ரொம்ப நாளாயிடுச்சு… இல்ல இல்ல ரொம்ப வருஷமாயிடுச்சு.. ஒரு துப்பறியும் நாவல் படிச்சு.. வாசிக்க துவங்கிய காலத்தில், சுஜாதா, அசோகன் பாக்கெட் நாவல் என எத்தனை எத்தனை படிச்சிருப்போம். ஹூம்ம். இப்ப போய் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதா என கூட சில சமயம் நினைச்சிருக்கேன். அதெல்லாம் ஒரு பெருமையா என.,., ஆனாலும் ஒரு துப்பறியும் நவீனம் ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்கு என்றவுடனே பழைய நினைவின் எள்ளல்கள் எல்லாம் போய் உடனே ஆர்டர் செய்து வாங்கி படித்தும் முடித்துவிட்டேன்.
நான் வாசித்த துப்பறியும் நாவல்களில் இது வேறு ரகம். அதாவது துப்பறியும் ஹீரோ இல்லை, அந்த துப்பறியும் ஹீரோ காமெடியாக பேசுகிறேன் என பெண்களை இழிவாக கேலி செய்வதில்லை, ஆஹா இந்த ஹீரோ நல்லவர் அவரிடம் ராகவன் instinct என்ற ஒன்று உள்ளதே என வியக்கவும் இடமில்லை. அவ்வாறான வியப்பின் மூலம் வாசகராகிய நாம் துப்பறிவாளனாக மாறாமல் அங்கும் ஹீரோவிற்காக காத்திருக்கிறோம். சத்யஜித் ரேயின் பெலூடா நூல்கள் எல்லாம் துப்பறியும் மர்ம நாவல்கள் தான். ஆனால் அவை எல்லாம் நம்முள் ஒரு scandalous thing என்பது போல ஒரு எண்ணத்தை உருவாக்காது, வாசிக்கும் வாசகருக்கு எல்லா துப்புகளையும் பொதியாது அப்படி அப்படியே வைத்துவிட்டு, வாசகனும் ஒரு துப்பறிவாளானாக மாறும் வித்தையை கைவரப் பெற்றிருக்கும். தமிழில் வீ.பா கணேசன் அவர்களின் நல்ல நடையில் பாரதி புத்தகாலயம் பல புத்தகங்கள் பெலூடா வரிசை என வெளியிட்டிருக்கிறது. அதையும் வாசியுங்கள்.
கடந்த இரண்டு பத்திகளை படித்தவர்களுக்கு என்னடா இவன் அந்த நாவல் பெயரையே எப்படா சொல்வே என கோபம் வருகிறதல்லவா அவ்வாறாக இந்நாவல் இல்லை. அப்படியாபட்ட அபத்தங்களும், மேதாவித்தனங்களும் இல்லாமல் இயற்கையிலாளர் திரு.மா.கிருஷ்ணன் அவர்கள் தமிழில் எழுதிய ஒரே துப்பறியும் நவீனமான “கதிரேசன் செட்டியாரின் காதல்” என்னும் நவீனம் குற்றங்கள் நடந்த விதம், அந்த சூழல், கிடைக்கும் துப்புகள், சந்தேகப் புள்ளி விழும் நபர்கள் எல்லாவற்றையும் வாசகர்களிடம் உடனே மறைக்காது காட்டி நம்மையும் ஒரு துப்பறிவாளானாக ஆக்குகிறது.
மா. கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய முதுமைக் காலத்தில் எழுதியிருக்கும் இந்நவீனத்தின் கதைக்காலம் அநேகமாக 1960கள் எனலாம். மதுரக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு கிராமத்துல செட்டியார் ஒருத்தரு வீட்டு வேலைக்காரனும் நாயும் கொலயாகி கிடக்க, அக்கொலகள செஞ்சவங்க ஆரு என கண்டுபிடிப்பது தான் இந்நவீனம். இதற்கு முன்பான வாக்கியம் போலவே மொழிநடை என்பது பேச்சுநடையாக மா.கிருஷ்ணன் நம்மோடு உட்கார்ந்து கதை சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. எனக்குப் பிடித்து இருக்கிறது. கதை வெகு சுவாரசியமாக செல்கிறது.ஆம், துப்பறியும் நாவல்களுக்கே தேவையான ஒரு விறுவிறுப்பினை கொண்டு இருக்கிறது.
படித்து முடித்தபின் யார் இந்த மா. கிருஷ்ணன் என்ற போதுதான் வெகு காலத்திற்கு முன்பு நான் வாசித்த காலச்சுவடு வெளியீடான மழைக்காலமும் குயிலோசையும் என்ற இயற்கை சூழலியல் நூலின் ஆசிரியர் என்பது தெரிந்தது. அதனால் தான் இந்நவீனத்திலேயும் ராஜபாளையம் நாயை விட கோம்பை நாயை எப்படி வித்தியாசம் கொண்டது, அதற்கு எப்படி உணவளிப்பது, அது எப்படி பழகும், அதை எப்படி பழக்க வேண்டும், அதற்கு எப்படி மாத்திரை அளிப்பது உள்ளிட்ட பல விவரங்கள் வருகிறது என புரிந்து கொண்டேன்.
ஒரு changeக்கு, ஒரு இளைப்பாறலுக்கு, ஒரு விறுவிறுப்பிற்கு என இந்நவீனத்தினை அவசியம் படிக்கலாம்.
இதைப் படித்த சந்தோஷத்தில் அப்படியே பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கும் சத்யஜித் ரேவின் பெலூடா கதைகளையும் படியுங்கள். எல்லாம் தான் படிப்போமே!
Comments