பாரதி புத்தகாலயத்தின் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கிளாசிக். ஏற்கெனவே வாசித்து விட்ட போதிலும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் மற்றொரு புத்தகம். அதைத் தொடர்ந்து அவரது சிறார்களுக்கான கதைகளை தேடி தேடி வாசித்து வருகிறேன் கடந்த செவ்வாய் அன்று (30.11.21) அன்று இரவு தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் ஸ்பேசில் தோழர் இ.பா.சிந்தன் சமூக சிந்தனையை தூண்டும் சிறார் புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டையை விட்டொழித்து உருப்படியாக செயலாற்றுவது என தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் மக்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வுரையில் இ.பா. சிந்தன் சில புத்தகங்களைப் பட்டியலிட்டார். அவை கொ.மா.கோ இளங்கோவின் சஞ்சீவி மாமா, பச்சை வைரம், உதயசங்கர் தோழரின் மாயக்கண்ணாடி, சோசோவின் விசித்திர கதை முதலியன. இதில் சஞ்சீவி மாமா பச்சை வைரம் மாயக்கண்ணாடி ஆகியவை ஏற்கெனவே நான் வாசித்துவிட்டேன் என்பதும் அவை உண்மையிலேயே மிக தரமானவை என்பதற்கும் அவை பெற்ற விருதுகளே சாட்சி. இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படித்திட கோருகிறேன். இந்தப் பரிந்துரையில் அவர் சொன்ன மற்றொரு புத்தகம் தான் விஷ்ணுபுரம்...