பாவேந்தர்
பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர்
கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும்
இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர்
வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை
எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும்
நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி
விருது வழங்கப்பட்டது.

”என்னருந்
தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று” என்கிற நம்
புரட்சிக்கவி பாரதிதாசனின் ஏக்கம் நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கழிந்த
பின்னரும் தொடரும் அவலமாக இருப்பதை என்னவென்று சொல்வது? பாவேந்தர் பாரதிதாசன் தன்
பாடல்களிலும், கட்டுரைகளிலும், நாடகங்களிலும் தொடர்ந்து அனைத்து நிலைகளிலும்
கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
“ஏழ்மையினால்
ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்” – நாணம்
என்பது இந்நாட்டு
பெண்களின்
அரும்பண்புகளில் ஒன்றாக சொல்லிக் கொண்டிருக்கும் மூடர்கள் நடுவே, ஒருவருடைய
கல்லாமை என்பது நம் தேசத்தின் நாணமாக கொள்ள வேண்டும் என்கிறார். பாண்டியன்
பரிசில், ஒரு படி சென்று,
”கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” – என்ற
கோபத்தை காட்டுகிறார். கல்வி பயிலும் வாய்ப்பில்லாதவர்க்கு கல்வி வழங்காத கயவர்களை
தூக்கிலிட வேண்டும் என்ற நம் பாவேந்தரின் கோபம் நம்முள் வேண்டாமா? 65 ஆண்டுகள்
கழிந்து, பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ந்து பலரால் நடத்தியே கட்டாய கல்வி
உரிமைச் சட்டம், ஒருசில நல்ல சரத்துகளோடாவது கொணர முடிந்துள்ளது என்பதை பாரதிதாசன்
புதல்வர்களாகிய நாம் எப்படி பார்ப்பது? கல்வி என்பதை பெண்களுக்கு
மறுக்கப்பட்டிருந்த காலத்தில் பாடிய இந்தப் பாடல் இப்போதும் பாடவேண்டிய
தேவையிருப்பதை வெட்கத்தோடு ஏற்கிறோம்.
“தலைவாரி
பூச்சூடி உன்னை
பாடசாலைக்கு
போவென்று சொன்னாள் உன் அன்னை
..
மடல்வாழையல்லவோ கல்வி”
”தமிழர்களுக்கு
பாரதியார் விட்டுசென்ற செல்வங்களில் பாரதிதாசனும் ஒன்று” என்று
புதுமைப்பித்தன் பெருமை கொள்ளும் நம் பாரதிதாசன் தன் விசால பார்வை கொண்ட
கவிதைகளில் நம்முள் வியாபித்து நிற்கிறான்.
”பொதுவுடைமை
கொள்கை திசை எட்டும் சேர்ப்பொம், புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்” என்று
பொதுவுடமை கொள்கையை பாடல்களாய் எளிமையாய் சொல்வதில் பாரதிதாசன் பாக்களுக்கெல்லாம்
வேந்தர் தாம்.
“உடலைக்
கசக்கி உதிர்த்த
வேர்வையின்
ஒவ்வொரு
துளியிலும் கண்டேன்,
இவ்வுலகு
உழைப்பவர்க்கு
உரியதென்பதையே” “
என்று “முப்பது கோடி மக்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை என்று ருசிய புரட்சி
கண்டு வியந்த பாரதியாரின் உண்மை தாசனாய் தன் பாடல்கள் பலவற்றில் காணும்
அனைத்தையும் பொதுவில் வைக்கிறார், பாவேந்தர்.
“எல்லார்க்கும்
தேசம் எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக! “
என்றும்
“எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் “ - பொதுவுடமை உலகை
காண்கிறார்
பாவேந்தர். பொதுவுடைமை கொள்கையை விளக்க,
“பொருளாளி
திருடர்களை விளைவிக்கின்றான்
பொதுவுடைமை யோன் திருட்டினை களைவிக்கின்றான்” என்ற
வரிகளே போதுமே.
பாவேந்தர்
ஒரு முற்போக்குச் சிந்தனையாளன். பொதுவுடைமைச் சிந்தனையை விரிவாக, விளக்கமாகத்
தமிழில் தந்த பெருமை பாவேந்தனுக்கே உண்டு. “வீட்டுக்கும் விட்டுக்கும் இடையே வைத்த
சுவரினை இடித்து அப்புறப்படுத்தி வீதிகளிடையே திரையை விலக்கி நாட்டொடு நாட்டை
இணைத்து” என்று பொதுவுடமை கீதம் இசைக்கிறார் பாவேந்தர் என்கிறார்
குன்றக்குடி அடிகளார். உலக மானுடத்தைப் பார்த்து பரவசம் கொள், உலக மானுடம்
உன்னுடன் பிறந்த பட்டாளம் என்ற உறவு முறையை உரக்க சொன்னவர் பாரதிதாசன். மானுடம்
மீதான அவரது அன்பை நாம் வியக்கிறோம்.
