வாழ்வாங்கு வாழ்தல் என்று சொல்வார்கள். அது சிலருக்குத் தான் அமையும் என்பார்கள். வாழ்வாங்கு வாழ்தல் என்பது குறித்து பலருக்கும் பல புரிதல் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். நான் அப்படி வாழ்வாங்கு வாழ்ந்த (என் புரிதலில்) ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து ரசித்தேன். ஷர்மிளா சய்யித் அவர்களின் "பணிக்கரின் பேத்தி" படித்ததை தான் சொல்கிறேன். பெரு தனக்காரரின் பரம்பரையில் பிறந்து பின் எல்லாம் இழந்து இளம் வயதிலேயே வறுமை பற்ற, பின் தன் அயராது உழைப்பினால் ஓரளவிற்கு ஒரு நிலைக்கு வந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தியின் வாழ்வே பணிக்கரின் பேத்தி. விடாத உழைப்பு, அதற்கான ஒரு பெரு முயற்சி அவை நல்கும் தளராத நம்பிக்கை என இனிதாய் கடக்கிறது வாழ்க்கை. உழைப்பது என்பது நேர்ந்து விட்ட ஒன்றாக முதலில் அமைந்து பின் அது ரசிக்கத்தக்க ஒன்றாக மாறி ஒரு கட்டத்தில் போதையாகவே மாறி போகிறது போல பலருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அவர்கள் மகன்கள் வாழ்வில் செட்டில் ஆகி விட்ட பிறகும் இன்னும் வீட்டுக்கு வீடு பால் ஊற்றும் தொழிலை விடவில்லை. கேட்டால், இது தொழிலப்பா என்பார். இது தொழிலா, ஒரு போதையா ...