Skip to main content

(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல்..........


பொதுத்துறை நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்தப் பெண்மணிக்கு திங்கட்கிழமை தொடங்கி சனி வரையிலும் அலுவலகத்தில் வேலை. ஞாயிறு தவறாமல் மருத்துவமனையில் போய் நிற்க வேண்டும். அவரது நான்கு வயதுக் குழந்தைக்காக. குழந்தைக்கு ஒரு நோயும் இல்லை. எந்தச் சிகிச்சையும் இல்லை. பின் எதற்காக....? வாரம் முழுவதும் வேறு எந்தக் குழந்தையைப் போன்றே சாதாரணமாக உணவு எடுத்துக் கொண்டாலும், விளையாடினாலும், படித்தாலும் ஒரு முக்கியமான செய்கையை மட்டும் அந்தக் குழந்தையால் செய்து கொள்ள முடியவில்லை. Bowels Clearance என்று சொல்கிறோமே அது. அதாவது குடலிலிருந்து கழிவுகளை அகற்ற முடிவதில்லை. அதற்காக வாராவாரம் 'இனிமா' கொடுத்து வேலையை முடித்துக் கொண்டிருந்தனர்.

அப்புறம் நண்பர் ஒருவரது ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர். அவர் சொன்னாராம்: "தினமும் காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார வையுங்கள் பார்க்கலாம்". அது வீண் வேலை என்றிருக்கிறார் குழந்தையின் தாய். "பரவாயில்லை. தினம் ஒரு பத்து நிமிடம் வீணாகவே போகட்டும். உட்கார்ந்து பார்த்துவிட்டு வரட்டும்...அது அவனது அன்றாடப் பழக்கமாகட்டும். ஒன்றும் தப்பில்லை..." என்றிருக்கிறார் மருத்துவர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணிக்கு ஞாயிற்றுக் கிழமை டூட்டியிலிருந்து ஓய்வு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இனி(மா) தேவையில்லை என்றானது.

இதைத் தான் 'டாய்லெட் டிரெயினிங்' என்று சொல்கின்றனர். இதை விவாதிக்குமுன் ஒரு விஷயம். நீங்கள் பள்ளியில் தமிழ் இலக்கணம் படித்தவரா...அப்படியானால் 'இடக்கரடக்கல்' என்ற ஒன்றை அறிந்திருப்பீர்களே.

இடக்கரடக்கல் காரணமாக இந்த 'முக்கி'யமான விஷயத்தை 'வெளி'யில் யாரும் பேசுவதில்லை. சரி செய்து கொள்ளத் தக்க வேண்டிய வாழ்வியல் அம்சத்தைப் பலரும் 'சிக்கல்' ஆக்கிக் கொள்கின்றனர். ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஊழல்கள் பகிரங்கமாக நடக்கிற தேசத்தில், தவிர்த்தே ஆகவேண்டிய ஆபாசமும் வன்முறையும் 'U' சான்றிதழோடே திரையில் அனுமதிக்கப்படுகிற சூழலில், மலம் கழிப்பதைப் பற்றிப் பேச மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிற சமூக நிலைமையை என்னவென்று சொல்வது!

நமது உடலில் உள்ள வேறு சில உறுப்புக்களைப் போலவே திருவாளர் ஆசனப்பகுதியும் மிகவும் நளினமானவர் (Sensitive). நான்கு பேர் எதிர்ல் கூடுமானவரை நம்மைச் சங்கடப்பட வைக்காமல் எச்சரிக்கையும் செய்பவர். மூளையாகிய தலைமைச் செயலகத்தின் (எழுத்தாளர் சுஜாதாவிற்கு நன்றி!) நேரடி கண்காணிப்பில் - முழு கட்டுப்பாட்டில் இயங்குபவர் என்பதால் அவருக்குரிய மரியாதையைக் கொடுத்துவிடுவது நல்லது.

பிறந்த குழந்தையின் குடல் சுத்திகரிப்பைக் கவனியுங்கள். முற்றிலும் திரவ ஆகாரத்தில் இருக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஏழு முறை 'போனாலும்', ஏழு நாளைக்கு ஒரு முறை போனாலும் அது இயல்பானது, மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடவேண்டியதில்லை என்று வீட்டுப் பெரியவர்களுக்கு பாரம்பரிய அறிவு போதித்திருக்கிறது. குடல் சதைகள் தங்களது வளர்ச்சியை, இயக்கத்தை முழுமையடைகிற பருவம் அது.

