பொதுவாகவே புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தினை அது ஏதாவது வகையிலும் ஏற்படுத்த வல்லவை. ஒரு சில நம்முள் அதிர்வுகள் ஏற்படுத்தலாம், அசைத்தும் போடலாம். சிலவே நம்மை புரட்டி போட, நம்மை முற்றாக குலைத்து விட மிகுந்த சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானது (அநேகமாக எல்லாமும்), எளிய மக்களின் ஏழ்மையைம், அவமானங்களையும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முற்றாக சுரண்டுதலையும், சுரண்டலை, அவமானங்களை எதிர்த்து விடுதலை வேண்டி அவர்களின் கூட்டு போராட்ட நிகழ்வையும், உணர்வையுமே சொல்பவனவாக உள்ளன. சில அவ்வாறான எளிய மனிதர்களாக இருந்து பின் பெரும் தலைவர்களாக அவர்கள் மாறிய வாழ்க்கை வரலாற்றினையும், பலகோடி எளிய மனிதர்களுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்த பல புரட்சி நாயகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கை முன்னெடுக்க வல்ல தத்துவ நூல்களாகவும் உள்ளன. இவ்வகையான புத்தகங்களில் பலருக்கும் பலவித தேர்வுகள் இருக்கலாம். சிலருக்கு ஏன், பலருக்கும் ” மார்க்ஸிம் கார்க்கியின் அழியா காவியம் தாய் ” , நிரஞ்சனாவின் அற்புத படைப்பு “நினைவுகள் அழிவத...