வணக்கம் தோழர் லெனின் அவர்களே! யார் சொன்னது நீங்கள் இறந்துவிட்டதாக? இறந்த பின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாக நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராக நீங்கள்!
இப்படி ஆரம்பித்து பாய்ச்சல் வேகத்தில் ஒரு 32 பக்கங்களில் ஒரு மாமேதையின் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளையும் வெகு சுவைபட சொல்லி நிற்கும் புத்தகம் இது. அநேக வகைகளில் வாழ்க்கை வரலாறுகள் நாம் படித்திருப்போம். அறிஞர் சாமிநாத சர்மாவின் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு தொடங்கி எண்ணற்றோரின் வாழ்க்கை வரலாறு ஆக்கங்கள் நாம் வாசித்திருப்போம். குறிப்பாக தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்களின் statistics வகை, தோழர் அருணன் அவர்களின் அழகிய தமிழ் வகை, சமீபத்தில் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய சிறார்களுக்கான மார்க்ஸ் லெனின், தோழர் சுப்பாராவ் அவர்களின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பல வகைகளில் ஏராளனமானவற்றை படித்திருப்போம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எழுதப்படும் தலைவரையே விளித்து அவருடன் பேசும் வகையிலான என மாறுபட்ட வகை வாழ்க்கை வரலாறு இது.
என்னவென எழுதுவது வாசிப்பு அனுபவத்தை? ஒரு 3d பிம்பமாக ஹாலோகிராம் வடிவில் காம்ரேட் லெனின் அவர்கள் முன் நின்று அவருக்கே அவரின் வாழ்க்கை வரலாறு சொல்லும் பரவச அனுபவம். மாமேதை லெனின் அவர்கள் வாழ்க்கை வரலாறு பலவும் இருக்கிறது, வாசித்திருப்போம். அதைவிட என்ன தகவல்கள் கூடுதலாக இருந்திட போகிறது, இல்லையேல் இவை அனைத்திலும் வாராத செய்திகள் நிகழ்வுகள் இதில் இருக்கிறதா என்ன படித்தே ஆக வேண்டியது என நீங்கள் நினைக்க என என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் என் விடை ஒன்றே ஒன்றுதான், “வாசியுங்கள் புரியும்” என்பதே.
வெகு சுவாரசியமாக ஆற்றொழுக்கமாக சரளமாக என சொல்வார்களே அவ்வகையில் நம் கை பிடித்து நம்மோடு தோழர் லெனின் அவர்களையும் இணைத்து அவரின் பிறப்பு முதல் சிந்தனை நின்ற அந்தப் பெரும்பொழுது வரை கூட்டிச் செல்கிறார் சாலையோரன். தோழர் லெனின் அவர்களுடன் பயணம் என்பது எவருக்கும் கசக்குமா என்ன? நம் பாரதி சொன்ன யுகப்புரட்சி நாயகன் அல்லவா அவர்.. ஆமாம் படித்து முடித்தபின் பரவசத்துடன் ஒவ்வொருவரும் சொல்வார்கள், “லால் சலாம் காம்ரேட்! லால் சலாம்!”.
பாரதி புத்தகாலயம் ஏனோ இதன் மறுபதிப்பை 2009க்குப் பிறகு வெளியிடவில்லை. ஏன்? சாலையோரன் என்னும் அத்தோழர் யார்? ஏன் அவர் வேறு எதுவும் எழுதவில்லை? அவருக்கு தோழமை சல்யூட். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பொதுவுடைமை தோழர்களே வாரத்தில் ஒரு பதிவேனும் நீங்கள் வாசித்து ரசித்த புத்தகங்களை குறித்தும் நீங்கள் மற்றவர்கள் படிக்க சிபாரிசு செய்யும் ஒரு புத்தகம் குறித்தேனும் எழுத முயலுங்கள். பாரதி புத்தகாலயம் போன்ற நிறுவனங்கள் 2000 என அந்த குறுகிய (பல காலமாய் தேங்கி நிற்கிற) அந்த எண்ணிக்கை தாண்டி ஒரு 5000 எனவாவது பிரசுரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
Comments