Skip to main content

யார் கைகளில் இந்து ஆலயங்கள்

கோயில்கள் சூழ் ஊரில் பிறந்தவன் நான். தடுக்கி விழுந்தால் கோயில்கள் என காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, ஜைன காஞ்சிகளில் உள்ள பல கோவில்களுக்கும் சென்றுள்ளேன். சொல்லப் போனால் 1990களில் மக்கள் நாளொன்றுக்கு ஒரு கோவில் செல்வது வழக்கம். செவ்வாய் குமரக்கோட்டம், புதன் ஒரு கோயில், வியாழன் குரு கோவில், வெள்ளி காமாட்சியம்மன், சனி பெருமாள் கோவில், ஞாயிறு கோனேரிகுப்பம் அம்மன் என எல்லா நாளும் ஏதோ ஒரு கோவிலுக்கு மக்கள் செல்வர். எங்கோ ஒரு கோவிலில் ஏதோ ஒரு விசேஷம் என வருடந்தோறும் ஏதோ கொண்டாட்ட மனநிலை. வாரந்தோறும் வெள்ளி தேர், வருடத்திற்கு ஒரு பெருமாள் தேர், கருட சேவை என பஞ்சமே இல்லை. அப்படியொன்றும் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று எனக்கு இருந்ததாக எப்போதுமே நினைவில் இல்லை. ஆனால் கோயில்கள் செல்வது என்பது காஞ்சி நகர் வாசிகளுக்கே உள்ள பழக்கம் போல. எப்படி ஶ்ரீதர் கபேவில் ரவா தோசை சாப்பிடுவதோ, இந்தியன் காபி ஹவுஸில் சாம்பார் இட்லி சாப்பிடுவதோ, கனக விலாஸில் காபி சாப்பிடுவதோ அதை போல கோயில் செல்வதும் காஞ்சி நகர் வாசிகளின் பழக்கமாக எனக்கும் தொற்றிக் கொண்டது.



 அந்திரசன் மேல்நிலைப்பள்ளி என்னும் கத்தோலிக்க திருச்சபையின் பள்ளி மாணவர்கள் கிறித்தவர்கள் உள்ளிட்டு சிவகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பேய் கோபுரத்தில் உள்ளும், மேல் தளத்திலும் அமர்ந்து படிப்பதை அக்காலத்தில் (1990-2000) சாதாரணமாக காணலாம். பேய் கோபுரத்தின் காற்றின் சுகத்தில் படித்தவர்கள் எத்தனை பேரோ தெரியவில்லை, ஆனால் தூங்க சரியான இடம். எத்தனை எத்தனை கோயில்கள். ஒரு பக்கம் பெருங்கோயில்களான ஏகாம்பரேஸ்வரர், வைகுண்ட பெருமாள், வரதராஜ பெருமாள், கச்சபரேஸ்வரர், காமாட்சியம்மன் எனவும், பச்சைவண்ணர், பவழவண்ணர், பூதப்பெருமாள், பாண்டவப் பெருமாள், கைலாசநாதர் என சிறிதாகவும் என எண்ணற்ற கோயில்கள். ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் பாழடைந்த சுவற்றின் பின்னே பாதாள சுரங்கப் பாதை என்ற ஒன்றை தேடி திரில்லிங் பயணம் செய்த அனுபவமும் என்னைப் போலவே பலருக்கும் உண்டு. இப்படியாக கோவில்கள் இருந்த போதிலும் உடனுடன் பெரிய மார்க்கெட் தர்கா, பாணக்காரத் தெரு தர்கா என்பதும் காஞ்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே இருந்த பெரிய சர்ச் என எல்லாமும் இருந்தது. காஞ்சிமடத்தின் பெரியவர் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருந்த காலத்தில் பக்கத்து மசூதியின் பாங்கு கேட்டுத்தான் கண் விழிப்பார் என்பதும், அவர் உடல்நிலை சரியில்லாத பொழுதொன்றில் பாங்கு ஒலி அவருக்கு தொந்தரவாக இருந்ததென கருதி மசூதி பாங்கு நிறுத்திவிட, இல்லை இல்லை அது ஒரு நிம்மதி தருகிறது என பெரியவர் சொல்லி ஒலித்ததாக கதைகளும் காஞ்சியில் உண்டு. எது எப்படியோ கோவில்கள் யார் வசம் இருக்க வேண்டும் என சச்சரவு பிரச்சனை வந்ததாக ஞாபகம் எனக்கில்லை. காஞ்சியின் பாரம்பரிய வடகலை தென்கலை சண்டை கூட நீதிமன்றத்தில் தான் வழக்கு கண்டது.

