
சைப்ரஸ் மரத்தால்
நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பான வகையில்
ஒரு பெட்டி செய்தேன், எதற்காக?
அதில் பை லெடியன் என்ற
எனது பெயர் குறிக்கப் பட்டிருந்தது
என் வாழ்நாள் முழுவதும் ஓர் எழுத்தாளனாகவே
இருந்துவிட்டேன்..
என் மூவாயிரம் கவிதைகளையும், உரைநடையையும்
எழுபது பாகங்களாக நான் சேகரித்து வைத்தேன்
கடைசியில் அவை அழிந்தும் தொலைந்தும்
போய்விடும் என்று எனக்குத் தெரியும்
இருந்தும்
அவை வீசி எறியப் படக் கூடாது என்றே விரும்பினேன்
எனவே அவற்றைப் பூட்டி என் கவனத்திலேயே வைத்திருப்பேன்.
எனக்கு மகன்களோ
என் எழுத்தின் மீது கவனம் கொண்டவர்களோ
இல்லை
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவற்றை என் மகளிடம் கொடுத்து
என் பேரனிடம் ஒப்படைக்க விடுவதுதான்...
- சீனக் கவிஞன் பை ஜூயி
(கி பி 772 - 846)
தமிழில்: சுந்தர்ஜி
(கி பி 772 - 846)
தமிழில்: சுந்தர்ஜி
பாங்க் ஒர்க்கர்ஸ் யுனிட்டி பத்திரிகையின் ஏப்ரல் இதழின் முகப்பு அட்டை என்னை பாதித்தபடி இருக்கிறது. மாநகரத்தின் மழை நீர் பெருகிய தெருவின் குறுக்கே, தான் நடக்கவே தள்ளாடும் மனிதர் ஒருவர் மெனக்கெட்டு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு கடக்கும் அந்தக் காட்சி (புகைப்படம்: சி சி விஜயகுமார்) எத்தனையோ சிந்தனைகளை விதைத்தது. கம்சனிடமிருந்து காப்பாற்றி குழந்தைக் கண்ணனைத் தனது தலைமேல் தாங்கி யமுனை நதி கடந்து செல்லும் வசுதேவர் பற்றிய புராணக் கதையைக் கூட நினைவிற்குக் கொண்டுவந்தது. புத்தகங்களின் மேலான காதல் அவற்றைப் பார்க்கும்தோறும் மேலும் மேலும் கூடுகிறது.
எத்தனையோ கேளிக்கைகள், விளையாட்டுக்கள், ஊடகத் தாக்கங்கள் வந்தபின்னாலும், விடாப்படியாய்ப் புத்தகம் தேடி அலைபவரும் நிறைய கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். புத்தக் கண்காட்சிகளில் கூட்டம் பொங்கத் தான் செய்கிறது. விதவிதமாகவும், ரசனை மிக்கதாகவும் புதுப்புதிதாய் நூல்கள் குவிகின்றன. நாளேடுகளில், வார மாத இதழ்களில் நூல் மதிப்புரை, புத்தக அறிமுகம் எல்லாம் இடம் பெறவே செய்கின்றன. வாசகர் இல்லாத உலகத்தில் இவற்றுக்கு என்ன வேலை இருக்க முடியும். எனவே வாசகர் திரள் இருக்கத்தான் செய்கிறது... புத்தக தினத்தைத் தமது சொந்த பிறந்த நாளாகவே கருதுகிற அளவிற்கு வெறி பிடித்த வாசகர்கள் எண்ணற்றோர் இருக்கவே செய்வர்.
புத்தக அலமாரியில் குடியிருப்பவை நூல்கள் அல்ல, மனித இதயங்கள், வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள். உடைந்த உள்ளத்தை இதமாக்கவல்ல மருந்து சீசாக்கள். கனவுப் பைகள். இலட்சிய வேகத் தீக்குச்சிகள் அடுக்கிய வத்திப் பெட்டிகள். வருங்கால விடியலுக்கு வற்றாது வழங்கவல்ல பொற்காசு உண்டியல்கள்...........இன்னும் எவ்வளவோ சொல்லப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் பரவச உலகில் குடிபுக நேரம் என்ன, காலம் என்ன...
