Skip to main content

அவர் நிழலில் .......... நானும், பிறரும்


நண்பர்களே, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கவிஞர் புதுவை ஞானகுமாரன் என்கிற தோழர் நாகசுந்தரம் அவர்களின் மறைவினையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அதில் பேராசிரியரும் என் நண்பருமான ஹேமலதா (9488077788) அவர்களின் அஞ்சலி

அவர் நிழலில் .......... நானும், பிறரும்

அடக்க, அடக்க, அடங்காமல் மேலெழும்பி மேலெழும்பி வரும் துயரம் அது. இனி என்ன்? எப்படி? என்ற பிதற்றலான கேள்விகள் வெடித்தது. அர்த்தமற்ற வெறித்த பார்வையாக மற்றவர்களுக்கு தெரிந்தது என் பார்வை. நினைவுகள் புரட்டி எடுத்தது.

அவரின் நடை, பேச்சு, எழுத்துவேகம், அதிராத குரல், மென்மை, வருடும் புன்னகை, இலக்கிய பேராவல், படைப்பு சுகத்தை அனுபவிக்கும் அவரின் உவகை, அவரின் பேனா வேகம், பெரும் நட்பு வட்டம், சுழன்றடித்து சலிப்பில்லாமல் சலசலப்பில்லாமல் இயக்க பணியாற்றும் முனைப்பு, செயல் துடிப்பு, எளிமை, கல்வி பணியில் பிடிப்பு, சுற்றுச்சூழல் காக்க்கும் பொறுப்புணர்வு, தெளிவான அரசியல் ச்மூக பார்வை, மாற்றுக்கருத்தை பல சமயங்களில் வெளிப்படுத்தாமல் விழுங்கும் மௌனம், சில சமயங்களில் தன் கருத்தை மாற்றிக் கொள்ள மறுக்கும் பிடிவாதம், யாருக்கும் ஓடி உதவும் இயல்பு, காயங்களை புறக்கணிப்புகளை ஏற்கும் பக்குவம், எல்லையற்ற பொறுப்புகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் ஆளுமை, குடும்ப உறவு அனுசரிப்பு, பிள்ளைகளின் திறன் உணர்ந்து திசை செலுத்துதல் என அவரின் முழுவாழ்க்கையையும் நினைக்க நினைக்க அவர் இல்லாத வெற்றிடம் மிக பெரியதாகப் படுகிறது.

ஆர்.என்.எஸ் என்றும் ஞானகுமாரன் என்றும் நாகசுந்தரம் என்றும் நாகலூர் நாகசுந்தரம் என்றும் ஆசிரியர் நாகசுந்தரம் என்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகசுந்தரம் என்றும் புதுவை இலக்கிய, சமூக பரப்பில் அறியப்பட்ட பெருஞ்செயல் முனைப்பு கொண்ட நாகசுந்தரம் அவர்களின் இதயம் துடிக்க மறுத்துவிட்ட செய்தி இடியாய் செப்டம்பர் நாளில் நண்பர்கள் தலையில் இறங்கியது. தீரும் துயரம், தீரா துயரம் என உண்டெனில் இது தீரா துயரம்.

இச்செய்தியை அவரின் நட்பு வட்டங்களுக்கு சொல்லும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்த்திட்டது. தொலைபேசியில் நாம் அவர்களிடம் “நாகசுந்தரம் இனி இல்லைஎன்றதும் எதிர்புறத்தில் நம்ப மறுத்து மௌனம் காத்து, நினைவு மறுத்து, கலைந்து சில நொடிகளில் உண்மை தாக்க வெடித்து கிளம்பியது அழுகையும் ஆற்றாமை ஓலங்களும். எத்தனை அழுகையை கேட்க நேர்ந்தது அன்று. “என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்க? யாரு? யாரு இறந்துட்டாருன்னு சொல்றீங்க? என நம்ப மறுத்த குரல்கள் அவை. “பத்திரிகை சம்மந்தபமா நாளைக்கு நான் அவரை சந்திக்க இருந்தேனே! ஐயோ!, “எங்கள் கூட்டத்திற்கு அழைப்பு தர இருந்தேனே, ஐயோ!” “நேற்று அவரை ஒரு புத்தக தொகுப்பு சம்பந்தமா சந்திக்க வேண்டியிருந்தது, முடியவில்லை. ஐயோ!என எத்தனை ஆதங்கங்கள், அழுகைகள், செய்தி தவறாக இருக்க கூடாதா என்கிற ஏக்கங்கள்...