இப்படியான நிலையில் கொஞ்ச காலமாக இந்து கோயில்கள் ஏன் அரசு கையில் இருக்க வேண்டும் அது இந்துக்களின் கையில் இருந்துவிட்டு போகட்டும் அதுதான் சரி என குரல்கள் எழ ஆரம்பித்தன. சர்ச்சுகள் கிறித்தவர்கள் கையில் தானே இருக்கிறது, மசூதி அவர்களின் கையிலேதான் அப்படியிருக்க கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கையில் என 'அதானே' என எவரும் கேட்டு நிற்கும்படியான சாதாரணமாக தோன்றும் இக்கேள்விக்குத்தான் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு. கேள்வி கேட்ட முகாம்களின் இலட்சணம் தெரிந்திருந்ததால், அக்கேள்விக்கான எதிர்ப்பு சரி என்று நான் நினைத்தேனே தவிர, கேள்வியின் பின் நியாயம் ஏதேனும் இருந்து தொலைகிறதா என தேடவில்லை. பத்திரிகைகளில் அங்கொன்றும் இங்கொன்றும் அவ்வப்போது சில கட்டுரைகள் மட்டுமே கிடைத்தன. எவர் இந்து உள்ளிட்ட அதில் ஆயிரம் பிரச்சனை இருக்க, கோவில் பழக்க வழக்கங்களில் ஆயிரத்தெட்டு வேற்றுமை இருக்க இந்தக் கேள்வியே அபத்தம் என இருந்துவிட்ட வேளையில் தான் வழக்கமாக பெரும் அபத்தங்களை தானாகவே நம்மை நாடி வரும் வாட்ஸப் வழியே "இந்துக் கோவில்கள் இந்துக்கள் வசம், அதற்காக குரல் கொடுங்கள்" என நாளும் பல்வேறு பதிவுகள். அடப்போங்கடா வேறு வேலை இல்ல என விட்டாலும், ஆரம்பத்தில் வாய் திறவாத பலரும் ஆமாம் தானே என சொல்ல ஆரம்பித்த நிலையில் தான் ஆபத்து புரிந்தது. ஏதேது வாய் திறவாது மௌனம் காத்தால் பொய்யின் பக்கம் இயல்பாகவே உண்மை தன்மை குறித்த அக்கறை இல்லாமலே பலரும் நின்றிட இயல்பாகவே வாய்ப்பிருக்கிறது, ஆகவே மௌனம் கலைத்து இதற்கும் பதில் தேடி சொல்ல வேண்டும் என தோன்றிய வேளையில் பாரதி புத்தகாலயத்தின் இப்புத்தகம் கவனத்திற்கு வந்தது.

 யார் கைகளில் இந்து ஆலயங்கள் ? - இதுதான் தலைப்பு. பார்த்தவுடனே இதோ ஏதோ கட்டுரைகளின் தொகுப்பு என எண்ணி என்னைப் போல் படிக்காமல் சில காலம் ஊறப்போட வேண்டாம். அழகாக பயணிக்கும் வகையில் இயல்பான ஒரு உரையாடல் ஒன்று உள்ளது அப்படி அப்படியே பல உண்மைகளை தூவியவாறே. படித்த முடித்தபின் என்ன ஒரு வியப்பு. எத்தனை எத்தனை புதுப்புது செய்திகள், வரலாற்று தடங்களிலும் இக்காலத்தும். எங்க ஊர் கோயிலுக்கு யானை வாங்க அனுமதி கொடுங்க என வழக்கு போட்ட ஒரு இஸ்லாமியர், கிறித்துவர்கள் ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் ஒரு பக்கம் என சேர்ந்து பல்லக்கில் தூக்கப்படும் சாமி, எல்லா கோயிலும் நடுச்சாமத்தில் நடை சாத்தப்பட ஒரு கோயில் மட்டும் நடுச்சாமத்தில் திறக்கப்படும் அதிசயம், உருவம் இல்லாமலே சாமியாக கும்பிடப்படும் இந்து கடவுள் கொண்ட கோயில், சாதி பேதமும் இல்லாமல் பள்ளர் பறையர் என தாழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் மக்களுக்கும் அங்கீகாரமும், அதிகாரமும் உள்ள சில கோயில்கள் என பல செய்திகள் மிகவும் சுவைபட. இறை என்ற ஒற்றையில் நம்பிக்கை கொண்டு மதங்கள் சாதிகள் தாண்டி இயல்பாக இருக்கும் மக்கள் என்பதுதான் இந்நூல் வாசித்து முடித்தபின் கிடைக்கும் எண்ணம்.

