
நீயுமா?
வெண்பட்டு உடுத்தி
பூக்களால் அலங்கரித்து
மின் விளக்குகள் ஜொலிக்க
வீதி வீதியாக உலாவரும்
மேலத்தெரு
பூ மாரியம்மனுக்கு கூடவா
தெரியவில்லை.......
கிழக்குபுறமாக இருக்கும்
எங்கள் காலணித்
தெருவுக்குச்
செல்லும் வழி?
பேதம்
சின்னதாக,
பெரியதாக,
வட்டமாக,
நீளமாக,
புள்ளியாக,
கீற்றாக,
ஏதோ ஒரு வடிவத்தில்
ஒட்டிக் கொண்டிருக்க
வேண்டும் என்
நெற்றிப் பொட்டு.
உன் இருப்பை
தெரிவிப்பதற்காக!
வெறும் நெற்றியோடு
வலம் வந்தாலும்
உன்னை யார்
கேட்டுவிடப் போகிறார்கள்?
'உன் மனைவியை
இழந்துவிட்டாயா?' என்று!
மீறல்
அப்பா
சமையல் செய்தார்!
அம்மா
பேப்பர் படித்தார்!
அண்ணன்
வீடு கூட்டினான்!
தங்கை
கிரிக்கெட் விளையாடினாள்!
ஆசிரியர்
காதைத் திருகினார்
சில பொய்களும் சில உண்மைகளும் (கவிதைத் தொகுப்பு)ஆசிரியர் : பாலபாரதி
வெளியீடு : வம்சி புக்ஸ், 19. d.m.சரோன், திருவண்ணாமலை 606 601.
Comments