மௌனத்தின் சாட்சியங்கள் என்னும் நாவலிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சிறுகதை தொகுப்புடன் தோழர் சம்சுதீன் ஹீரா. முதலில் வாழ்த்துகள் தோழர்.
2001-2002 காலக்கட்டத்தில் நான் உதகையிலிருந்து சனி ஞாயிறு விடுமுறைக்காக விஜயா பதிப்பகம் செல்லும்போதும் என்னை தொந்தரவு செய்தது அந்த தெரு முனையில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி நின்ற அதிரடிபப்டைவீரர்களின் அந்த செக் போஸ்ட் தான். மத கலவரங்கள் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தபின்னரும் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாத காலத்தும் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் குறுகுறு என பார்த்தப்படி நின்றிட்ட அக்காவலர்கள் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவனான என்னையே தொந்தரவு செய்திடுகையில் சிறுபான்மை மதத்தினருக்கு எத்தகையதொரு கடும் அவஸ்தையாக இருந்திருக்கும்!! அந்த உளவியல் தலையீடு இருக்கிறதல்லவா அதிலிருந்து தொடங்குகிறது சிறுபான்மை மதத்தினருக்கான அவஸ்தையும், அவமானமும். இது சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல, ஒடுக்கபப்ட்ட மக்களுக்கும் தான். காலம் காலமாக எங்கு குற்றம் நடந்தாலும் எந்தவித தடயமும் கிடைத்திராக காலத்தும், முகாந்திரம் ஏதுமற்று இருந்தும் நேரிடையாக காவல்துறை இறங்குவதும் ஊருக்கு வெளியே இருக்கிற தலித் மக்களின் வீடுகள் தான். ஆனால் இந்த உளவியல் தலையீடு சிறுபான்மை மதத்தினருக்கு, ஒடுக்கப்பட மக்களின் ஒரு சிலரை மட்டுமே radicalஆக தூண்டி அடிப்படைவாதம், அராஜகவாதம் பக்கம் கொண்டு சேர்க்க, கலவரங்களில் கை ஓங்கியபடியே இருக்கும் பெரும்பான்மை மத, ஆதிக்க சாதி மக்களுக்கோ அவர்கள் கைகளை பலபப்டுத்தியதாக இருக்கிறது. அதன் சாட்சியங்களின் ஒன்றுதான் திருப்பூர் நகரத்தில் தலையெடுக்கு மத தூண்டல் கலவர முயற்சிகள்.
இந்தப் பின்னணியை புரிந்து கொள்கையில் இச்சிறுகதை தொகுப்பின் கதையாசிரியரது உளவியலை புரிந்து கொள்ள இயலும். என்னப்பா ஒரே சோகமாக, இருளாக அத்தனை கதைகளும் இருக்கிறதே ஒவ்வொரு கதை முடிந்த பின்னரும் அடுத்த கதைக்கு போவதற்கு முன்னால் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுதலும், ஒரு தைரியத்தையும் வரவழைக்க வேண்டியிருக்கிறதே என நீங்களும் எண்ணினால் அதற்கான பதிலும் இதுதான். இக்கதைகளில் சொல்லப்பட்ட இன்னல்களை விட துன்பதுயரங்களை விட நாட்டில் நடப்பது பன் மடங்கு என்கிற உண்மையையும் கவனத்தில் வைத்துக் கொண்டு படித்திடுகையில் தான் இக்கதை தொகுப்பிற்கான தேவை புரிந்திடும்.
இது உண்மையா அல்லது என் அவதானிப்பா என தெரியவில்லை. மௌனத்தின் சாட்சியங்கள் எழுதும் பொழுதைவிட இத்தொகுப்பு எழுதுகையில் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அதற்கான கொடும் சூழலாக நாவலுக்கும் இச்சிறுகதை தொகுப்பிற்கும் இடையேயான காலம் இருந்திருக்கிறது இன்னமும் இருக்கிறது என்பதே என் அவதானிப்பு.
நான் ஒவ்வொரு கதையாக செல்லப் போவதில்லை. mainstream media மட்டுமேவோ அல்லது வாட்சப் யூனிவர்சிட்டியை மட்டும் நம்பியவராக இருந்திட்டால் இத்தொகுப்பின் கதைகளுக்கான நிகழ்களம் என்பது எங்கிருக்கிறது என்ற கேள்வியும் கதைக்காலம் எந்த ஆண்டு என்பதுமான கேள்வியும் எழக் கூடும். ஆனால் இன்னமும் செய்திகளை கவனப்படுத்துகிற சமூகவலைத்தளங்களையும் கவனிப்பவராக இருப்பின் இத்தொகுப்பின் கதைக்களமும் காலமும் புரிபடும்.
இன்னொன்றும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொகுப்பின் கதை மாந்தர்களின் பெரும்பாலும் இஸ்லாமியர்களே. அவர்கள் பெரும்பான்மை வாத அடிப்படைவாதம், பாசிசம் செய்யும் கொடூரங்களில் சிக்கித் தவிப்பதையேதான் எல்லா கதைகளும் சொல்கிறது. தன்னுடைய மதத்தை நாட்டின் மதமாக கொண்டிருக்கப் போவதாக அறிவித்து அந்நாட்டில் குடியேற வாய்ப்பிருந்தும் எந்த மதமும் அரசு மதமாக கொண்டிராத தேசமே பாதுகாப்பு என நம்பி இருந்திட்ட இருக்கும் தேசமே உயிர் என நினைத்து வாழும்மக்களின் எதிர்பார்ப்பும் ஆசையும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அசிங்கமாக அருவருப்பாக அபாயகரமாக தவிடுபொடியாவதை வேறு எப்படித்தான் எழுதுவது? இப்படித்தான் எழுதியாக வேண்டும்.
இறுதியாக அந்தப் புகழ்பெற்ற பாடல் சொல்வது போல, இன்று இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு தானே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தானே என்றிருந்திட்டால் நாளை என்பது எவருக்குமில்லை. அது மட்டுமல்ல, பாபர் மசூதியோடு முடிவதாக இல்லை நிகழ்ச்சிநிரல் என காசி மசூதியையும் ASI கொண்டு அங்கு அதற்கு முன்னர் கட்டிடம் ஏதும் இருந்துள்ளதா என பார்க்க அனுமதியும் கிடைத்துவிட்ட நேற்றைய பின்னணியில் சூதின் வீச்சும், அச்சமும் இன்னமும் மேலோங்குகிறது.
நண்பர்களே, இருள் தான் அவலம் தான் சோகம் தான். ஆனால் உண்மையும் யதார்த்தமும் அப்படியாகவே இருக்கையில் வேறு என்னதான் செய்வது, எழுதுவது?!!
வாசித்துவிட்டு சோகத்தை சுகிக்க சொல்லவில்லை ஹீரா யதார்த்தத்தை புரிந்துகொண்டு வினையாற்ற சொல்கிறார். பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.
Comments