நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...
நியாய விலைக்கடைகளை அரசு நடத்துவது என்பதே பொருட்கள் வெளிச்சந்தையில் நியாய விலைக்கு கிடைப்பதில்லை என்கிறபோது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுப்பது என்பது வெளிச்சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் மோசமான நிலைக்கு மக்களை தள்ளும்.
வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை குறைக்கவுமே அரசு தொடர்ந்து நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது என்ற நிலையில் தற்போது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் தருவதென்பது மேலும் வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை அரசே ஊக்குவிப்பதாக இருக்கும். புதுவையில் தானே புயல் தாக்கப்பட்டபோது புதுவை அரசின் பான்லே பால் அதன் பார்லர்களில் மட்டுமே அதன் உரிய விலையில் கிடைக்க, வெளிச்சந்தையில் ஈவு இரக்கமில்லாமல் ரூ. 40க்கும் ரூ. 50க்கும் விற்றதே இதற்கு சாட்சி.
நியாய விலைக்கடை என்பது வெளிச்சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறும்போதும், சாதாரண மக்களுக்கு அதன் பாதிப்பினை தவிர்த்து மக்களை காக்கும் அருமருந்தாக இருக்கும்போது, பொருட்களுக்கு பணம் என்ற நிலை வந்தால் நாளும் ஏறும் விலைவாசியில் மக்களை காக்க அரசின் வசம் எந்தத் திட்டமும் இல்லை.
நியாய விலைக்கடையில் பொருட்களுக்கு பதிலாக பணம் என்பது அப்பணம் அப்பொருட்களை வெளியில் வாங்குவதற்காகத்தான் பயன்படுகிறது என்பதை எப்படி கணக்கிட முடியும்? ஒரு உடனடி மருத்து சேவை உள்ளிட்ட வேறு தேவைகளுக்கு மக்கள் அப்பணைத்தினை செலவு செய்துவிட்டால், பின் எப்படி பொருட்கள் வாங்குவது? மேலும், புதுவை மாநிலம் போன்று மது அருந்துவது என்பது வீட்டிலுள்ள ஆண்களிடம் ஒரு பெரிய மோசமான பழக்கமாக இருந்து வரும் நிலையில் பொருட்களுக்கான பணம் என்பது மது அருந்துதல் போன்ற விஷயங்களுக்காக செலவிடப்படாமல் இருக்க அரசு உத்தரவாதம் ஏதும் தர இயலா நிலையில், பொருட்களுக்கான பணம் என்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு உரிய பொருட்களின் திருட்டை தவிர்க்க முடியவில்லை என்று சொல்லி அதனால்தான் நேரடியாக அப்பொருட்கள் வாங்குவதற்கான பணத்தை தருகிறோம் என்று சொல்லும் அரசு, இதில் மட்டும் ஊழலினை தவிர்க்க முடியும் என்பதை எப்படி சொல்கிறது?
நாளும் ஏறும் விலைவாசிக்கேற்ப நாங்கள் பணத்தின் மதிப்பையும் ஏற்றித் தருவோம் என்று அரசு கூறுவதை நம்ப முடியாமல் இருப்பதற்கு, அரசின் மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கூலித்தொகையே சாட்சி. விலைவாசி விஷம் போல் ஏறும்போதும், ஊரக வேலைத்திட்டத்தின் கூலித்தொகை அப்படியொன்றும் உயரவில்லை என்பது நிதர்சன உண்மை.
நியாய விலைக்கடைகளில் அரசு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரித்தான விலை கொடுத்து கொள்முதல் செய்து மக்களுக்கு பொருட்களை கொடுத்து வருகிறது. இப்போது மக்களுக்கு பொருட்கள் இல்லை பணம் என்றானால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரித்தான விலை அரசு கொடுக்காது, கொள்முதலும் செய்யாது விவசாயிகளை முற்றாக கைவிடும். ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்ட 21/2 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் போன்றே நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறதா என்பது கேள்வி? விவசாயிகள் விவசாயத்தினை கைவிடும்போது, நாட்டில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி, பஞ்சம் பட்டினி போன்ற பாதக சூழ்நிலையினை நாட்டில் அரசே உருவாக்கும்.