ஆனாலும் நவீன காலத்தில், பிறந்த இரண்டாவது நாளே குழந்தைக்கு ஏதோ பிரச்சனை என்று மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர் விவரமறியாத ஒரு பெற்றோர். அதற்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்து பார்த்து 'எல்லாம் நார்மல், ஒரு வாரம் பொறுத்து எப்படி ஆகுது என்று பார்த்துவிட்டு சிகிச்சையைத் தொடரலாம்' என்று சொல்லியிருக்கிற அளவு இன்று மருத்துவத்துறை மனித நேயமற்ற வர்த்தகத் தன்மைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தை வளர்கிற பருவத்திலேயே குடல்சுத்தமும் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று என்பதைப் பழக்கிவிடவேண்டும். அது ஏதோ யார் எதிரிலும் பேசக் கூடாத விஷயமாகவும், அருவருப்பான செய்கையாகவும் பெரியவர்கள் உருவகித்துவிட்டால் குழந்தைகளும் சொல்லப் பயந்து அல்லது கூசிப் போய் இயல்பான வெளிப்பாட்டை (தங்களது படைப்பாற்றலைப் போலவே) மறுத்துக் கொண்டு வளர்கின்றனர்.

உடலில் செரிமான இலாக்கா வேலை செய்வது குறித்த அனிச்சை செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்த மாபெரும் ரஷ்ய அறிவியல் அறிஞர் இவான் பாவ்லோவ் அது குறித்த உலக ஞானத்திற்குப் பெரிய பங்களிப்பு செய்தவர். பாவ்லோவ் பரிசோதனை என்பது, அவர் ஒரு நாயைக் கொண்டு செய்ததாகச் சொல்லப்படும் ஒரு முக்கியமான அறிவியல் நடவடிக்கை. குறிப்பிட்ட நேரத்தில் அன்றாடம் மணியின் ஓசையை எழுப்பியதும், நாய்க்கு அருகில் உணவு வந்து சேரும். அதற்குப் பழகிக் கொள்ளும் நாய்க்கு, ஒரு சில நாட்கள் கழித்து மணியின் ஓசைக்குப் பிறகு காலித் தட்டை வைத்தாலும் கூட எச்சில் ஊறவே செய்கிறது. (இந்தச் சோதனை மூலம் அவர் இன்னொரு புதிய நிரூபணத்தையும் வைத்தவரானார். கருத்துதான் முதலில் தோன்றியது. பொருள் என்பது அப்புறம்தான் என்ற கருத்து முதல்வாத தத்துவார்த்தக் கோட்பாடுகளுக்கு எதிரான பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்களின் கூற்றுக்கு ஆதரவாக இருந்தது இந்த அறிவியல் சோதனை).

இப்படி, காலைக் கடன்களை முடிக்க அவரவருக்குரிய திட்டப்படி செயல்படுவதில் தவறில்லை. அது குடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவும். சிலருக்கு நடைப்பயிற்சி முடித்துவிட வேண்டும். சிலருக்குச் செய்தித்தாள் வாசிக்கக் கிடைக்காவிட்டால் வேலை நடக்காது. அன்பர்கள் சிலர், 'பாயிலர்ல வென்னி ஊத்தி மேல நெருப்பு பத்த வச்சாத் தான்ப்பா எறங்குது' என்கிற தரிசனத்தில் டீயும் சிகரெட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள். அவரவர் தங்களுக்கு ஆரோக்கியமான ஒரு வழியில் இந்த விஷயத்தை (Routine) முடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

சொல்லிவிட்டால் முடிந்ததா....அவரவர் பிரச்சனை அவரவர்களுக்குத் தான் தெரியும். அப்படியானால் மலச்சிக்கல் என்ற உலக மாந்தரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சனை ஏனய்யா இருக்க வேண்டும் என்றால், நமது பொறுப்பையும் தட்டிக் கழிக்க (!) முடியாது. நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றோடு தொடர்புடையது இது.