ரஷியப் புரட்சிக்கு உரமூட்டியத்தில் நூல்களுக்கு இருந்த பங்கு அளப்பரியது. ஆயுதங்கள் இல்லாது கூட ஒரு புரட்சி சாத்தியப் படக் கூடும், புத்தகங்கள் இல்லாது அல்ல என்பார்கள் சமூக விஞ்ஞானிகள். எழுத்துக்களுக்கு காட்சிப்படுத்தும் ஆற்றலும் இருப்பதால், ஒரு பேச்சு எழுப்பும் ஆவேசத்தை, ஒரு சித்திரம் உருவாக்கும் உருக்கத்தை, ஒரு புகைப்படம் வழங்கும் தகிப்பை ஒரு நூலிலிருந்து வாசகனால் பெற்று விட முடிகிறது. கண்ணீர் வழியச் சிரிக்க வைக்கவும், கதறிக் கதறி அழவைக்கவும் இயலுகிறது நூல்களுக்கு. யாருமற்ற அறைக்குள் இருந்து கொண்டே எல்லோரோடும் கலந்து கொண்டிருக்க வைக்கின்றன நூல்கள்.
பழைய நூல்களின் ஏடுகள் முந்தைய வாசகரின் பிரிவினாலேயே தமது நிறமும் மணமும் இழந்து மக்கிப் போயிருக்கின்றன என்றார் ஒருவர். வாசிக்கப் படாமல் போனவைக்கு அதிக நிறமிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். கடந்து போனவர்களின் தடயங்களோடு கையில் சேரும் புத்தகங்களுக்கு நம்மிடம் சொல்ல எத்தனையோ செய்திகள் இருக்கும்.
கால வெள்ளத்தில் கரையாமல் இருப்பவை நூல்கள் என்று சொல்ல விரும்பினாலும், காலத்தைக் குறித்த விழிப்புணர்வைச் சொல்லிக்கொண்டிருப்பவையே நிற்கத் தக்க நூல்களாக இருக்க முடியும். மனிதத்தை உயர்த்துபவை எவையோ, மனித நீதிக்கு முரணான எதையும் எதிர்க்கத் தூண்டுபவை எவையோ அவையே நிற்க வேண்டுபவையும் ஆகும்.
ஏப்ரல் 23 , உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என்பதாலேயே உலக புத்தக தினமாய் மலர்ந்திருக்கிறது. மனிதர்கள் ஒற்றை ஒற்றை ஆளாகப் பிரிந்து கிடக்க சாபமிடப்பட்டு வரும் புதிய தாரள மய சூழலில், அடுத்தவர் உடல் மீதும், உள்ளத்தின் மீதும் வன்முறை செலுத்தக் கூசாதவர்களாக மாந்தர்களைப் பயிற்றுவிக்கும் ஏகாதிபத்திய சவால் நிறைந்த பெருவெளியில் மெனக்கெட்டு நூல்களை தலைமேல் தாங்கி அடுத்தடுத்த தலைமுறைக்கும் நூல்களைக் கொண்டு சேர்க்கத் தூண்டட்டும் உலக புத்தக தினம்.
மெல்லுணர்வின் இசைக் காற்றாகவும், இயற்கை கொண்டாடியாகவும் எழுதிக் குவித்துச் சென்ற சீனக் கவி பை ஜூயி படைத்த உலகம் அவன் மறைந்து பல நூறு ஆண்டுகள் கடந்தும் நம் முன்னே வதிவதைப் போலவே தழைக்கட்டும் புத்தக உலகம்.......
உலக புத்தக தினம்
நண்பர்களே, மீண்டும் தோழர் எஸ்.வி.வி.யின் கட்டுரை சுமந்து இப்பூ மலர்கிறது. வாசித்து இன்புறுங்களேன்..
Comments