தாழிடப்பட்ட கதவுகள், தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு. 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு. ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை
சமூகத்தின்
மீதான தாக்குதலாகவே இருக்கிறது. கோவை கலவரமும் அப்படியே.
இந்துத்துவ தீய சக்திகள் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போட்டியில் பெரும்பான்மையான இந்துக்களை அதுநாள் வரை இணக்கம், சகோதரத்துவம் பாராட்டியிருந்தவர்களை
சிதைத்து எதிரிகளாக மாற்றுவது கோவை, குஜராத், மும்பை என நெடுக நடந்திருக்கிறது.
தாழிடப்பட்ட
கதவுகள். கதவுகள் என்றிருந்தாலும் அவை திறந்திருக்கும்போதுதான் அங்கே மகிழ்ச்சி, இயல்புத்தன்மை
இருப்பதாக தமிழ்ச்சமூகம் நம்புகிறது என நினைக்கிறேன். ஒரு வீடு தாழிட்டு இருந்தால்
அங்கே ஏதோ சரியில்லையோ என சந்தேகிக்க வைப்பதும் உண்டு. இன்று அந்த நிலையில்லை. ஆனால்,
ஒரு 20 வருடங்கள் முன்பெல்லாம் வீடுகளின் கதவுகள் பகல் முழுவதும் திறந்தே இருக்கும்.
அவ்வகையில் தாழிடப்பட்ட கதவுகள் என பெயர்க்காரணமும் சிறப்பே. மரணங்கள் எல்லாக் கதைகளிலும்.
மரணங்கள் கலைத்து போட்ட வாழ்விற்கு பின்னான எதிர்காலத்திற்கான அச்சமும், மனிதமும் எல்லாக்
கதைகளிலும் இழையோடுகிறது.
இச்சிறுகதை
களம் என்பது எதிர்பார்த்ததுதான். வெண்மணி என தலைப்பு வைத்துவிட்டு அங்கே என்ன பயிர்
விளைந்தது, கோபாலகிருஷ்ண நாயுடுவின் புஜபல பராக்கிரமங்களை எவரும் எழுதுவார்களா என்ன?
அவ்வாறே கோவை கலவரம் என்னும்போதே கதைக்களமும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அ.கரீம்
கதை சொல்லும் பாங்கு சிறப்பு. கதைக்குள் அவரது மொழி நடை, படுகொலைக்குப் பின்னான காலங்களில்
பழக்கவழக்கங்கள் மாறுபாடு குறித்த அவதானிப்புகள், நுணுக்கமான செய்திகள் என்பவையே இச்சிறுகதை
தொகுப்பினை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.
சம்சுதீன்
ஹீராவின் மௌனச் சாட்சியங்களே அநேகமாக கோவை கலவரங்கள் குறித்த முதல் இலக்கியப் பதிவு
என நினைக்கிறேன். தாழிடப்பட்ட கதவுகளில் சம்சுதீன் ஹீரா மௌனச் சாட்சியங்களில் பெண்
காம்ரேட் என ஒருவரை வைத்து ரொமாண்டிசிஸம் வலிந்து திணித்திருப்பது போல் எனக்குப் பட்டது.
அது அந்த நாவலின் யதார்த்த களத்தை ஏதோ தொந்தரவு செய்தது போல் எனக்குத் தோன்றியது. பலருக்கு
அவ்வாறு இல்லை என்பது சம்சுதீன் ஹீராவின் முகநூல் வாயிலாக தெரிகிறது. அ. கரீமிடம் அவை
இல்லை. யதார்த்தம் அப்படியே பொதிந்திருக்கிறது.
சம்சுதீன்
ஹீரா, அ. கரீம் இரண்டு பேரிடமும் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அது நீங்கள் இருவரும்
இணைந்தோ அல்லது தனியாகவோ கோவை கலவரத்தில் வாழ்விழந்தவர்கள், வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானவர்களை,
கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் பக்கம் இருந்து அநீதி இழைத்தவர்கள்,
தவறான பாதையில் சென்ற இஸ்லாமியர்கள், காவலர் உடையில் இருந்த கடமை தவறியவர்கள் என இவர்களை
அடையாளம் கண்டு ஒரு வாய்மொழி வரலாறு படைத்தால் என்ன? முடிந்தால் அந்தோணி செல்வராஜ்
என வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒருவரது வாழ்க்கையை பதிந்தால் என்ன? பாரதி புத்தகாலய வெளியீடான
அப்பணசாமியின் வெண்மணி வாய்மொழி வரலாறு அப்படியான புத்தகம். இன்றும் அதுவே நேரடி கள
சாட்சியம்.
கடைசியாக,
அது 2002-2004 காலம். நான் உதகையில் பணிபுரிந்த போது வார விடுமுறை நாட்களில் கோவையில்
தான் இருப்பேன். காந்திபுரத்திலிருந்து கிராஸ் கட் ரோடு வழியாக பல சமயங்களில் நடந்தே
விஜயா பதிப்பகம் சென்றிருக்கிறேன். பின்னும் விஜயா பதிப்பகத்திலிருந்து நடந்தே உக்கடம்
பழைய புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறேன். அந்த மணிகூண்டு இருக்கும் சாலையின் ஒரு மூலையில்
எப்போதும் இருக்கும் மணல் மூட்டையோடு ராணுவ பங்கர் ஒன்றில் சில வட இந்திய காவலர்கள்
அங்கே இயல்புத்தன்மையை குலைத்தவர்களாக இருந்தார்கள். கலவரங்கள் நடந்த 10 ஆண்டுகளுக்கு
பின்னரும் அந்த இராணுவ பங்கர் போன்ற ஒன்று ஏதோ சரியில்லை என்பதற்காகவா, இங்கே ஏதோ ஒன்று
இனி நிகழ்ந்து கொண்டே இருக்கப் போகிறது என்பதற்கு சான்றாகவா என்பது தெரியவில்லை. புதிதாக
அல்லது வருபவர்கள் அனைவரையும் உற்று உற்றுப் பார்ப்பதும், நான் கை கொள்ளும் ஜோல்னா
பை அவர்களை உறுத்துவதும் அசூயையானது. இது தினந்தோறும் நிகழ்வானால் எப்படி?
ஒரு
காலத்தில் ஆலைகள், ஆலைகளால் கம்யூனிஸ்டுகள் என்றிருந்த நகரங்கள் பின்னான காலத்தில்
ஆலைகள் முடப்படுகையில் தீவிர வலதுசாரிகளிடம் வசமாவது ஏன் நிகழ்கிறது? அந்த கம்யூனிஸ்டுகள்
என்ன ஆனார்கள்?
Comments