பாரதி புத்தகாலயத்தின் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கிளாசிக். ஏற்கெனவே வாசித்து விட்ட போதிலும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் மற்றொரு புத்தகம். அதைத் தொடர்ந்து அவரது சிறார்களுக்கான கதைகளை தேடி தேடி வாசித்து வருகிறேன்
கடந்த செவ்வாய் அன்று (30.11.21) அன்று இரவு தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் ஸ்பேசில் தோழர் இ.பா.சிந்தன் சமூக சிந்தனையை தூண்டும் சிறார் புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டையை விட்டொழித்து உருப்படியாக செயலாற்றுவது என தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் மக்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வுரையில் இ.பா. சிந்தன் சில புத்தகங்களைப் பட்டியலிட்டார். அவை கொ.மா.கோ இளங்கோவின் சஞ்சீவி மாமா, பச்சை வைரம், உதயசங்கர் தோழரின் மாயக்கண்ணாடி, சோசோவின் விசித்திர கதை முதலியன. இதில் சஞ்சீவி மாமா பச்சை வைரம் மாயக்கண்ணாடி ஆகியவை ஏற்கெனவே நான் வாசித்துவிட்டேன் என்பதும் அவை உண்மையிலேயே மிக தரமானவை என்பதற்கும் அவை பெற்ற விருதுகளே சாட்சி. இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படித்திட கோருகிறேன்.
இந்தப் பரிந்துரையில் அவர் சொன்ன மற்றொரு புத்தகம் தான் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு. கிண்டிலில் மட்டுமே கிடைக்கிறது. உடனே அன்றிரவே கிண்டிலில் தரவிறக்கி (விலை கொடுத்துதான் 49/-) வாசித்தும் விட்டேன்.
பல சிறார் கதைகள் சமீப காலங்களில் புக்ஸ் பார் சில்ரன் கொடுத்த ஊக்கத்தால் நிறைய பதிப்பகங்களில் வந்திருந்தாலும் இந்திய சூழலின் ஆகப் பெரும் பிரச்சனையான சிக்கலான சாதியை விமர்சித்து வந்த சிறார் இலக்கியங்கள் எனக்குத் தெரிய இதுவரை சஞ்சீவி மாமா தவிர வேறொன்றும் இல்லை. (இருந்தாலும் சொல்லுங்கப்பா, வாசிக்கனும்).
சாதி என்னும் பெரும் சதியை, அது நடைமுறையில் தரும் சிக்கல்களை, குழந்தைகளிடத்தும் நயமாக நயவஞ்சகமாக நுழைவதை கருப்பொருளாக்கி மிகவும் சுவாரசியமாக தந்திருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். ஆம், சாதி நுட்பமாக வண்ண வண்ண கயிறுகள் மூலமாக பள்ளிக் குழந்தைகளிடத்தே பரவியுள்ள நிகழ்கால பெரும் அபாயத்தை பேசும் மிக நல்ல புத்தகம் கயிறு.
விஷ்ணுபுரம்
சரவணன் ஒரு ரெட் சல்யூட் உங்களுக்கு. தமுஎகச தோழர்களே, இவ்வருடத்திய சிறந்த சிறார்
கதைக்கான உங்கள் தேர்வு பட்டியலில் தவிர்க்க இயலாத ஒரு புத்தகமாக நிச்சயம் இக்கயிறு
இருக்கும். இப்பவே விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இது கிண்டிலில்
இருப்பதை விரைவில் புத்தகமாக அச்சிடப்படவும் வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். பதிப்பித்த ஓங்கில் கூட்டம் நிறுவனத்தாருக்கு மிக்க நன்றி
தோழர் இ.பா.சிந்தன் மிக்க நன்றி மீண்டும். அடுத்த உதயசங்கரின் சோசோ..
#புத்தகம் #கயிறு #விஷ்ணுபுரம்சரவணன் #கிண்டில் #உதயசங்கர் #சிறார்கதைகள்.
Comments