தொடர்ந்து
சமூக குற்றங்களுக்கு, அநீதிகளுக்கு எதிராக திரளும் குரல்கள் குறைந்து காணப்படும்
இக்காலத்தில், பாரதிதாசன் தன் குடும்ப விளக்கில்
“ஒரு
தீமை கண்டால் ஒதுக்கி நிற்றல் தீமை” என்றும்
“இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
எனாமல் கண்ட அதன் ஆணிவேர் கல்லி
அழகுலகைப் –
பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம் இன்பம்”
என்றும் பாரதிதாசன் சமூக நீதியாக சொல்வதை நாம் பெருமையோடு காண்கிறோம். பத்து
பேர்கள் ஒரு தெரு சந்திப்பில் கொடிகளோடு நின்று கொண்டு தொண்டை கிழிக்க பேசுகையில்
சலனமில்லாமல் கடந்து செல்லும் மனிதர்க்குக் சமூக நியதிக்காகத் துன்பமுறுதலும்
இன்பமே’ என்று உரத்து ஒலிக்கிறான் பாவேந்தர். ”சமூகமே,
யாம்!” என்ற இருவார்த்தைகளில் ஏவர்க்கும் சமுக மனப்பான்மைக்கு
உரமூட்டும் வேலையில் பாரதிதாசன் பாரதிக்கு நிகராக நிற்கிறார். அறிவுப் பெற்று சாதி
மதங்களில் பெயரால் வளர்ந்துள்ள மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டும், ஒழித்தல்
வேண்டும் , புதியதோர் உலகை செய்ய வேண்டும் என்ற பாரதிதாசனின் இலட்சியம்,
இத்தேசத்தின் அனைவருடையதாக மாறவேண்டும்.
“சாதிமத
பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்” – என்ற
பாவேந்தர் காண விரும்பிய சமுகம் அமைத்தல் என்பது நம் எல்லாருடைய கடமையல்லவா.
பாவேந்தர்
பாரதிதாசன் இந்திய சமுகத்தின் சாபமான சாதியை கடிந்து கொள்கிறார். ” இருட்டறையில்
உள்ளதடா உலகம்; சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே! என்றும் “சுத்தமில்லா
பஞ்சமர் கோயிற் சுவாமியைப் பூசிப்பரே – எனில்
நித்தமுயர்ந்தவர் நீரில் குளிப்பது யாதுக்கு யோசீப்பீரே” என்றும்
தீண்டாமையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறான் நமது புவிக்கவி. சாதியில் உயர்வு
தாழ்வு களைவதே இச்சமூக மேன்மைக்கான் வழியென்று அறுதியிட்டு,
“இம்மக்கள்
தமக்கு மேலோர் இழிந்தவர் என்னும் தீமை
எம்மட்டில் போமோ, நன்மை அம்மட்டில்
இங்குண்டாகும்” – என்கிறார்.
”இவ்வுலகில்
அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இயேசுவழி
ஒன்றுண்டு: பெண்கள் ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும் “ – என்று
இவ்வுலகின் அமைதிக்காக பாரதிதாசன் பரிந்துரைக்கும் மருந்து எத்தனை அருமையானது,
மேன்மையானது..
தனியுடமை
சமுதாயம் களையப்பட்டு, பொதுவுடைமை பொன்னுலகம் காணப்பட வேண்டும் என்பதே பாரதிதாசன்
தொடர்ந்த வேட்கையாக இருந்தது. அப்பொன்னுலகம் காணப்பட,
“அறிவை
விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை! எங்கும் பேதமில்லை!
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன், உடைமை மக்களுக்குபொது!
புவியை நடத்து பொதுவில் நடத்து! –
என்பனவற்றை வழிகளாக சொல்கிறான் பாரதிதாசன்.
இறுதியாக,
நம் பாடப்புத்தகங்களில் காணப்படும் ஆளுமைகளின் அறிமுகங்கள் நம்மை அவர்தம் வாழ்வை,
படைப்புகளை, செயல்பாடுகளை ஆயந்தறிய ஊக்கப்படுத்துவதாக அமையவேண்டும். அப்படி
அமைந்துள்ளதா என்பது பெரும் கேள்வி? பாரதி துவங்கி பாரதிதாசன், பட்டுக்கோட்டை என்ற
ராஜபாட்டையில் இளைஞர்கள் பயணித்தால் மட்டுமே சமூக நீதி சாத்தியம் என்றே எனக்குப்
படுகிறது. நாம் கூடும் கூட்டங்களில், மக்கள் சந்திப்பில் இப்புரட்சிக்கவியின்
வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும். பாரதியின் கட்டுரைகள் அவ்வளவாக
கவனிக்கப்படாமலல் இருப்பதுபோல பாரதிதாசனின் கட்டுரைகளும் இருக்கிறது. அவையும்
படிக்கப்பட வேண்டும்.
நாளும்
வணிகமயமாகும் கல்வியில், கல்வி வாய்ப்புகள் தொடர்ந்து பலருக்கும் எட்டாக்கனியாகவே
நாளும் இருக்கும் இந்நாட்டில், தாய் மொழியில் படிப்பது என்பது பழங்கதையாகி ஆங்கில
மொழி படிப்பு என்ற இந்நிலையில் பாரதி, பாரதிதாசனின் படைப்புகளை மக்கள் திரளுக்கு
கொண்டு சென்று அவர்களை வழிநடத்துவது முற்போக்காளர்களின், இளைஞர்கள், மாணவர்களின்,
இடதுசாரிகளின் கடப்பாடு என்பதே பெரும் சத்தியம்.
-
காஞ்சி சீ. நா. கோபி
- இந்திய மாணவர் சங்கத்தின் மாத இதழான “புதிய பாதை” ஜூன் இதழில் வந்தது.
Comments