ராஜ வனம்
இத்தோடு அநேகமாக நான்கு அல்லது ஐந்து வனம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின்{?} ஒரு புலி பற்றிய நூல், அருமைத் தமிழின் சொந்தக்காரர் என் பிரியத்துக்குரிய நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி என்னும் classic, சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த பிரசாந்த் வே அவர்களின் சிறுகதை தொகுப்பான காடர் என்பதைத் தொடர்ந்து ஒரு வனம் குறித்த சிறுகுறுநாவல்.
ஆனா அப்படி எல்லாம் இல்ல. இது கொஞ்சம் இன்னமும் மெனக்கட வேண்டி இருந்தது. ஆனாலும் சுகமான அனுபவம். மலையாளம் தமிழும் கலந்து திரிந்து ஒருவித இசைக்கோர்வையாக வரும் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி வழக்கு பிரமாதம், மயக்குகிறது. அநேகமாக காடுகளை களமாக கொண்டு எழுதுபவர்களால் வனங்களின் அந்த தாவர வளம், வகைகள், விலங்கு வகையினம், மண் வளம் என்பனவற்றின் மீது ஒரு மையல் கொள்ளாமல் எழுத முடியவில்லை போலும் என்றும் சொல்லலாம், அவை அல்லாது காடு அல்லது வனம் என்பதுதான் என்ன?
ஒவ்வொரு பகுதி வனமும் வேறாக இருக்கிறது. நக்கீரனின் போர்னியா காடுகள் ஒரு வகை என்றால் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு எல்லையும் மறு எல்லையும் வேறு வேறாகத்தான் இருக்கிறது. காடரின் வனம் வேறாகவும், ராஜவனமும் வேறாகத்தான் இருக்கிறது.
காடரின் சிறுகதைகள் இன்னமும் மனிதர்கள்-விலங்குகள் குறித்த உறவுகளின் மீதாகவே சென்றிடுகையில் ராஜவனம் வனத்தின் மீதான மையலிலே பெரிதும் கழிகிறது என நினைக்கிறேன். பிரசாந்த் வே அவர்களின் அக்கறை என்பது காடுகள் ஆக்கிரமிப்பும் அதன் வழியாக வரும் காடழிப்பும் அதன் மீதான கவலையுமாக நமக்குள் கேள்விகளை விதைக்கிறது என்றால் ராம் தங்கம் அவர்களின் ராஜ வனம் காடுகளை கொண்டாடுகிறது, அதன் உயிரியல் தன்மையை கொண்டாடுகிறது, காடுகளை உயிராக மதித்த ஒரு மனிதனை கொண்டாடுகிறது. இரண்டும் மிக தேவையே.
காடர் தொகுப்பில் தெறிக்கும் அரசியல் ராஜ வனத்தில் ஊடு பாவாக இருக்கிறது. ஆனால், இரண்டிலும் வனம் அவர்களை வசீகரித்திட்ட தன்மை எழுத்துக்களில் அப்படியே வருகிறது. மேலும், பிரசாந்த் வே அவர்கள் காடுகள் மீதான நியாயமான அக்கறையில் எழுதவேண்டி வந்தது போலவும், ராஜ தங்கம் காடுகளின் மீதான இயல்பான மையல் காரணமாக எழுத வேண்டி வந்தது போலவும் எனக்குத் தோன்றுகிறது.
வனம் என்பது என்னவென்று அறியாத ஒரு சாதாரணனுக்கும் வனம் என்னும் மாய மகோன்னத நிலப்பரப்பை, அங்கு இருக்கும் தொடர்புறு உயிரியல் இருப்பை, எல்லையில் இருந்தாலும் காட்டின் தேவையை உணர்ந்தவர்களுக்கும், அதை நாடி நிற்பவர்களுக்குமான காடோடிகளின் நிலையை, வாழ்வியலை படம் பிடித்து காட்டுகின்றன காடரும், ராஜ வனமும். பிரசாந்த்.வே மற்றும் ராம் தங்கம் இருவருக்கும் முதல் படைப்பு என நினைக்கிறேன். இருவருக்கும் வாழ்த்துகள்.
இன்னமும் இலக்கிய படைப்புகளின் அட்டைகளில் மெனெக்கடாமல் இருப்பவர்களை என்ன சொல்வது? காடரும், ராஜ வனமும் அட்டைகளின் வழியேவும் நம்மை ஈர்க்கின்றன படைப்பை நோக்கி.
வனம் என்னும் மாய ஆனால் நிஜ உலகை தரிசிக்க விரும்புவர்கள், அவசியம் ராஜ வனம், காடர், காடோடி வாசித்திடுங்கள்.
Comments