 அடுத்ததாக இப்புத்தகம் ஒரு வாழ்க்கை வரலாறு என்பதும் இருக்கிறது. வேட்டி ஜெயராமன் என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் ஜெயராமன் என்னும் கம்யூனிஸ்ட் இந்து அறநிலையத்துறையின் ஆணையர் ஆகிறார். பல கோவில்களுக்கும் பொறுப்பாகிறார். என்னடா நாத்திக கம்யூனிஸ்ட் ஒரு கோவிலுக்கு பொறுப்பா என பொறுமிய ஆதீனம் போன்ற பலருக்கும் இவர் பின்னர் தன் சிறந்த செயல்பாடுகளால் அவர்கள் வாயாலே புகழப் பெற்றும் சிக்கலில் தவித்த பல கோவில்களுக்கும் அரசாலேயே சிக்கலைத் தீர்க்க அனுப்பப்படுகிறார். 45 இலட்சம் என காண்ட்ராக்டர் போட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக சவால் விட்டு வெறும் 17 இலட்சம் ரூபாயில் கோயிலுக்கு ஒப்பந்தத்தில் இருந்ததை விட பல நல்ல விஷயங்களை செய்கிறார். இவரது பணிக்காலத்தில் இவர் பணி செய்த கோயில்கள் வருமானம் அதிகரிக்க கண்டன, நகை எடை போடுகையில் அடித்த கொள்ளிகள் நிறுத்தப்பட்டன, சொத்துகள் மீட்டெடுக்கப்பட்டன, கூடுமானவரையில் சமூக நீதியும் பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய செய்தி.

 கம்யூனிஸ்ட் ஒருவர் கோவிலுக்கு பொறுப்பு என்றால் பிரச்சனை வராமலா இருக்கும். பிரச்சனைகள் ஏற்பட்டு அவதூறுகளும் புகார்களும் மேலிடத்திற்கு அனுப்பப்பட சில சமயம் ஆட்சியாளர்களுக்கும் அனுப்பப்பட ஆட்சியாளர்களின் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தும், மேலிடத்திலிருந்து வந்து ஆவண செய்தும் இவர் மீது எந்த குற்றமும் இல்லை என்பதைக் கண்டும், அது மட்டுமில்லாது அவர் எவ்வளவு நல்லது செய்கிறார் என கரிசனத்துடன் பாராட்டியதும் பல தடவை நடந்துஇருக்கிறது. தீர்க்கப் பெறாத சிக்கலான சிலை திருட்டையும் சாதுரியத்தால், வாசிப்பால், அறிவால் தீர்த்தும் வைக்கிறார் தோழர் வேட்டி ஜெயராமன். ஒரு 140 பக்கங்களில் உள்ள உரையாடலில் நமக்கு கிடைப்பது அரசு அதிகாரி மனது வைத்தால் நேர்மையாகவும், துணிவாகவும், சாதுரியமாகவும் மக்களின் பணம் விரையம் ஆகாமலும், மக்களின் சொத்து பாதுகாக்கப்படவும், கோவில் நிலங்கள், பொருட்கள் என யாவும் பாதுகாப்பாக இருக்கவும் செய்ய இயலும் என்பதோடு வருமானமும் உயர்த்திட வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் அறிய முடியும். யானைக்கு தீவனம் காசு கொடுத்து கூடுதலாக வாங்கிவந்த நிலையில் கோவில் நிலங்களில் பயிரிட்டு அதன் மூலம் யானைக்கான ஒருவருடக் கால உணவுத்தேவையை பூர்த்தி செய்து வைக்கிறார் தோழர் வேட்டி ஜெயராமன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தாழ்த்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் மக்கள் தெருவிலும் சாமி ஊர்வலம் செல்ல வேண்டும் என வலியுறுத்தி அதிலும் வெற்றி கண்டவராக இருக்கிறார்.

