Skip to main content

கொடி காட்ட வந்தவன் - சிறார் நாவல்

 கொடி காட்ட வந்தவன் – இந்நூலினை வாங்க முன்பதிவு செய்யுங்கள் என விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஆதி வள்ளியப்பன் என முகநூலில் இட்ட மாத்திரமே முடிவு செய்து புத்தகத்தை முன் பதிவு செய்து பெற்றேன். நேற்றுதான் இப்புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. இடையில் இவர்களின் முகநூல் பக்கத்தில் இப்புத்தகத்தின் அறிமுகவிழா நடந்ததையும் அதில் பேசியவர்கள் பேச்சு காணொளியாக கிடைப்பதையும் போட்டிருந்தார்கள். அதில் எழுத்தாளர் பாலபாரதியும் இடம் பெற்றிருந்தது வேறு இன்னும் சுவாரசியத்தை கூட்டியது.

அப்புறம் என்ன, வந்து சேர்ந்த உடனே வாசிக்க துவங்கினேன். சின்ன புத்தகம் தான். வாசிக்கவும் எளிது. நடையும் சரளமாக இருந்தது. இப்புத்தகத்திற்கும் எனக்கும் ஒரே வயது. புத்தகம் கூட மறுபதிப்பு கண்டுவிட்டது. புத்தக வாசிப்பு அனுபவத்திற்கு போவதற்கு முன் இப்புத்தகத்தை தேடி கண்டடைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறார் நூலாசிரியர் ரேவதி அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அனுபவமாக இது இருந்திருக்கும்? நினைக்கையிலே சிலிர்க்கிறது.

ஒரு அரசியல் வரலாற்று நிகழ்வுப்போக்கினை குழந்தைகளுக்கு எப்படி கடத்துவது? காந்தி என்ற தனிமனிதர் அல்லர், காந்தியின் சிந்தனைகள், அவரின் கொள்கைவழி செயல்பாடுகள் என அவற்றை எப்படி எளிதாக குழந்தைகளிடம் கடத்துவது அதுவும் சுவாரசியமாக என கேட்டால் இந்நூல் அதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு. பாலமித்ரா, அம்புலிமாமா படித்தவர்களுக்கு பழக்கமான அதே எளிய சொல்லாடல், சிறு வாக்கியங்கள் என அதே உத்திதான். ஆனால் மிகவும் சக்தி வாயந்த ஒரு உத்தி. இன்னமும் 25 வரிகள் சேர்ந்தாற் போல் இருக்கிற ஒரு பத்தியை படிக்க கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ ஒரு அயர்ச்சியை தருகிறது, பார்க்கையிலேயே. 50 வயதை நெருங்கிவிட்ட எனக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என நான் நினைத்திருக்கிறேன். பல நேரங்களில் என் பார்வை கொண்டு சிறார் வாசிப்பு அனுபவத்தை அணுகி மொக்கை வாங்குவதும் உண்டு.

அதிசயங்கள் நீத்துப் போய் விட்ட வாழ்வு என்னவாக இருக்கும்?! வியந்து போகாத மனித இனம்.. நினைத்தே பார்க்க முடியவில்லை. ஆனால் சோஷியல் மீடியா காலம் அப்படியாகத்தான் இருக்கிறதோ என நான் அஞ்சுகிறேன். காலம் இப்படியிருக்க, பூமர் ஆகிய நான் இப்புத்தகத்தின் செய்திகளை வியந்து வியந்து படித்தேன். தெரிந்த செய்திகள் தான், ஏற்கெனவே வாசித்து அறிந்தவை தான். ஆனால் திரும்பி பார்க்கையில், என்னவெல்லாம் இந்த மண்ணில் நடந்தேறியிருக்கிறது,, எவ்வளவு தூரம் முன் சென்றிருக்கிறோம், எட்ட தொலைவு இன்னும் பல பல மடங்கு என்ற போதிலும், எட்டு வைத்திருக்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்க செய்கிற ஒரு புத்தகம்.

புத்தகம் வாசித்து மகிழ்ந்து போன அதே நேரத்தில், தோழர் ஆதி வள்ளியப்பன் எழுத்தில் லெனின் குறித்தும் மார்க்ஸ் குறித்தும் அவர் சிறார்களுக்கென எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட அந்த சிறப்பு நூல்களும் நினைவில் வந்து போனது. பாரதி புத்தகாலயம் அதை தொடர் வேண்டும். கொடி காட்ட வந்தவன் நூல் பதிப்பித்த கதைவண்டியும் இப்பணியை தொடர் வேண்டும்.

கொடி காட்ட வந்தவன் கையில் சேர்த்தமைக்கு அருமை தோழர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றி. மற்றுமொரு சிறார் இலக்கிய முன்னத்தி ஏரினை கண்டறிந்தமைக்கும் நன்றிகள், கதை வண்டி பதிப்பகத்தாருக்கு.


#புத்தகம் #சிறார்நாவல் #சிறார்இலக்கியம் #கொடிகாட்டவந்தவன் #காந்தி #கதைவண்டி #தமிழ் #வாசிப்பு

 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

குரங்குபெடல் - review

  குரங்கு பெடல் – இரண்டு நாட்கள் முன்பு பார்த்த படம். முதலிலேயே சொல்லிடறேன். அந்த லாங் ஷாட் , டிரோன் ஷாட் என்பதாக தொடங்கி விஎபெக்ஸ் சரியில்ல என்பது மாதிரியான சினிமா மொழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் எல்லாம் ஒரு சராசரி தமிழன் , சினிமாவும் முக்கியமான உலகம் என்று நம்புகிறேன். அதன் மாயாஜாலத்தில் மகிழ்ந்து போகிறேன் , அவ்வளவே. Disclaimer எல்லாம் முடிஞ்சு , இனி விஷயத்துக்கு வருவோமா.. உண்மையிலேயே என்னை மாதிரி 80 களின் மக்களுக்கு இன்ப நினைவலைகளை இனிமையாய் மீட்டு கொடுக்கும் , எனக்குக் கொடுத்த திரைப்படம் தான் குரங்கு பெடல். நான் ஒன்னும் கிராமத்தில் வளர்ந்தவன் இல்லை. ஆனால் காஞ்சிபுரம் மாதிரியான ஒரு டவுனில் எங்களுக்கு ஒரு குசால் சா இருந்தார் , அவர் ஹவர் சைக்கிள் வச்சிருந்தார் , நாங்களும் ஓட்டி இருக்கோம் , பந்தயம் வைச்சிருக்கோம் , விழுந்து முட்டி எல்லாம் பேத்து இருக்கோம் , பார்த்துக்குங்க.   சைக்கிள் … அதுதாங்க வாகனம். நம்ம மனசறிந்து நடக்கும் ஒரே வாகனம் அதுவே. இன்னைக்கு வரை அரை டிரவுசரில் இருக்கும் குசால் சா அப்போது வகை வகையாய் சைக்கிள் வைத்திருந்தார். வேகவதி பாலத்தின் கரையோரத்...