

முந்தைய இரண்டு வாரங்களில் புதிய புத்தகங்கள் படிக்காதவருடைய உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை.
- சீனப் பழமொழி.
புத்தகத்தைப் பெறுவதற்குச் சில உபாயங்கள் இருக்கின்றன என்று தமது நூலுக்கான முன்னுரை ஒன்றில் இப்படி எழுதுகிறார் எழுத்தாளர் கல்கி; “முதலாவது இரவல் வாங்குவது. இரண்டாவது யாரிடமிருந்தாவது திருடி எடுத்து வருவது. மூன்றாவது காசு கொடுத்து வாங்குவ்து. ஆனால், பெரும்பாலானோர்க்கு இந்த கடைசி உபாயம் சித்திப்பதில்லை”.
கல்கியின் நையாண்டியை ரசிப்போம். ஆனால், எப்படியாவது ஒரு வழியில் படிக்கிற ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள் என்பதுதான் வாசிப்பு இயக்கத்துகாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
புத்தக வாசிப்பு உள்ளபடியே ஓர் இனிமையான அனுபவம் என்றும், நமக்குள்ளேயே நாம் துவக்கும் ஒரு ரசமான பயணம் என்றும் கண்டுபிடித்து விடுபவர்கள் வாசிப்பை விடவேமாட்டார்கள்.
எழுத்துக்களை முதன்முதலாகச் சமைத்தவர்களை வணங்கத் தோன்றுகிறது. தற்செயலாகத் தனது கருவிகள் மண்ணிலோ, பாறையிலோ பட்டுக் கீறியதிலிருந்து சித்திரங்களை உருவாக்கியவர்கள் உழைப்பாளி மனிதர்களே. சித்திர வடிவங்கள் ஏதோ ஒரு இறுக்கம் கலைந்த நாளில், ‘ஜெம்’ கிளிப்பைப் பிரித்து போட்ட மாதிரி, தன் உருவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று ஆர அமர கை, கால்களை நீட்டி வெவ்வேறு கோணங்களில் எழுத்துக்களாக மலர்ந்திருக்கக்கூடும். சித்திர வடிவாகவே இருக்கிற எழுத்துக்கள் சில மொழிகளில் நீடிக்கவே செய்கின்றன. பேசு மொழியும், எழுத்து மொழியும் முதன்முதல் நிகழ்த்திக் கொண்ட சந்திப்பின் இசை நிச்சயம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும்.
காற்றின் விசித்திர நுட்பத்தால் ஒலிகளை எழுப்பத் துவங்கிய மனிதர்கள் அவற்றை மொழியாக உருவாக்கிய காலத்தைப் போலவே, எழுத்தின் உருவாக்கமும் அதற்கான மனித உழைப்பும் பெருமிதம் நிறைந்தவை.
பனையோலைகளில் எழுத்துக்கள் பதிந்ததை, செல்லரித்ததாக வேடன் பாடுகிற கலம்பகப் பாடல் (“பேச வந்த தூத, செல்லரித்த ஓலை செல்லுமோ..”) உழைப்பாளி மக்களிடமிருந்து எழுத்துக்கள் விலகிவிட்ட காலத்தைக் காட்டுகிறது. ஆதிக்க சக்திகளின் வேரூன்றிய காலம், பெரும்பகுதி மக்களை அறியாமையில் அழுத்திய காலமாக அறியபட வேண்டியது. ஆனால், பண்டிதர்களையும், மேதாவிகளையும் விஞ்சிய கதையாடல்களையும், சொல்லாட்ல்களையும் கால காலமாக மரபணுக்களில் தேக்கிய மக்கள் இருக்கவே செய்கின்றனர் நாட்டுப்புறங்களில்.
நாகரிகத்தின் வளர்ச்சியில் அவர்களது பதிவுகள் பின்னர் அறிவுஜீவிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறதையும் காலம் மௌன புன்னகையோடு கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
வாய்ப்பற்ற மக்களும் இன்று வாசிப்பின் வாசலில் பெருகும் வேளையில், வாசிக்க இயலுவோர் புத்தகங்களைக் கொண்டாட முன்வாருங்களேன் என்ற கோரிக்கை முழக்கதைத் தான் உலக புத்தக தினம் எழுப்புகிறது.
1923ல் ஸ்பெயின் நாட்டில் ‘கெட்டலோனியா’ நகரின் புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதியை புத்தக தினமாக்கும் முன்மொழிவைச் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
புனித ஜார்ஜ் தினமாக அந்த நாள் ஏற்கனவே அந்தப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்திருந்தது. அந்த நாளில் ஆண்கள் தமது காதலிக்கு ரோஜாவைப் பரிசளித்து அன்பைப் பரிமாறுவது வழக்கம். 1925லிருந்து ரோஜா அளித்த காதலனுக்கு, பெண்கள் இந்த நாளில் புத்தகத்தைப் பதில் பரிசாக வழங்கத் துவங்கினார்கள். ஆண்டு முழுவதும் விற்பனையாகிற புத்தகங்களில் பாதி ஏப்ரல் 23 சமயத்தில் விற்கப்பட்டு விடுகிற கேட்டலோனியாவில், 40 லட்சம் ரோஜாக்களுக்கு ஈடாக 4 லட்சம் புதிய புத்தகங்கள் கை மாறுமாம்.
1985ல் யுனெஸ்கோ நிறுவனம் உலக புத்தக தினத்தையும், புத்தக உரிமை தினத்தையும் ஏப்ரல் 23ல் அனுசரிப்பதென முடிவெடுத்தது. அதற்கு முக்கிய காரணம், இந்த தினம், நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம்! அவரது நினைவு தினமும்கூட. வேறு சில முக்கிய படைப்பாளிகளின் நினைவு தினமுமாகப் பதிவாகி இருக்கிற ஏப்ரல் 23, புத்தகங்களுக்கு மட்டுமல்ல, புத்தக வாசகர்களுக்கும் கொண்டாட்ட நாள்தான். படைத்துக் காட்டுகிற உழைப்பாளியிடம் படித்துக் காட்டுகிற சேவையைச் செய்தவர்கள் நம் முன்னோர்.
பார்வையற்றோரும் பயில மொழி உருவாக்கப் பட்டுள்ள உலகில் விழியின் பயனை வாசிப்பில் தேடச் சொல்கிறது புத்தக தினம்.
புத்தகங்களைக் கொண்டாடுங்கள்!
எஸ். வி. வேணுகோபாலன்.
( bank workers unity, ஏப்ரல், 2009 )
Comments