பொருட்களை நேரடியாக வாங்குவதற்கு படிப்பறிவோ, தொழில்நுட்பமோ தேவையில்லை. வீட்டிலுள்ள யாரும் வாங்கலாம். ஆனால் வங்கிகளில் அப்படியல்ல. படித்த மக்களே வங்கியில் பணம் எடுக்க மிகவும் சிரமப்படும்போது, கல்வியறிவில்லாதவர்கள், கிராமப்புற மனிதர்களின் நிலை என்ன ஆகும்? மேலும், வங்கியில் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க்ப்படும் என்பதால், தினக்கூலிக்கு செல்லும் மக்கள் தங்கள் ஒரு நாள் கூலியினை இழந்து தவிக்கும் நிலைக்கு அரசே தள்ளலாமா?
நியாய விலைக்கடைகள் நகரத்தின் பல முக்கிய பகுதிகளிலும், எல்லா கிராமங்களிலும் என எண்ணிக்கையில் நிறைய இருக்கும். ஆனால், வங்கி வசதிகள் அப்படியில்லை என்கிறபோது மக்கள் பணத்தை எடுக்க மிகவும் சிரமப்பட நேரிடும். மேலும் வங்கி ஊழியர்கள் ஏற்கெனவே அதிகமான வேலை பளுவில் தவிக்கும்போது, இந்த வேலையும் சேர்ந்தால், சேவை பாதிக்கப்படாதா? அரசு இதற்கு என்ன பதில் தரப்போகிறது. தன் வீட்டிற்கு அருகில் ரேஷன் கடைகள் இருக்குபோது தொலைவில் இருக்கும் வங்கிகளுக்கு போ என்று அரசு சொல்வது பொருத்தமற்றது. சமீபத்தில் சந்தைபுதுக்குப்பத்தில் நடந்த சாதி மோதலுக்குப் பின்னர் தலித் பகுதியில் தனியே ரேஷன் கடை துவக்கப்பட்டு அவர்களின் பசியை போக்கியது அரசு. இதுபோன்ற புறசூழ்நிலைகளில் அரசின் இத்திட்டம் தோல்வியில் முடியும் என்பது உறுதி.
மாதாமாதம் தரவேண்டிய முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன் போன்றவையே பல நேரங்களில் காலதாமதம் ஆகின்றபோது, ரேஷன் பணம் தாமதமாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மத்திய அரசிடமிருந்து உரிய நிதி கிடைக்காமல் பல்வேறு மாநில அரசுகள் சிரமப்பட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு அடைவதை நாம் நன்றாக அறிவோம். புதுவை அரசு ஒவ்வொருமுறையும் நிதி கிடைக்க எவ்வளவு சிரமப்பட்டு, பல சமயங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் கூட பல மாதங்கள் தாமதமாகின்ற நிலையில், ரேஷன் பொருட்களான பணம் என்ற திட்டத்தின் நிலை என்னவாகும்?
தலித் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் போன்றவற்றின் நிதி கூட வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடப்படும்போது, இத்திட்டத்திற்கான நிதியும் திருப்பிவிடப்படாது என்பதற்கு அரசு உத்தரவாதம் தருமா?
