Skip to main content

காதலிக்கு ரோஜா, காதலனுக்குப் புத்தகம்...






முந்தைய இரண்டு வாரங்களில் புதிய புத்தகங்கள் படிக்காதவருடைய உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை.
- சீனப் பழமொழி.


புத்தகத்தைப் பெறுவதற்குச் சில உபாயங்கள் இருக்கின்றன என்று தமது நூலுக்கான முன்னுரை ஒன்றில் இப்படி எழுதுகிறார் எழுத்தாளர் கல்கி; “முதலாவது இரவல் வாங்குவது. இரண்டாவது யாரிடமிருந்தாவது திருடி எடுத்து வருவது. மூன்றாவது காசு கொடுத்து வாங்குவ்து. ஆனால், பெரும்பாலானோர்க்கு இந்த கடைசி உபாயம் சித்திப்பதில்லை”.

கல்கியின் நையாண்டியை ரசிப்போம். ஆனால், எப்படியாவது ஒரு வழியில் படிக்கிற ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள் என்பதுதான் வாசிப்பு இயக்கத்துகாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.


புத்தக வாசிப்பு உள்ளபடியே ஓர் இனிமையான அனுபவம் என்றும், நமக்குள்ளேயே நாம் துவக்கும் ஒரு ரசமான பயணம் என்றும் கண்டுபிடித்து விடுபவர்கள் வாசிப்பை விடவேமாட்டார்கள்.


எழுத்துக்களை முதன்முதலாகச் சமைத்தவர்களை வணங்கத் தோன்றுகிறது. தற்செயலாகத் தனது கருவிகள் மண்ணிலோ, பாறையிலோ பட்டுக் கீறியதிலிருந்து சித்திரங்களை உருவாக்கியவர்கள் உழைப்பாளி மனிதர்களே. சித்திர வடிவங்கள் ஏதோ ஒரு இறுக்கம் கலைந்த நாளில், ‘ஜெம்’ கிளிப்பைப் பிரித்து போட்ட மாதிரி, தன் உருவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று ஆர அமர கை, கால்களை நீட்டி வெவ்வேறு கோணங்களில் எழுத்துக்களாக மலர்ந்திருக்கக்கூடும். சித்திர வடிவாகவே இருக்கிற எழுத்துக்கள் சில மொழிகளில் நீடிக்கவே செய்கின்றன. பேசு மொழியும், எழுத்து மொழியும் முதன்முதல் நிகழ்த்திக் கொண்ட சந்திப்பின் இசை நிச்சயம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும்.

காற்றின் விசித்திர நுட்பத்தால் ஒலிகளை எழுப்பத் துவங்கிய மனிதர்கள் அவற்றை மொழியாக உருவாக்கிய காலத்தைப் போலவே, எழுத்தின் உருவாக்கமும் அதற்கான மனித உழைப்பும் பெருமிதம் நிறைந்தவை.


பனையோலைகளில் எழுத்துக்கள் பதிந்ததை, செல்லரித்ததாக வேடன் பாடுகிற கலம்பகப் பாடல் (“பேச வந்த தூத, செல்லரித்த ஓலை செல்லுமோ..”) உழைப்பாளி மக்களிடமிருந்து எழுத்துக்கள் விலகிவிட்ட காலத்தைக் காட்டுகிறது. ஆதிக்க சக்திகளின் வேரூன்றிய காலம், பெரும்பகுதி மக்களை அறியாமையில் அழுத்திய காலமாக அறியபட வேண்டியது. ஆனால், பண்டிதர்களையும், மேதாவிகளையும் விஞ்சிய கதையாடல்களையும், சொல்லாட்ல்களையும் கால காலமாக மரபணுக்களில் தேக்கிய மக்கள் இருக்கவே செய்கின்றனர் நாட்டுப்புறங்களில்.


நாகரிகத்தின் வளர்ச்சியில் அவர்களது பதிவுகள் பின்னர் அறிவுஜீவிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறதையும் காலம் மௌன புன்னகையோடு கடந்து போய்க் கொண்டிருக்கிறது.


வாய்ப்பற்ற மக்களும் இன்று வாசிப்பின் வாசலில் பெருகும் வேளையில், வாசிக்க இயலுவோர் புத்தகங்களைக் கொண்டாட முன்வாருங்களேன் என்ற கோரிக்கை முழக்கதைத் தான் உலக புத்தக தினம் எழுப்புகிறது.


1923ல் ஸ்பெயின் நாட்டில் ‘கெட்டலோனியா’ நகரின் புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதியை புத்தக தினமாக்கும் முன்மொழிவைச் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.


புனித ஜார்ஜ் தினமாக அந்த நாள் ஏற்கனவே அந்தப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்திருந்தது. அந்த நாளில் ஆண்கள் தமது காதலிக்கு ரோஜாவைப் பரிசளித்து அன்பைப் பரிமாறுவது வழக்கம். 1925லிருந்து ரோஜா அளித்த காதலனுக்கு, பெண்கள் இந்த நாளில் புத்தகத்தைப் பதில் பரிசாக வழங்கத் துவங்கினார்கள். ஆண்டு முழுவதும் விற்பனையாகிற புத்தகங்களில் பாதி ஏப்ரல் 23 சமயத்தில் விற்கப்பட்டு விடுகிற கேட்டலோனியாவில், 40 லட்சம் ரோஜாக்களுக்கு ஈடாக 4 லட்சம் புதிய புத்தகங்கள் கை மாறுமாம்.

1985ல் யுனெஸ்கோ நிறுவனம் உலக புத்தக தினத்தையும், புத்தக உரிமை தினத்தையும் ஏப்ரல் 23ல் அனுசரிப்பதென முடிவெடுத்தது. அதற்கு முக்கிய காரணம், இந்த தினம், நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம்! அவரது நினைவு தினமும்கூட. வேறு சில முக்கிய படைப்பாளிகளின் நினைவு தினமுமாகப் பதிவாகி இருக்கிற ஏப்ரல் 23, புத்தகங்களுக்கு மட்டுமல்ல, புத்தக வாசகர்களுக்கும் கொண்டாட்ட நாள்தான். படைத்துக் காட்டுகிற உழைப்பாளியிடம் படித்துக் காட்டுகிற சேவையைச் செய்தவர்கள் நம் முன்னோர்.

பார்வையற்றோரும் பயில மொழி உருவாக்கப் பட்டுள்ள உலகில் விழியின் பயனை வாசிப்பில் தேடச் சொல்கிறது புத்தக தினம்.


புத்தகங்களைக் கொண்டாடுங்கள்!


எஸ். வி. வேணுகோபாலன்.
( bank workers unity, ஏப்ரல், 2009 )

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...