உணவில் நார்ச்சத்து குறையக் குறைய, மாவுப்பொருளும் எளிதில் செரிக்க இயலாத உணவுவகைகளும் சேரச் சேர குடல் சிரமத்திற்கு ஆளாகிறது. நாம் அருந்தும் தண்ணீரின் அளவு தேவைக்கான அளவு கிடைக்காமல் போவதும் வேதனைப்பட வைக்கிறது. மனிதக் கழிவில் முக்கால் பங்கு தண்ணீர் வெளியேற்றம். அப்படி இல்லாமல் இறுக்கமான முறையில் இருந்தால், அது நமது வாழ்வின் - மனத்தின் இறுக்கங்களையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கக் கூடும். மனச் சிக்கல்களும் மலச் சிக்கல்களுக்கு இட்டுச் சென்று விடுகிறது.

சரிவிகித உணவு, தேவையான அளவு தண்ணீர், எளிய உடற்பயிற்சி, விரிந்த பார்வையும், பரந்த மனமும் கொண்ட அன்பின் இழையோட்டமிக்க வாழ்க்கை முறை போன்றவை பிரச்சனைகளை உருவாக்குவதில்லை. சலித்த (கோதுமை) மாவு பயன்படுத்திவிட்டு சலித்துக் கொண்டிருப்பதைவிட, சலிக்காத மாவு பயன்படுத்தினால் நிறைய நார்ச் சத்து கிடைக்கும். ஆப்பிள் போன்ற பழங்களில் தோலில் தான் நிறைய நார்ச்சத்து. ஈவிரக்கமில்லாமல் அதைச் சீவித் தள்ளிவிடவேண்டாம்.

இரவு அதீத கண் விழிப்பு, காலையில் தாமதமான திருப்பள்ளியெழுச்சி ஆகியவை அன்றாட வழக்கங்களில் உடைசல் ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் காலையில் ஒன்றும் சாப்பிடாமல் பள்ளிக்கு ஓடுவார்கள். அல்லது காலைக் கடனை வீட்டிலும் முடிக்க நேரமில்லாமல், பள்ளியில் அனுமதி கேட்கவும் வழியில்லாமல் அதனாலேயே தலைவலி, சோர்வு என்று உபரியாகவும் சிக்கல்களைத் தேடிக் கொள்வார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலோ, பெண்களுக்கு கருப்பைக் கட்டிகளினாலோ, நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், சரியான செரிமானம் அற்ற போக்கு (Irritable bowel syndrome ) ஆகியவை காரணமாகவும் மலச் சிக்கல் வரலாம். பெண்கள் பேறுக்காலத்தின்போதும் மலச்சிக்கலை அனுபவிக்கின்றனர் .

உறக்கம் வருவதற்காக, உளவியல் பிரச்சனைகளுக்காக, கால்சியம் அல்லது இரும்புச் சத்து தேவைக்காக, அமில முறிவிற்காக.... என்றெல்லாம் எடுத்துக் கொள்கிற மருந்துகள் மலச் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை. தவிர்க்க வேண்டிய மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும். மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளைச் சரி செய்ய, நிறைய பச்சைக் காய்கறி, பழவகைகள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர்த்துவிட்டு, எப்படியாவது சிரமப்பட்டாவது வெளியேற்றி விடவேண்டும் என்று முக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குடலிறக்கம் (ஹெர்னியா), மூலம் போன்ற புதிய பிரச்சனைகளை உருவாக்க நேரும். அதேபோல் அடிக்கடி மலமிளக்கி மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆசனவாய் மற்றும் குடல் சதைகளின் இயல்பான செயல்பாடுகளில் அதாவது அவற்றின் அதிகாரங்களில் குறுக்கிடும் ஜனநாயக விரோதப் போக்காகும். எனவே விளைவுகள் விபரீதமாகவே இருக்கும். 'குடலைக் கழுவி உடலை வளர்' என்று இப்படியான மருந்து விற்றால், யாரது உடலை வளர்க்க என்று தெரிந்து கொள்வது நல்லது.

வெளியேற்றும் அளவு, உட்கொண்ட உணவிற்கு விகிதாச்சாரமாயில்லையோ, குறைந்திருக்குமோ என்று ஐயப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ' பழையன கழிதலும், புதியன புகுதலும் ' ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். நடுத்தர வயதைக் கடந்தபிறகு, இப்படி இல்லாமல் இருந்தால், அதுவும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு மலம் கழிக்கும் தன்மையில் (Regular Frequency உள்பட) எந்த வேறுபாடு இருந்தாலும், உடனே செரிமான உறுப்புகள் பற்றிய சோதனை செய்து கொள்வது நல்லது.