நியாய விலைக்கடைகளில் இன்னின்ன பொருட்கள் இன்னின்ன நாளில் கிடைக்கும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு மக்களுக்கு சேவை கிடைக்கின்றபோது, வங்கிகளில் எப்போது பணம் இடப்படும் என்பதற்கு ஏது அறிவிப்பு?, என்ன ஏற்பாடு என்பதை அரசு தெளிவுப்படுத்திய பின்னரே திட்டத்தை அமுல் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுகள் கொண்டு பயனாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று மத்திய அரசு சொல்வது இன்னும் ஆதார் கார்டுகள் நாடு முழுவதும் சென்றடையவில்லை, ஏன் வடகிழக்கு மாநிலங்களில் துவங்கவேயில்லை என்னும் போது, அரசின் கூற்று பம்மாத்தாகிறது. புதுவையில் உரித்தான பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் அட்டைகள் போய் சேரவில்லை என்பதும், போலியான சிவப்பு ரேஷன் அட்டைகள் குறையவில்லை என்பதும் இன்றும் உண்மையாக இருக்கும்போது பொருட்களுக்கான பணம் என்ற திட்டம் போலியானது, உரிய மக்களுக்கு போய்ச் சேராது என்பதும் தெளிவு.
அரசு மக்களுக்கு பொருட்கள் கொடுக்காமல் பணம் கொடுக்கும்போது, அது பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கவேண்டிய தேவையில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை இனி அரசு வாங்காது. அப்போது FOOD CORPORATION OF INDIA வின் கிடங்குகளில் இனி எம் மக்களுக்கு கிடைக்காத உணவு தானியங்கள் வழக்கமாக சாப்பிட்டு வரும் எலிகளுக்கும் இல்லை. ஏனென்றால் FCIதான் மூடப்படுமே. பேரிடர் காலங்களில் (காத்ரீனா புயல் தாக்கிய போது கையறு நிலையிலிருந்த அமெரிக்க அரசு போல) நமது அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்.
இந்த விஷயங்கள் அரசுக்கு தெரியாததல்ல. திட்டமிட்டே மத்திய கார்ப்பரேட் அரசு இதை செய்துவருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனைகள் துவங்கிய போது அதற்கு இலவசமாக 99 வருஷத்திற்கு நிலம் தந்து அது இறக்குமதி செய்யும் மருந்துகள், உபகரணங்களுக்கு வரிவலுக்கு என சலுகைகளை அவர்கள் தங்கள் மருத்துவமனையின் படுக்கைகளில் 25% படுக்கைகளை சமூகத்தில் அடித்தள மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற சரத்தின் கீழ் தந்தது. ஆனால் நிலைமை என்ன என்பது நாம் அப்போலோ, மியாட் உட்பட பகாசுர மருத்துவமனைகளை பார்த்தாலே தெரியும். எங்களால் உங்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தர இயலாது, ஆனால் உங்களுக்கு தனியார் மருத்துவமனைகளை திறக்க அனுமதி தந்து அவர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள் என முதலில் மக்களுக்கான அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு கைவிட்டுவிட்டது.
பல்வேறு போராட்டங்கள், பல வருட கோரிக்கைகளுக்கு பின்னர் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. அதில் மேலும் அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளில் 25% சதமான இடங்களை சமூக அடித்தட்டு மக்களுக்காக என ஒதுக்கி கல்வி என்னும் மக்களின் அடிப்படை உரிமையையும் அரசு கைவிட்டுவிட்டது.
இதோ அடுத்த அடிப்படை உரிமை பறிப்பாக ரேஷன் பொருட்களையும், ரேஷன் என்ற ஏற்பாட்டினையும் அரசு காவு கொடுக்க தயாராகிவிட்டது. டெல்லி மாநிலம் துவங்கி படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் சோதனை ஓட்டம் பார்த்து எங்கள் ஊர் புதுவையிலும் வந்துவிட்டது. ரேஷனில் இனி மண்ணெண்ணைக்கு பதிலாக பணம் கொடுப்பார்களாம். அதுவும் அவர்களின் வங்கி கணக்குகளில் இடப்படுமாம். நமது அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கார்பரேட் கூலி பிரனாப் முகர்ஜி வகையறாக்கள் சந்தோஷப்படுவார்கள்.
நண்பர்களே, நாமும் நமது பிரதமர் மௌன(கபட)முனி திருவாளர் மன்மோகன் சிங் போல் அமைதி காப்பது சரியா?