சிறார்களுக்கான புத்தகம் நம்மை மாதிரி பெரிசுகள் ஏன் படிக்க வேண்டும் என என் நண்பர்கள் சிலர் நினைக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் என்ன புதுசா இருக்கப் போகுது என நினைக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து சிறார்களுக்கென வரும் நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். என்னமோ அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.
அப்படியாக நான் வாசித்த மூன்று நூல்களை மட்டுமே இங்கு பேசப் போகிறேன். மூன்றுமே புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. மூன்றுமே அன்பு வாகினி என்பவர் மொழியாகத்தில் வந்துள்ளது. 1. துள்ளி 2. உழைப்பாளி வாத்து 3. மாடுகளின் வேலைநிறுத்தம்.
இப்புத்தகங்கள் ஏற்கெனவே புக்ஸ் பார் சில்ரன் வெளியிட்ட ஆதி வள்ளியப்பன் அவர்களின் மொழியாக்கத்தில் நீ கரடி என யார் சொன்னது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்பவனவற்றின் வகை சார்ந்தது. இவையெல்லாம் சிறார்களுக்கு என மட்டுமே எழுதப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நேற்றைய இரவு என் குழந்தைகளுடனான நேரத்தில் நான் இவ்வாறு சொன்னேன், “எனக்கென்னவோ, இவை குழந்தைகளுக்காகவென எழுதப்பட்டதாக தெரியவில்லை. ஆலைத் தொழிலாளர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது ரஷ்ய புரட்சிக்குப் பின் சோஷலிச ரஷ்ய அரசால் குழந்தைகளுக்கு என எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்”.
இந்தப் புத்தகங்களின் சிறப்பம்சமே இவைகுறித்து குழந்தைகளுடன் நீண்ட நேரம் உரையாடலாம். உரையாடலில் ஒரு நேர்மை தானாகவே அமையும். அவை அநேக சிறார் இலக்கியத்திலும் சாத்தியப்படுவதில்லை என்பதான என் அவதானிப்பு. ஏதோ ஒரு குறியீடாக வைத்து தற்காலத்தைய சமூகம், சுற்றி இருப்பவர்கள் என நேரடித் தொடர்புபடுத்தி பேச விவாதிக்க இயலுகிறது. இக்காலத்திலும் தொடரும் சமூகப் பிரச்சனைகள், சீரழிவுகள் குறித்து ஒரு எளிமையான உரையாடல் நடத்த பெரிதும் உதவும் புத்தகங்களாக இவை இருக்கின்றன என்பதே இவற்றின் சிறப்பு.
வேலைநிறுத்தம் எதற்காக அப்பா? மாடு தானே முதலில் வேலைநிறுத்தம் செஞ்சிச்சு, பின் ஏன் அதனோட வாத்து, கோழி இவையெல்லாமும் சேர்ந்துச்சு? நீதானே சொல்வே, தேனி மாதிரி உழைக்கனும் என பெரியவங்க சொல்வாங்கன்னு, ஆனா அந்த வாத்து அப்படிதானே உழைத்திச்சு, பின் எதற்கு சுரண்டல் என எதெல்லாமோ சொல்லுற? அவளோ சின்ன மீன்கள் ஓண்ணா சேர்ந்தா மட்டும் பெரிய மீன் பயந்திடுமாப்பா? ஒரு வேளை ஒண்ணா சேர்ந்த சின்ன மீன்களில் ஒன்றோ அல்லது சின்ன குருப்போ லேசா பயந்தா கூட என்ன ஆகும் சொல்லு கண்ணு? என ஏகப்பட்ட கேள்விகள் விவாதங்களில் வந்தன.
கேள்விகள் எழுப்ப, விவாதிக்க வாய்ப்புகள் பலவும் தந்து நிற்கின்றன இப்புத்தகங்கள். அட்டை வடிவமைப்பும் அமர்க்களம்.வாழ்த்துகள்
வாழ்த்துகள்