Wednesday, 22 February 2017

சஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து

சஞ்சீவி மாமா (இந்தியாவுக்கு நேரு மாமாஇந்த தெருவுக்கு யாரு மாமா? ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. கொ.மா.கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன். அன்று இரவே வாசிக்கத் துவங்கினேன். சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு புத்தகம் இது.
 

தொடரும் சாதி ஆணவக் கொலைகள், சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு. பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது..  இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம். தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம். அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல்

தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் என்ற தகழி என்னும் பெருமனிதனின் அந்நாவலே நினைவுக்கு வரும். அந்நாவல் படித்து இரண்டு மூன்று நாட்கள் பெரும் தவிப்பு பற்றி திரிந்திருக்கிறேன். அதற்கடுத்து தோட்டிகள் குறித்த நான் வாசிக்கும் அடுத்த நாவல்.இது. சிறுவர் நாவல் என்பது கூடுதல் ஈர்ப்பு. தோட்டிகள் என்றால் யார், அவர்கள் சமூக வாழ்வியல் நிலை என்ன என்கிற வரலாற்றினை படம் பிடித்திருக்கிறார் நாவலாசிரியர்.

இந்நாவலில் பொதுவெளியை தூய்மை செய்யும் மிக முக்கியமான வேலை செய்யும் தோட்டி சமூக அந்தஸ்திற்கான படிக்கட்டில் தொடுவதற்கு கூட அனுமதியின்றி நிற்கும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்தம் பரம்பரையும் ஒருபொதுநன்மைக்காய்அவமானம் ஏற்றுக் கொள்ள நேரிடும் நிலை மனசினை பிசைகிறது. பேச்சிராசு சாதிய படிக்கட்டில் கீழ் நிலையில் இருப்பினும் அவனைவிட கீழ் நிலையில் இருப்பாரோடு தீண்டாமை பாராட்டுவது இந்நாவலில் தூலமாய் தெரிகிறது. நமக்கு கீழே ஒருவர் என்ற நித்தியமான நிலைக்கு மனிதன் எப்போதும் ஆசைப்படுகிறான். இங்கே பேச்சிராசு சஞ்சீவி என்கிற தோட்டியோடு கொள்ளும் அன்பு, பாசம், நட்பு அவனுக்கு பல தொல்லைகளை தண்டனைகளை தருகிறது.   பள்ளியிலும் அது பிரதிபலிக்கிறது. இருப்பினும் அவனது நட்பு சஞ்சீவி மாமாவோடு தொடர்கிறது.

இறுதியாய் அவனது வாழிடத்தில் பஞ்சாலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கிடையேயான மாறுவேடப் போட்டி.யில் பல ஆளுமைகளின் தோற்றத்தில் உடன் படிக்கும் சிறுவர்கள் வர, பேச்சிராசு தான் மிகவும் நேசிக்கும் சஞ்சீவி மாமா என்றழைக்கும் தோட்டி வேடம் போடுகிறான். கையில் மளம் அள்ளும் வாளி போன்ற ஒன்றோடு, ஆனால் உண்மையாகவே மலம் அள்ளப் பயன்படும் பிரத்தியேக கரண்டியோடு. ஆம், அந்த பிரத்தியேக கரண்டி அவனை முழுதுமாய் நம்பி அவனது தந்தை சாதியை உதறி சஞ்சீவி தோட்டியோடு கேட்டு வாங்கிய அவர் பயன்படுத்திய அசல் கரண்டி. அந்த கரண்டியோடு சஞ்சீவி வேட்த்தில் பேச்சிராசு நடித்து முதல் பரிசு வாங்குகிறான். பரிசு பெற்ற கோப்பையோடு நில்லாமல் அந்த கோப்பையில்சஞ்சீவி மாமாஎன்ற பெயரும் பொரித்து பேருவகை கொள்கிறான் பேச்சிராசு. நாவல் முடிவுறுகிறது.

முன்னுரை வழங்கிய எழுத்தாளர் . தமிழ்செல்வன் அவர்கள், “நாவலை படிக்கும் சிறுவர்கள் இச்சாதியமைப்பின் மீது வெறுப்பு கொள்வார்கள் என நான் நம்புகிறேன்என்கிறார். அதேதான் எனக்கும் தோன்றியது. பாரதி புத்தகாலயத்தாரின் பெருமை கொள் படைப்பு இது. இதோடு முடியவில்லை இந்த நாவல் குறித்த என் பகிர்தல். இந்நாவலின் இறுதி பக்கத்தில் ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த புகைப்படம் ஒரு சிறுவன் தோட்டி வேடமிட்டு பேசுவதாய் அமைந்துள்ளது. ஆம் அந்த சிறுவன் வேறு யாருமல்ல இந்நாவலின் ஆசிரியர் கொ.மா.கோ. இளங்கோ சிறுவர் கதையாசிரியராக என்னுள் இடம் பிடித்த இம்மனிதர் இந்த நாவலுக்கு பிறகு. சாதி துறப்பாளராக மிக பெரிய மனிதராக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இன்னும் சஞ்சீவி மாமாக்கள் காலம் முடியாத சோகமும் நம் தேசத்தில் தொடர்கிறது.
  

Wednesday, 8 February 2017

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா, இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன். வேற என்ன, நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான்.

ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி.

அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு.

பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக்கு கதை சொல்வது என்பது எளிதல்ல. கதை சொல்ல தொடங்கும் நொடியிலேயே அசரணும், இல்லையின்னா அந்த கதை சோபிக்காது. பழுப்பு நிறத்தில குண்டா இருந்த பேன், கண்ணு ரெண்டும் பெரிசு பெரிசா இருந்த பூதம் போன்ற விவரணைகள் இல்லாம, பேன் ஒன்னு, ஒரு பூதம் என்று தொடங்குவதிலேயே இந்த கதை தொகுப்பு சுவாரசியமாகிறது என நினைக்கிறேன். அது மட்டுமில்லாம, இதை எல்லாம் சொன்னா இந்த காலத்து குழந்தைங்க நம்புவாங்களோ என்ற தயக்கமில்லாம, பேன் மாங்காவை தூக்கிட்டு போச்சு, நரி ஓணாணோடு சண்டை போட்டுச்சு, ஒரு ஜான் மனுஷனோட ஒரு  காதுல நரி, மறு காதுல சிங்கம்ன்னு கதைகள் ரொம்ப சுவாரசியம். எல்கேஜி படிக்கிற கீர்த்தனாவும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபியும் அப்படியே ரசித்து நின்றார்கள். என்னப்பா இப்படி ரீல் விடுறியே என்கிற பேச்சே கிடையாது. உண்மையிலேயே இந்த கதை தொகுப்பின் வெற்றியாக நான் காண்பது குழந்தைகளுடனான ஓர் உரையாடலை நிகழ்த்துகிற அந்த தமிழ் எளிமை. இந்த எளிதான மொழி நடைதான் ஒரு குழந்தை புத்தகத்திற்கு அவசியம் கை கூட வேண்டியது. அப்புறம் என்னங்க, நீதிமணி அவர்களின் ”பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி” தொகுப்பில இருக்கிற எல்லா கதைகளும் சூப்பரு ரகம்.

பாரதி புத்தகாலயம் வழவழ பேப்பரில நிறைய வண்ணங்களோடு கேலிசித்திரம் எல்லாம் வரைஞ்சு புத்தகத்தின் சுவாரசியத்தை மேலும் கூட்டியிருக்காங்க. விலை 95/- என்றாலும் 64 பக்க வண்ண வழவழ தாள்களுக்கு விலை நியாயமே என்றது. இதோ புதுச்சேரியில் இருக்கிற என் தோழர்கள் படிக்கும் 5 பள்ளிகளில் இந்த புத்தகம் அவர்கள் நூலகத்தில் இடம் பெற்றுவிட்டது.


பாரதி புத்தகாலயத்தாரே, நீதிமணி அவர்களே உங்களுடைய காம்பினேஷனில் அடுத்த புத்தகம் எப்போது என நானும், அபியும், கீர்த்தனாவும் காத்திருக்கிறோம். சீக்கிரம் ப்ளீஸ். 

Friday, 3 February 2017

பிறிதொரு பொழுதில் - ஒரு போராளியின் அனுபவங்கள்

நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில் நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன் வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள் எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்பாக பார்க்கையில் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த நூலில் சமூகத்தின் இருண்ட வெளி மக்கள் மீதான கனிவும், அவர்களின் தேவை குறித்த புரிதலும், அவர்களோடு உறவாட, இணைந்து செயல்பட நினைக்கும் பரிவும், வரலாற்றை மறுவாசிப்பு செய்தலும் என எல்லாம் இருக்கிறது.

”மனிதர்களை உற்றுப் பார்ப்போம்”- இந்த நூலில் ஆக சிறந்தது என நிச்சயமாய் சொல்லலாம். மேம்பாலத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர் ஒருவரோடு ரமேஷ் பாபு நிகழ்த்திய உரையாடல். நான் அன்றாடம் சந்திக்கும்(கண்ணுறுகிறோமா?!) சாதாரணர்கள் பின்னான வாழ்க்கை குறித்த ரமேஷ் பாபுவின் பார்வை நிச்சயமாய் நாமும் கை கொள்ள வேண்டியது. கணப்பொழுதுவில் இம்முதியவர்களை நாமும் கடந்து வருகிறோம், பல சமயங்களில் நம் சிந்தனையில் அவர்கள் பதிவதுமில்லை. மேம்பால கைப்பிடிச் சுவர்களும் இவர்களும் ஒன்றாகவே காலப்போக்கில் நமக்கு படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரோடு அருகில் உட்கார்ந்து அவரோடு ஒரு உரையாடலை நிகழ்த்திய தன்மை உண்மையிலேயே நெகிழ்வானது. ஒரு “தோழருக்கு” உரியது.

வளர்ச்சி, வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லாடலில் போட்டியினை உருவாக்கி பலரை பின்னுக்கு தள்ளி தான் முன்னேறும் சூதில் பலியாடுகள் கருணையற்று வெட்டப்படுவது தெருக்கள் தோறும் நிகழ்கிறது. இங்கேதான் ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. புரட்சி நடந்த பத்தாண்டுகளில் கல்லாமையை இல்லாமல் செய்த கியூபாவில் அரிசி குக்கர் வந்தது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து. அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணம் என்றாலும், எதற்கு முக்கியத்துவம் என்பதில் கியூபாவின் தோழர் பிடல் காஸ்ட்ரோவிற்கு இருந்த தெளிவு வியக்கத்தக்கது. ஆம், வளர்ச்சி என்ற பெயரில் மொபைல்கள் கையருகில் உலகை கொண்டு வந்திருந்தாலும், அதில் எப்படி அடுத்தவரை தொடர்பு கொள்வது எனத் தெரியாமல் யாருடைய உதவியையாவது தேடி அலையும் எளியர் எத்தனை பேர் நம் நாட்டில்?

ரமேஷ் பாபுவின் புனைவுகள் ரொம்ப சுவாரசியமானது. ராஜ்ஜியங்களுக்கு பின்னேயும் மனிதர்கள், அரசர்களும் மனிதர்களே என்ற புரிதலில் இரண்டு புனைவுகள். ரமேஷ் பாபுவின் வாசிப்பு நிச்சயம் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் இந்த புனைவுகள் சாத்தியமில்லை. இன்னும் பல புனைவுகள் எழுத வேண்டும்.  

சென்னையின் அசல் வீதிகளில் அவரது பயணக் குறிப்புகள் நான் ஏற்கெனவே ரசித்த ஒன்று. புலம் பெயர்ந்தவர்களது பிரச்சனைகள், அவர்களோடு மொழி வேற்றுமை கடந்து இணைந்து நடத்திய போராட்டங்கள், இன்குலாப் அவர்களோடு நடத்திய உரையாடல் என இவை சிறப்பாக வந்திருக்கின்றன.

இறுதியாய், எனக்குப் பிடித்த ஒன்று. அவரது மொழி வளம். தமிழ் மொழி வளம். எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு மொழி மீதான காதல் என்பது பொதுவெளியில் அவ்வளவாக வெளிப்படுவதில்லையோ என்று. திராவிட கட்சிகளின் தமிழை, நெல்லை கண்ணனின் கம்பனை நாம் எவ்வாறாக பயன்படுத்துகிறோம் என்ற விமர்சனம் எப்போதும் என்னுள் உண்டு. தோழர் இந்த நூலில் அதை தகர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். நக்கீரனின் ”காடோடி” தமிழ் மிக சிறப்பான ஒன்று. இங்கே தோழர் ரமேஷின் தமிழ் நடையும் மிக சிறப்பாகவே உள்ளது.


இந்த புத்தக கண்காட்சியில வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தை விட்டொழித்து வாங்கியதில் “பிறிதொரு பொழுதில்” எனக்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது. வம்சி வெளியீட்டில் எழுத்துப் பிழை ஏதும் இல்லாமல் இருப்பதும் சிறப்பு.