எனக்கான இழப்பு அதிகம். தோழன் இழந்தேன். இணைந்து பணி செய்யும் தருணங்களை இழந்தேன். என் எழுத்து காவலனை இழந்தேன். என் கருத்து பரப்பை செழிக்க செய்யும் உரத்தை இழந்தேன். வாதிடும் மறுமுனையை இழந்தேன், பேசுவதையே வாழ்வதிலும் கை கொள்ள வேண்டும் என்று தூண்டிய நெறியாள்கை இழந்தேன், என் சிறு சிறு படைப்புகளையும் உச்சி முகரும் பிரசுரித்து பார்க்க்கும் விமர்சகனை இழந்தேன். என் படைப்புகளின் தமிழ்பிழையை திருத்தி தலையில் குட்டும் கையை இழ்ந்தேன். வாசிப்பது சுவாசிப்பது போல் ஆகட்டும் என்பதை வாழ்த்து செய்தியாய் சொல்லிக்கொண்டேயிருந்த கிளியை இழந்தேன்.

புதுவை இலக்கிய பரப்பு இந்த மரணத்தால் இழந்தது ............ அதிகம். இளங்கவிஞர்களை எப்படிதான் அடையாளம் காண்பாரோ தெரியாது. இவர்களின் ஏராளமானோரை மேடையேற்றி பார்த்தார். பெண் படைப்பாளிகளை, கவிஞர்களை முன்னிறுத்தினார். புதுவையிம் உலவும் பல சிற்றிதழ்களின் ஆலோசகரானார். அவற்றின் பிரதான பங்காளிப்பாளர், “எழுதுங்கள்! எழுதுங்கள்! என்ற மந்திர வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டேயிருந்தார். எந்த மேடையையும் தன் கருத்து மேடையாக்கி கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது. முகிழம் சிறு சிறு இலக்கிய அமைப்புகளையும் நம்பிக்கையோடு ஆரத்தழுவிக் கொண்டார். ஆசிரியர்க்கு கடிதம், எதிர்வினை என்று சிறுசிறு கருத்து பதிவு தளங்களையும் புகுந்து வந்தார். புதுவை இலக்கிய பரப்பு முழுவதும் வியாப்பித்திருந்தார். கட்டுரை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு, ஆய்வு கட்டுரைகள் என்று அவர் பெயர்தாங்கி

வலம் வந்த நூல்கள் நிறைய.......

குறிப்பாக சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அவையும் நிறைய நிறைய நிழலாடுகின்றன... 1996 என்று நினைக்கிறேன். வளர்ந்து உயர்ந்து நின்ற நாகசுந்தரம் என்ற எழுத்தாளர் தனது சிறுகதை தொகுப்பு விமர்சன கூட்டத்தில் விமர்சன உரையாற்ற, அப்பொழுதுதான் எழுத துவங்கியிருந்த என்னை அழைத்தார். அப்பொழுது பொங்கும் ஆர்வத்தில், அவர் சிறுகதைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி தள்ளினேன். இப்பொழுது யோசிக்கிறேன். ஏன் எல்லோரையும்போல் அவர்க்கு இணக்கமான பெரும் இலக்கியவாதிகளை கொண்டு விமர்சன கூட்டம் நடத்தி தன்னை அவர் உயர்த்திக் கொள்ளவில்லை? பொட்டில் தெரிக்கிறது உண்மை. என்னை விமர்சகராக வளர்க்கும் முனைப்பில் அவர் செய்துகொண்ட முடிவு அது. ஐயோ! என பதறுகிறது. பிரம்மாண்டங்களில் நம்பிக்கையில்லாதவர் அவர்.

அவரை குறித்து, அவர் செயலாற்றலை குறித்து, அவரின் சிந்தனைகள் குறித்து நாம் ஏதோ ஒரு வடிவில் பேசிக்கொண்டேயிருப்பது அவரை முன்னுதாரணமாக பலர் கொள்ளும் எழுச்சியை உருவாக்கும்.

ஒரு 150 பக்க டைரிக்குள் பல சுற்றறிக்கைகளை, கூட்ட அழைப்புகள், செய்தி சித்தரிப்புகள், கருத்து நோட்டீஸ்கள் என்று ஏராளமானவற்றை செருகிக் கொண்டு கருத்துலகமாய் அலைந்தவர் அவர். ஏன் என்னால் இப்பதிவை எழுதிகொண்டே போவதை நிறுத்த முடியவில்லை.... நிறுத்த முடியவில்லை....

என் குழந்தை கடந்த ஆண்டு என் தந்தையை (தாத்தாவை) இழந்தது. இந்த ஆண்டு நாகசுந்தரம் தாத்தாவை இழந்து தவிக்கிறது. இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்க போகிறாளோ?

குறிப்பு : நாகசுந்தரம் இறுதி சடங்கிற்கு முன் வீட்டில் கிடத்தப்பட்டிருந்தபோது அவர் தலைமாட்டில் அவரின் ஆதர்ச கவிஞர் பாரதியின் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆமாம்! நாம் நாகசுந்தரம் அவர்களை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம்.

Comments

அன்புத் தோழர் ராம்கோபால்

பேராசிரியர் ஹேமா என் எதிரே அமர்ந்து தனது இதயம் வெடிக்கக் குமுறிக்கொண்டே பேசுவது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது தனிப்பட்ட இழப்புக்குள் அவர் நுழையும்போது, குபுக்கென்று ஒரு துளி கண்ணீர் துளிர்த்தது. தோழர்களின் தோழனாக, அந்தச் சொல்லை வெற்றுச் சொல்லாக இல்லாமல் அதன் உட்பொருள் அறிந்த நேயராக, பிரபஞ்ச ரகசியத்தினைக் கற்றுத் தேர்ந்துவிட்ட ஞானியாக வலம் வந்த அந்த அற்புத மனிதரின் ஆளுமையின் வீச்சை ஹேமாவின் அபார எழுத்துவன்மை பெரிய சித்திரமாக வரைந்து நிறுத்தியிருக்கிறது.

புதுவை ஞானகுமாரனை இழந்ததன் வலியை விடவும், அவரை நெருங்கி அறியும் வாய்ப்பைப் பறிகொடுத்துவிட்ட சோகம் அதிகம் வாட்டி எடுக்கிறது.

எஸ் வி வேணுகோபாலன்
தோழர் நாகசுந்தரம் முன்னெடுத்துச்சென்ற கலை, இலக்கியக் கொள்கைகளை,இலட்சியங்களை உயர்த்திப்பிடிப்போம் என உறுதி ஏற்போம்.. அதுவே அத்தோழருக்குச் செய்யும் அஞ்சலி
தோழர் நாகசுந்தரம் முன்னெடுத்துச்சென்ற கலை, இலக்கியக் கொள்கைகளை,இலட்சியங்களை உயர்த்திப்பிடிப்போம் என உறுதி ஏற்போம்.. அதுவே அத்தோழருக்குச் செய்யும் அஞ்சலி
என்ன சொல்ல முடிகிறது.எதையும் எதிர்பார்க்காத -ஆழ்ந்தடங்கிய அமைதியின் -எளிமையின் மனித வடிவாக அவர் வாழ்ந்து மறைந்து நமக்கு வழிகாட்டுகிறார்.நேரில் வந்து இறுதி அஞ்சலி செய்யாத துக்கமும் குற்றமும் மனதை அழுத்திக்கொண்டிருக்கிறது.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...