 சுவைக்க சுவைக்க எச்சு ஊறும் என்பார்களே, படிக்க படிக்க இப்புத்தகம் சுவை கூடுகிறது. படித்து முடித்து வைத்து பின் சிந்திக்கையில் புரிகிறது யார் கைகளில் ஆலயங்கள் இருக்க வேண்டும் என்பது. அது நிச்சயமாக அரசின் கைகளில் தான் இருக்க வேண்டும் என்பது. ஆதீனங்களின் கைகளிலுமோ அல்லது மடாதிபதிகளின் கையிலோ ஆலயம் நிச்சயமாக செல்லக் கூடாது என்பதற்கு ஆங்கிலேயன் நாட்டை ஆண்ட காலத்திலேயே மக்கள் மடாதிபதிகள், ஆதீனங்களின் கொள்ளையை கண்டு வெகுண்டு முறையிட்ட வரலாறு இருக்க, தற்காலத்தைய மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல ஆதீனங்கள், மடாதிபதிகளின் செயல்களையும் நாம் பார்த்த வண்ணம் தான் இருக்கிறோ. காட்டை சுற்றி வளைத்து சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தியும், உத்திராட்ச கொட்டைக்கும் 500, 5000 என காசு வைத்து விற்கு காசு பார்த்திட்டும், இறை வழிபாட்டையும் அசிங்கப்படுத்தி வியாபாரமாக்கி கொழித்து இப்பொது சுவை கண்ட பூனையாக மற்ற கோவில்களை நோக்கி தன் உருட்டு கண்ணை வைத்து பார்க்கிறது என்பது எளிதாகப் புரிகிறது. இந்த கபட பூனை மட்டுமல்ல, கோவில்களில் இருக்கும் பன்மையை ஒழித்து ஒற்றைத்தன்மையை கொணர்ந்து பின் தான் மட்டுமே நலன் காண விரும்பும் கள்ளக் கூட்டமும் தான் இக்கேள்வியை முன் வைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள இப்புத்தகம் ஏதுவாகிறது. அவசியம் படியுங்கள், பதிலை ஆணித்தரமாக வையுங்கள், பன்மைத்தன்மை பாதுகாக்கப்படும் கோயில்களின் பாரம்பரியம் தொடர்ந்திட.

 கட்ட கடைசியாய் சில வார்த்தைகள். வேட்டி ஜெயராமன் என்னும் அப்பழுக்கற்ற அரசு ஊழியரின் புகைப்படம் இந்நூலில் இடம் பெறாதது ஒரு பெருங்குறை. ரமேஷ்பாபுவின் பிறிதொரு பொழுதில் படித்தவர்களுக்கு தெரியும் இவரின் எழுத்துக்கள் எப்படி என்று. அழகு தமிழ் கொஞ்சுகிறது ஒரு பக்கம் என்றால் அவரின் வாசிப்பும் அதிலிருந்து பெற்ற அறிவும் நூலின் முதல் கடை பக்கங்களை அலங்கரிக்கிறது. சும்மா அடிச்சுவிடும் பழக்கமற்ற தோழர் ரமேஷ்பாபு பல புத்தகங்களில் இருந்தும் பல சான்றாதாரங்களை தருகிறார். மீண்டும் ஒரு முக்கியமான புத்தகத்தை தந்து இருக்கிறார் தோழர் ரமேஷ்பாபு. தொடர்ந்து களத்தில் இருக்கிறபோதும் புத்தகத்தையும் எழுதுவது என்பதிலும் சிறப்பாக அதை எழுதி முடிப்பதில் தோழர் ரமேஷ்பாபு சிறப்பு பாராட்டைப் பெறுகிறார். நூலின் இறுதியில் நூலாசிரியர் தோழர் ரமேஷ் பாபு எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை.

1. பெரும் மக்கள் வந்துபோகும் பெருஞ்சொத்து கொண்ட கோவில்களை எனக்கு நம்பிக்கையில்லை அதனால் எப்படி போனால் என்ன நாம் விட்டுவிடப் போகிறோமா,

2.   மதவாத திரட்சியை எதிர்கொள்ள மதச்சார்பற்ற உள்ளூர் சமூக செயல்பாடுகளை ஆலயங்கள் அல்லாத சமூக நிகழ்வுகள் மூலம் சாத்தியப்படுத்துவது எப்படி?

3. நாட்டார் தெய்வங்கள், சிறுதெய்வங்கள் அனைத்தையும் சனாதனமயப்படுத்தும் முயற்சியை முறியடித்து ஒற்றுமையாக வாழும் மக்களின் வேற்றுமையான கலாச்சாரக் கூறுகளை முன்னெடுப்பது எப்படி?

 பாரதி புத்தகாலயத்தின் காலத்திற்கேற்ற வெளியீடு. அடுத்த பதிப்பிலாவது தோழர் வேட்டி ஜெயராமனின் படம் இடம் பெற வேண்டும் என கோரிக்கை வைத்து அமர்கிறேன்.

 


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களி