் கடலையே துணையாக கொண்டிருந்த ஒரு மீனவ சமூகத்தினரே பெரும் சதவிதம். அங்கு ஒரு குட்டி பெண் மேரி…குட்டிப் பெண் மேரிக்கும் அந்த கிராமமே சொர்க்கம். அங்கு கிடைக்கும் கூரியன் கடையின் பழம்பொரி, நீண்டு வளர்ந்திருந்த தென்னை பன மரங்கள்.. கடலில் தினம் எழும் சூரியன் என அவ்வளவும் அந்த கிராமத்தில் கிடைத்திருந்தது அவளுக்கு.
அப்படியான மகிழ்ச்சியான ஒரு நாளில்தான் அக்கிராமம் பரபரப்பாகி ஊர் முழுக்க ஒரே பேச்சாக இருந்தது. அது “இங்கிருந்து வானுக்கு ராக்கெட் விட போறாங்களாம்..” என்பதே அது. ஆம் சுதந்திரம் பெற்று 16 வருடங்களே முடிந்திருக்க தும்பா என்னும் அழகிய குக்கிராமத்திலிருந்து ராக்கெட் விட முடிவு செய்தது அரசு.
அப்பொழுதிலிருந்து தொடங்கி அந்த கிராமம் ராக்கெட் ஏவுதளமாகும் வரை நடப்பதாக விஷயங்களை வடிவமைத்து இந்தியாவின் முதன் முதல் ராக்கெட் ஏவிய அந்த ஆச்சர்ய கணத்தை குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள்.
புத்தகத்தின் மைய கரு என்னவோ, இந்தியாவின் முதன் முதல் ராக்கெட் ஏவிய நிகழ்வினையும் அதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளையும், ராக்கெட் நாயகனான விக்ரம் சாராபாய் குறித்தும் பல விஷயங்களை சொல்வதோடு, ராக்கெட் என்றால் என்ன எப்படி செல்கிறது, என்னென்ன அடிப்படையான அறிவியல் விஷயங்கள் குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு சுருக்கமாக சுவையாக சொல்வதுதான்.
அதற்கு மேனகா ராமன் கண்டெடுத்த வழியே மேரி என்னும் சுட்டிப் பெண். ஆம் அறிவியல் செய்திகளை அப்படியே செய்திகளாக சொல்வதைவிட குட்டி குழந்தைகளுக்கு ஒரு கதையாக சொல்லுதல் அதுவும் நிறைய அழகிய வண்ண வண்ண படங்களோடு சொல்லுதல் என்பது மிக சிறப்பான வடிவம் என நான் உணர்கிறேன்.
எனக்கும் பிடித்ததாகவும்… என் குழந்தைகளுக்கும் பிடித்ததாகவும் இருந்தது இப்புத்தகம். இதைப் படித்த ஒரு தன்னம்பிக்கையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள விண்வெளி மனிதர்களையும் படிக்க குழந்தைகள் துவங்கலாம்.
Comments