கோடான கோடி மனிதர்களுக்குச் சுத்தமான குடிநீரோ, கழிப்பறை வசதியோ செய்துதர மறுக்கும் நாட்டில் நோய்களைத் தடுப்பதைவிட மருத்துவமனைகளைப் பெருக்குவதில் தீவிரம் காட்டும் ஆட்சியாளரையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தூய்மை அற்ற பாதையில், கல்லில், முள்ளில் நடக்கும்போது நம்மைக் காக்கும் செருப்புகள் அந்தக் கசடுகளைத் தாங்குவதாலேயே தாங்கள் வீட்டிற்குள் (அல்லது ஆலயங்களுக்குள்) நுழைய முடியாமல் நிறுத்தப் படுகின்றன. அதைச் செப்பனிடுபவர்களும் தான். அதேபோலவே, நமது குடலையும், உடலையும் சுத்தப்படுத்திவிட்டு வெளியேறுகிற மலத்தைப் பற்றிய நமது தவறான புரிதல் காரணமாகவே அதுவும் அருவருப்பாகப் பார்க்கப்படுகிறது. அதை அகற்றிச் சுத்தம் செய்து தலையில் அள்ளிச் செல்வோரும் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

இந்த நூற்றாண்டிலும் மனித மலத்தை மனிதன் சுமப்பதைவிடவும் மலச்சிக்கல் ஒன்றும் பெரிய போராட்டமில்லை. மாற மறுக்கும் மனச் சிக்கல்களை உடைக்காமல் ஆரோக்கியமான சமூகமும் இல்லை..

---------------------------------------------------------------------------

எஸ் வி வேணுகோபாலன்


மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளில் இருந்து


Box matter

இடக்கரடக்கல்
சில சொற்களைச் சொல்வதனைத் தவிர்த்தல் இடக்கரடக்கல் எனப்படும். ஒவ்வொரு மொழியிலும் அம்மொழிக்கே உரித்தான சில சொற்களைத் தவிர்ப்பதுவழக்கினில் உள்ளது. பொதுவாக அவை நாகரிகம் கருதியும், பிறரிடம்சொல்வதற்கு ஏற்படும் சங்கடம் கருதியும், செய்யும் செயலுக்கான சொல்லைமறைத்துவிட்டு, வேறு சொல்லைப் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. மலம் கழிக்கச் சென்றிருப்பதனைக்காட்டுக்குப் போனான், கொல்லைக்குப்போனான், வெளியே போனான்போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். ‘கால்கழுவி விட்டு வந்தான்என்பது இடக்கரடக்கலாக மலம் கழித்து விட்டுவருவதைக் குறிப்பிடுகின்றது.


*****
நன்றி: Bank Workers Unity - மே 2010

Comments

very informative.. good attempt.. continue writing.. best wishes to you
அன்பு ராம்கோபால்
உங்களது தொடர்ந்த அன்பும், ஊக்குவிப்பும் என்னை நெகிழவைக்கின்றன.,

நன்றி.

எஸ் வி வி
puduvaiAnbu said…
sugaathaaram patum paatu ipatiyaaga ovorunaalum velippatukirathu. aangila marunthukalai patri therinthukollum naam inthiya marunthukalaipatriyum tharpoothaya velai paluvukku aettrarpoola vaazhvatharkaana eliya utarpayirchikalaiyum eliya nalla uNavu pazhakkaththai perkollavum naam thotarnthu katrukkolla ventum.
vasudevan.mu said…
இதுக்காகவே தனிப் படிப்பு படிச்சிருப்பீங்க போல . செம விஷயம்.
ஒரு தடவை பேசிக்கொண்டிருக்கும்போது நம்ம உடற்கல்வி ஆசிரியர் தோழர் இரா.தேவனாதன் சொன்னார்.கருப்பங்கொல்லையில் கிடக்கும் அண்டவாயுக் கீரையை கொஞ்சம் (பத்து தழை போதும்)எடுத்து முருங்கை கீரை கடைவது போல கடைந்து சாப்பிடு.எத்தினி மாசம் அடைச்சிக்கிட்டு இருந்தாலும் புடுங்கிக்கிட்டு வந்திடும்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற