Skip to main content

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்


அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர்.

காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலும் இருக்கிறது என அர்த்தமாகிறது.

இந்நாவலுடன் இணைந்தே மற்றொரு நூலும் படித்து வருகிறேன். அந்த நூல் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மற்றும் காஷ்மீர் பகுதியின் “தேசபாதுகாப்பு/வளர்ச்சி” நடவடிக்கைகள் குறித்தான ஆய்வு. Frency Manecksha என்னும் பத்திரிகையாளர் எழுதியது. அதில் ஒரு வார்த்தை என்னை மிகவும் ஈர்த்தது. அது சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பழங்குடிகள் வாழ்வில் ஒரு ethical reciprocity உள்ளது என்பதே அது. Reciprocate என்பது திருப்பியளி என அர்த்தப்படும். Ethical என்பது நெறிமுறைகள் எனவாகும். பழங்குடிகள் வாழும் பகுதிகள் பழங்குடிகள் – விலங்கினங்கள்-பறவையினங்கள்-மரம் செடி உள்ளிட்ட உயிரினங்கள் என இவை இடையே ஒரு நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் இயல்பாக உள்ளது என சொல்கிறார் மாகென்ஷா. “ஆனை மலை” நாவல் தொடங்கிய சில பக்கங்களிலேயே அந்த நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் என்பதன் உண்மை அர்த்தம் எனக்கு எந்தவித சிக்கலுமின்றி வெளிச்சமானது. இப்படியான நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் இருக்கையில் இக்காடுகளையும், இப்பழங்குடிகளையும், காட்டின் உயிரினங்களையும் இம்மூவரது கூட்டு இல்லாமல் எப்படி ஒன்றை பாதுகாக்க இயலும்? என்பதே இந்நாவல் நம் முன்வைக்கும் கேள்வி என உணர்கிறேன்.

இரண்டாவதாக, வாழிடங்களை விட்டு நீங்குதல் என்பது ஒன்றும் மனிதர்கள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினங்களுக்கும் எளிமையாக, உவப்பானதாக, பாதுகாப்பான ஒன்றாக இருக்காது. வாழ்வு தேடி நகர்தல் என்பதும் வாழிட மாற்றத்திற்கு பணிதல் என்பதும் ஒன்றல்ல. இந்நாவலில் இடம் பெயர்க்கப்படுகிற பழங்குடிகள் வாழ்வும், நகரங்களின் வளர்ச்சிக்கு நகரங்களை விட்டு புறம் வைக்கப்படுகின்ற அச்சாதாரண மக்கள் வாழ்வும் ஒன்றாகவே இருக்கிறது. அதிகாரத்தின் கயமைப்பேச்சின் வழியே உண்மையான மக்கள் முன்னேற்றமும், அம்மக்களுக்கான வசதிகளும் இருப்பதில்லை என்பதே மிக உண்மை. அதையும் இந்நாவல் சொல்லத்தான் செய்கிறது என்ற போதும் இன்னொரு விஷயமும் சொல்ல வருவதாக உணர்கிறேன். இடவளர்ச்சி அல்லது இட மற்றும் பல்லுயிர்பாதுகாப்பு என்ற பெயர்களின் வழியே செய்யப்படும் செய்கைகளில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதும், வளர்ச்சி அல்லது பாதுகாப்பு என்பது கூட உண்மை இல்லை என்பதே அது. காட்டு புலிகள் பாதுகாப்பு வழியே வன அழிப்பும், வன சொத்து பறிபோகுதலும் எளிதான வழியாக்கப்படுகிறது என்பதையே இந்நாவல் சொல்கிறது.

படியுங்கள் மக்களே வெகு சுவாரசியமான நாவலாக இருக்கிறது. Ganesh Devy யின் சொற்றொடரை கொண்டு தொடங்கும்போதே இந்நாவல் என் ஈர்ப்பானது. ஃப்ரண்ட்லைன் இதழில் இவரது கட்டுரையைத் தான் நான் முதன் முதலில் படிப்பேன். பின்பு பூனாச்சி என்ற பெயர். பெருமாள் முருகனின் பூனாச்சி கதையைப் படித்தவர் யார்தாம் அப்பெயர் மீது காதல் இல்லாது ஆவார்? இப்படியாக படைப்புக்குள் நெருக்கமாக அழைத்து செல்லும் ஆசிரியர், சில உவமைகளை சொல்வார் பாருங்கள், வெகு சுவாரசியம்.. “…. பேச்சைக் கேட்டும் கேட்காமல் போகும் அதிகாரிகளைப் போல யானை காதுகளை விசிறியபடி நடந்தது- என்பது போன்றவை வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன.  சமீபத்தில் கேரள பேரிடரில் வயநாட்டில் மூதாட்டியையும் ஒரு குழந்தையும் யானைதான் காப்பாற்றியது என்பதை முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன், இந்நாவல் படித்த பின்பு அதுவும் சாத்தியமே என தோன்றுகிறது. ஒரு geologist சொல்கிறார், நீருக்கும் ஞாபகத் தன்மை உண்டு, ஆகவே தான் அதன் போக்கிலே சென்றிடவே விழைகிறது என்று” கொஞ்சம் எச்சாக தெரிந்தாலும், அதுவும் கூட காடுகளில் சாத்தியமோ என வாசகனை யோசித்து வியக்க வைக்கிற படைப்பாக இருக்கிறது “ஆனைமலை”.

கட்ட கடைசியாக, இந்நாவல் ஆசிரியரின் உழைப்பு அசாத்தியமானது என நம்புகிறேன். காட்டுவாசியில் ஒருவரே கதை சொன்னால் எப்படி இருக்கும் அப்படி அச்சு அசலாக வெகு detailஉடன் காட்டின் வாழ்வை நமக்கு சொல்கிறார். உண்மையில் இந்த சினிமா டைரக்டர்கள் எல்லாம் படப் பிரமோஷனுக்கு பேட்டி கொடுப்பது போல, நாவலாசிரியர்களே நீங்களும் பேட்டி கொடுங்கள். நாளொன்றுக்கு சுமார் 6 மணி நேரம் பேருந்து மற்றும் ரயில் பயணம் செல்லும் நான் பார்க்கிறேன் இந்த காணொளி என்பதே இப்போது மிகவும் ரசனையான வடிவமாக எல்லோருக்கும் இருக்கிறது, வெகு முக்கியமான நேரக்கடத்தலும் அதே. அப்படியான காலத்தில் நாவலாசிரியர்கள், நூலாசிரியர்கள், கவிஞர்கள் தங்கள் படைப்புகள் மீதான சிறு காணொளிகள், பேட்டிகள் கொடுங்கள். படைப்புகளுக்காக மட்டுமே அல்ல, வாசிப்பை பரவலாக்கவும். பதிப்பகங்களும் இதை செய்யலாம். அவ்வாறான ஒரு உரையாடலில் தோழர் பிரசாந்த் வே காட்டு வாழ்வு, பழங்குடி மக்கள் வாழிடம் எனவாக பல விஷயங்களை பல மணி நேரங்கள் பேச முடியும் என நான் நம்புகிறேன். அந்த உரையாடலில் இன்னும் பிரம்மிக்கத்தக்க ஒரு பெருவாழ்வு புலப்படும் என நம்புகிறேன். {அநேகரும் காணொளி கண்டிருக்க நீ வாசித்தாய் அல்லவா உனக்கு மட்டுமே என் படைப்பு இருந்துவிட்டு போகட்டும் என சொல்லக்கூடிய மக்களை, சூழலை குறித்த அக்கறை இல்லாத படைப்பு ஒன்றும் இல்லை இந்நாவல்.)

நகரவாசியான எனக்கு எந்த ஒரு பொருளின் தனித்துவமோ அல்லது அது தனியான ஒன்று என்பதாகவோ ஒரு கவனம் இல்லை. இதுவும் மரம், அதுவும் மரம், இதுவும் பழம், அதுவும் பழம், இது ஒரு மீன் என்றால் அது ஒரு மீன் அவ்வளவே. வாழ்வோட்டத்தில் எதுவும் கவனம் பெறவில்லை என்ற போதிலும் எதிலும் எனக்கு மரியாதையோ மதிப்போ இல்லை என்பதாகவும் வெட்கம் கொள்கிறேன். அந்த வெட்கம் நாவலாசிரியர் மரத்தின் பெயர், பறவையின் பெயர், ஆனைகளின் வகைகள் என்பதாக ஒவ்வொரு detail உம் கொடுத்திட கொடுத்திட அதிகமாகிறது. ஆனைமலை நாவலுக்கோ அது வெகு சுவாரசியமாகிறது, பிரமிப்பைத் தருகிறது. பழங்குடி மக்களுக்கான சூழல் அறிவு என்பது ஏன் டவுன் மற்றும் நகரவாசிகளுக்கு இல்லை என்பதான கேள்விக்கு நகர மற்றும் டவுன் வாசிகள் கும்கி யானைகள் என்று இந்நாவல் சொல்ல வருவதாகவும் உணர்கிறேன்.

தோழர் பிரசாந்த் வே அவர்களுக்கு நல்வாழ்த்துகள் சிறப்பான படைப்பு என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் தோழர். வாழ்த்துகள் மீண்டும். ”ஆனைமலை” நாவலை வாசியுங்கள் மக்களே.!

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி