Sunday, 20 September 2020

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன்.

அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன்.

வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு.

பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களின் பங்குகள் வென்மணி படுகொலை நிகழ்வுக்கு இரு தசாப்தங்களுக்கு முன்பே தொடங்குகையில் திரு.கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் பங்கு படுகொலைக்கு பின்பான காலங்களில் தொடங்குகிறது. செங்கொடி இயக்கத்தின் வரலாறு பல புத்தகங்களில் விரிவாக வந்துள்ளது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு மூலமாக பல விஷயங்கள் வந்துள்ளன. இதில் அநேகமாக திராவிட இயக்கத்தின் பங்களிப்பினை மிக விரிவாக சொல்லியிருக்கும் புத்தகம் அநேகமாக ஒரே புத்தகம் இது என நினைக்கிறேன். அவ்வகையிலும் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழதஞ்சையில் பண்ணை பெருந்தலைகளை, மிட்டா மிராசுகளை, மைனர்களை, தலித் மக்களை அடிமைகளாக வைத்திருந்த ஆண்டைகளை, வெண்மணி படுகொலைக்கு சிறிது காலம் முன்பாக வரையிலும் செங்கொடி மற்றும் திராவிட இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. இரண்டு இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக வைத்திருந்த மக்களிடம் சுயமரியாதை பாய்ச்சி, கிளர்த்தெழ செய்து கூலி உயர்வு, மனித உரிமை கோருதல் என்பவைகளை பெற்றுத் தந்து வந்தன. ஒன்றுபட்ட நாகை மாவட்டத்தில் இரண்டு இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கத்திலும் தலித் மக்கள் பெருந் நம்பிக்கை கொண்டு அந்த இயக்கங்களின் வழிகாட்டலில் பெரும் போராட்டங்களை, கலகங்களை நடத்தினர். ஆண்டைகள் பெருத்த ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சந்தித்து வேறு வழியின்றி சில உரிமைகளை வழங்க நிர்பந்திக்கப்பட்டனர். தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் கடின உழைப்பில் செழித்து படர்ந்த செங்கொடி இயக்கம் தொடர்ந்து விவசாய மக்களின் கூலி உயர்வு, சங்க உணர்வு மற்றும் மனிதநேய வாழ்விற்கான பெரும் போரை தொடர்ந்தபடி இருக்க, அதுகாறும் செங்கொடி இயக்கத்தோடு தோளோடு தோள் நின்று உழைத்திட்ட திராவிட இயக்கத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிலைப்பாடு பெரியார் அவர்கள் பச்சைத் தமிழன் காமராஜர் அவர்களைத் தேர்தல் சமயத்தில் ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்த பொழுதில் சிக்கலில் ஆழ்ந்தது.

பெரியாரோடு இந்த ஒரு கருத்தில் உடன்பட மறுத்து அதுகாறும் பெரியாரின் சீடராக திராவிடர் கழகத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் இருந்த தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் செங்கொடி இயக்கத்தின் கீழான விவசாய தொழிலாளர் சங்கத்தோடு சேர்ந்து தொடர்ந்து இயக்க வேலைகளில் ஈடுபடுகிறார். அண்ணாதுரை அவர்களும், பெரியார் அவர்களும் காங்கிரஸ் உறவு கொள்ள, கீழத்தஞ்சையின் ஆண்டைகள் இயல்பில் காங்கிரஸாராக இருக்க, சிக்கலில் திராவிடர் கழக விவசாய தொழிலாளர் சங்கம் இருக்க, செங்கொடி இயக்கத்தின் வளர்ச்சி மேலும் கூடுகிறது. இதில் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் எவ்வாறு செயல்பட்டார் என்பதோடு பெரியாரிடமிருந்து பெற்ற சுயமரியாதை கருத்துகளும் செங்கொடி இயக்கத்தின் மார்க்சிய கோட்பாடுகளையும் களத்தில் இணைத்து பல வெற்றிகளை போராட்டக் களத்தில் பெற்ற நிகழ்வுகளே இப்புத்தகம். அதை நூலில் இருந்து நீங்கள் படித்து உணர முடியும்.

நூல் ஒரு பெரும் பீடிகையோடு தொடங்குகிறது. அது வெண்மணீ படுகொலை உண்மைக் காரணம் என்ன என்பதாக இருக்கிறது. ஒரு பிரிவு தொடர்ந்து இது வர்க்கப் பிரச்சனை என்பதைவிட வருணபேத எதிர்ப்பே இருக்கிறது என்றே சொல்லி வருகின்றனர். செங்கொடி இயக்கம் மிக பலமாக இது வர்க்க போரே என்று சொல்லிவந்த போதிலும் வர்க்க பேதத்தோடு வருண பேதமும் பிரச்சனைக்குள்ளாக்கினோம் என்றே சொல்லி வருகிறது. பி.சீனிவாசராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் தென்பரை முதல் வெண்மணி வரை நூற்கள் அதை மிக சரியாக சொல்கின்றன. அதையேதான் இந்நூலில் தோழர் பசு. கவுதமன் வலியுறுத்துகிறார். ஆனால், வருண பேத எதிர்ப்பு என்பதும் உள்ளது என்றே அழுத்தி சொல்கிறார். மேலும் செங்கொடி இயக்கத்தை விமர்சனம் செய்வதாக சில இடங்கள் இருந்தாலும், திராவிட இயக்க செயல்பாடுகளையும், அதிலிருந்து கிளைத்து எழுந்த திமுகவும் பெரியாரின் காங்கிரஸ் ஆதரவு போக்கும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பதே நிஜம்.

தமிழக வரலாற்று சூழலில் தொடர்ந்து இயக்கங்களின் வரலாறுகள் போராட்டங்களின் நிகழ்வுகள் இன்னமும் சரியாக நூலாக்கம் காணப்படுவதில்லை. ஏன், சமீபத்திய ஜல்லிகட்டு பெருநிகழ்வு போராட்டம் குறித்து சரியான நூல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.. அதாவது யாரால் துவக்கப்பட்டது, எவரெல்லாம் பங்கேற்றனர், மாவட்டங்களில் நடைபெற்ற போராட்ட விவரங்கள் என்பது  உள்ளிட்ட விவரங்கள் இல்லை. இது ஜல்லிக்கட்டு போன்று தன்னெழுச்சி போராட்டங்களுக்கு வேண்டுமானால் சரியாகவோ அது தேவை சிறிதாகவோ இருக்கலாம். ஆனால், இயக்கங்கள் கட்டமைக்கும் போராட்டங்களில், பெற்ற வெற்றிகளில், சிந்திய உயிர்களில் என இவை முறையாக தொகுக்கப்பட வேண்டாமா? இந்த நூலில் திரு.ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் அவர்கள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த வீரதிரமிக்க விவசாய சங்க தொழிலாளர்கள் சங்கத்தின் (செங்கொடி இயக்கம்+ திராவிடர் இயக்கம்) பல தோழர்களை இங்கு பட்டியலிடுகிறார். தோழர் மீயன்னா பற்றிய குறிப்பு அற்புதம். (பாரதி புத்தகாலயம் தனியே மீயன்னா தோழர் குறித்து ஒரு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறது) .  

அநேகமாக செங்கொடி இயக்கம் எடுத்த சில போராட்டங்கள் குறித்த புதிய பதிவுகள் இந்நூலில் இருக்கிறது. அதே சமயம் அப்போராட்டங்கள் சில மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் பதிவாகிறது. ஒட்டுமொத்தத்தில் இரண்டாக இந்நூலினை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஒரு போராளியின் வழியே கீழதஞ்சையில் ஆண்டாண்டுகளாய் மனிதருக்கும் கீழாய் வைக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய் அவர்களை சங்கமாக திரட்டி நடைபெற்ற ஒரு பெரும் வீரெழுச்சி போராட்டம். மற்றொன்று ஆதிக்க சாதியில் பிறந்தாலும், நடக்கும் நிகழ்வுகளில் கிளர்ச்சியுற்று, சமூக அடுக்குகளில் கீழாக வைக்கப்பட்டிருந்த மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு.  பெரியார் மீது காலம் காலமாக வைக்கப்படும் ஒரு செய்தியும் இங்கே தகர்க்கப்பட்டு இருக்கிறது. அவர் வெண்மனி படுகொலை குற்றவாளி கோபாலகிருஷன் நாயுடுவை சந்தித்தார் என்பது. அது இல்லை என இப்புத்தகத்தில் ஆணித்தரமாக நிறுவபப்ட்டு இருக்கிறது.


இந்நூலில் தர்க்கத்திற்கு நிறைய இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட வருத்தம் ஒன்று இருக்கிறது. செங்கொடி இயக்க விவசாய சங்க வரலாறு என்றாலே தோழர். பி.சீனிவாசராவ் அவர்களை குறிப்பிடாமல் எவரும் இதுவரை எழுதியதே இல்லை. ஆனால் இந்நூலில் அவர் பெயரை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. தோழர். பி. சீனிவாசராவ் அவர்களின் காலத்திற்கு பிறகுதான் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் வருகிறார் என்றாலும், செங்கொடிக்கு ஒரு பெரிய எழுச்சி உண்டானது கீழதஞ்சையில் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது அல்லவா, பின் அவரை ஏன் குறிப்பிடவில்லை என தெரியவில்லை?

ஆனால் நூலில் ஒரு இடத்தில் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் சொல்கிறார், “போராட்டக் களத்தில் இரண்டு இயக்கங்களும் சங்கமித்தே பல வெற்றிகளை பெற்றிருக்கின்றன" என்று. அதுதான் இந்நூல் சொல்ல விழையும் பெரும் செய்தி என நான் எண்ணுகிறேன். 

No comments: