Skip to main content

வாழும் மூதாதையர்கள் - தமிழகப் பூர்வகுடி மக்கள் அறிமுகம்

இரண்டு முக்கிய முன்முடிவுகள் உடைபடுவதில் இருந்து "வாழும் மூதாதையர்கள்" நூல் தொடங்குகிறது. “காட்டில் இருந்து அவர்களை சமதளத்தில் இறக்கி அவர்களை நாகரிகமயப்படுத்த வேண்டும்" என்ற குரலில் ஒரு அபத்தம் இருப்பது இப்புத்தகம் படிக்கையில் தெரிய வரும். அதே சமயம் "மனிதர்களற்ற காடுகள் அல்லது காடுகள் காட்டு விலங்குகளுக்காவே " என்ற குரலின் பின் இருக்கும் ஆபத்தை முகவுரையிலேயே விளக்கி இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர்.  நூலாசிரியரின் இந்தக் கவலையே இப்புத்தகத்தில் தமிழக பழங்குடிகள் குறித்த ஒரு விரிந்த அறிமுகத்தை தமிழ் சமூகத்திற்கு செய்கிறது என புரிந்துகொள்ளலாம்.


பழங்குடிகள் குறித்த அறிவாக தமிழ் சமூகத்தில் என்ன இருக்கிறது?! பழங்குடிகள் அநாகரிகமாக சொன்னால் காட்டுமிராண்டிகள், நாகரிகமாக காட்டுவாசிகள் என்பதாக சொன்னாலும் அவர்கள் அறிவற்ற மூடர்கள், விதி வந்ததே வாழ்க்கை என வாழ்பவர்கள், சமதள மக்களிடம் பயந்து இருப்பவர்கள், ஆபத்தானவர்கள், நாகரிக வாழ்வு குறித்த எந்தவித நாட்டமும் இல்லாதவர்கள் என்பதாக இருப்பதாக கொள்ளலாம். இவை அத்தனையும் பொய் என்பதனையும் அவர்களும் முன்னேற்றம் காண விரும்புகிறார்கள் (எவர் தான் முன்னேற்றத்தை வெறுப்பவர்களாக இருப்பர்?) என்பதோடு அவர்களுக்கும் இயற்கையான மருத்துவ அறிவு, விலங்குகளுடனான உறவு, சூழல் குறித்த ஒரு நேசம் இருப்பதும் இப்புத்தகத்தில் இருந்து நீங்கள் அறியலாம்.


தோடர், பனியர், காட்டுநாயக்கன், குறும்பர் என தமிழகத்தின் எல்லா தொல்குடிகள் அல்லது பழங்குடிகள் குறித்த வரலாறு, வாழும் இடம், உண்ணும் உணவு, திருமண இறப்பு பிறப்பு சடங்கு என கலாச்சார பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாமும் இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகிறது. ஆசிரியர் இவர்களின் வாழிடம் தேடி சென்று பல நூறு கிலோமீட்டர்கள் ஏறி இறங்கி இந்நூலை படைத்திருக்கிறார். காலப்போக்கில் அசல் வாழிடங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் புறம் ஏகிய இவர்களின் வாழ்வில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் குறித்தும் பலவேறு செய்திகளை படைக்கிறார் நூலாசிரியர் அன்பு தோழர் பகத் சிங். அந்த மாற்றங்கள் பழங்குடிகளுக்கு தொல்குடிகளுக்கு உகந்தவையாக இருந்ததா அல்லது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு என்ன விடை இருக்க முடியும்?

1990 தொடங்கி இறுகி கெட்டிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் இந்திய ஏழை எளிய மக்களின் வாழ்வை சூறையாடியுள்ளதை எவரும் அறியலாம். சமதளத்தில் வாழும் ஓரளவு பள்ளிக்கூட கல்வியறிவு பெற்ற , நலத்திட்டங்களின் பயனை ஒரளவுக்காவது அனுபவித்து வந்த மக்களுக்கே வாழ்வியல் நெருக்கடிகள் மிக அதிகமாக கூடியுள்ளது என்றால் இயற்கை வளங்கள் எல்லாம் கார்ப்பரேட் கொள்ளைக்கே என முடிவுக்கு வந்துவிட்ட உலகமய சூதாடிகள் பழங்குடிகளை மட்டும் என்ன விட்டு வைக்கவா போகிறார்கள்? ஒரு பக்கம் காட்டு விலங்குகள் நாட்டுக்குள் வந்து மனிதர்களை தொந்தரவு செய்கிறது அதனால் காடுகள் விலங்குகளுக்கே என சொல்லி பழங்குடிகளை அவர்கள் வாழிடமான காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு சூது என்றே பார்க்க வேண்டும். மறு புறம் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் அதனால் காட்டு விலங்குகள் அருகி வருகிறது என்று காரணம் சொல்லி பாதுகாக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட வனப்பகுதி அல்லது புலிகள் சரணாலயம் என்பதாக பழங்குடிகள் காடுகளிலிருந்து விரட்டி அடிக்கப்படுவதும் நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட் என்ற பெயரில் தொடர்ந்து காடுகள் ஆக்கிரமப்படுத்தப்படுகிறது என்பதும் காட்டு வளங்கள் வளர்ச்சி என்ற பெயரில் முற்றாக சூறையாடப்படுவது தங்கு தடையின்றி நடைபெறுகிறது. சுமார் 2 இலட்சம் மரங்களை சுரங்கத்திற்காக வெட்டித்  தள்ள அதானி குழுமத்திற்கு எந்த தடையும் இல்லை என்பதோடு காடுகளை பாதுகாக்க முற்படும் பழங்குடிகள் அரசால் மிரட்டப்படுவது தொடர்கதையாகிறது. இப்படியான சூழலில் பழங்குடிகள் குறித்த அறிவு என்பது மிகவும் அவசியமாகிறது. மனிதர்கள் என்ற குறைந்த பட்ச சிந்தை கூட இல்லாமல் சமூகம் இந்தப் புத்தகத்தை படித்தபின் கடக்க முடியாது.

 

நவீன சமூகம் அறிந்திராத பாரம்பரிய இயற்கை அறிவினை கொண்டவர்கள் பழங்குடிகள். அவர்களின் மருத்துவ அறிவு பிரமிக்கத்தக்கது. அது போலவே, உணவுப் பழக்கமும், காட்டு விலங்குகளுடான உறவும், வேட்டைப் பழக்கமும் இவை யாவும் இப்புத்தகத்தில் அழகாக வந்து நம்மை அசத்துகிறது. அது  போலவே நல்லெண்ணம் கொண்ட மக்கள் இந்தப் பழங்குடிகளின் அறிவினை வெகு சமூகத்துக்கு பயனளிக்கும் வகையிலும் அதே சமயம் பழங்குடிகளின் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் உழைத்திருப்பதை இப்புத்தகத்தில் அறியலாம். ஆனால் இது எல்லா பழங்குடிகளின் வாழ்விலும் பிரதிபலித்துள்ளதா என்பதும் அவை போதுமானதா என்பதும் கேள்விக்குறியே. சாதி சான்றிதழ் கொடுப்பதில் கூட பெரும் பிரச்சனை நிலவுகிறது.

 

ஒரு டையரி போலத்தான் பழங்குடி மக்களின் வாழ்வும் பதியப்பட்டிருக்கிறது என்றாலும் சில ஆய்வுகளை நோக்கிய கேள்விகளை விட்டே செல்கிறது இந்நூல். மணப்பெண்ணிற்கு மணமகன் கொடுக்கும் மனநிச்சய தொகை என்பது அநேக இன மக்களின் பண்பாட்டில் 5இனி மடங்காகவே இருக்கிறது? அநேகமாக பல பழங்குடிகளின் கலாச்சாரத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு ஏழு நீர் கொண்டே தீட்டு கழிக்கப்படுவது எதனால்? இது போன்றவை இன்னும் நிறைய இருக்கின்றன. திருமணங்கள் பெரும்பாலும் விருப்பப்படியும் அதே சமயம் திருமண விலக்கும் கூட விருப்பப்படியும் இசைவுடனே நடக்கின்றன என்பதும் சிறப்பு செய்திகள். திருமணமான பின் பெரும்பாலான இனங்களில் தனிக்குடித்தனமே வைக்கிறார்கள். எந்தவித ஆபத்தும் இன்றி இருந்தால் இந்தப் பழங்குடிகள் வாழ்வு வயது என்பது சராசரிக்கும் அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

 

அமெரிக்கா என்னும் வள தேசத்தின் பின்னே பூர்வ பழங்குடிகளின் ரத்த ஆறும் ஓடுகிறது என்று சொல்வார்கள். பூர்வகுடிகளின் எழுச்சி என்பது சமீபத்தில் பொலிவியா நாட்டில் நடந்தேறியது. மார்க் சியராக தன்னை அறிவித்துக் கொண்டு பொலிவியாவின் தலைமைப் பீடத்தில் உயர்ந்தவர் எவா மொரேல்ஸ். அவர் ஒரு பழங்குடி இனத்தவரே. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில், நியுசிலாந்தில் பழங்குடி இன அபோரிஜின் மக்கள் பேரணி சென்றதையும் சில நாடுகளில் அவர்களுக்கான தினங்கள் கொண்டாடப்படுவதையும் நாம் செய்திகளாக படித்திருக்கிறோம்.  தமிழக பழங்குடி இன மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களை நிச்சயமாக எதிர்பார்க்கிறோம் நாம். ஆனால், அவற்றை அந்த பழங்குடி இன மக்களின் சம்மதத்தோடு (வலிந்து பெறப்பட்டது அல்ல) அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையட்டும் என்பதையே இந்நூலாசிரியர்  வலியுறுத்துகிறார்.


இறுதியாய், சொல்லவிட மறந்து போகக் கூடாத ஒன்று. தமிழ்ப் பதிப்பு உலகில் வழவழ தாளில் பல வண்ண புகைப்படங்களோடு ஒரு புத்தகம் என்பது மிக சமீபத்தில் இது ஒன்றே. அதற்காகவே உயிர் பதிப்பகத்தாரை நிச்சயம் பாராட்டலாம். ஒளிப்படம் பிடித்த அத்தனை பேரும் சிறப்பு பாராட்டுக்குரியவர்கள். முள் கீரீடம் (தலித் ஊராட்சி மன்ற தலைவர்களின் நிலை) என்னும் புலம் வெளியீட்டினை தொடர்ந்து தோழர் பகத் சிங் அவர்களின் அடுத்த புத்தகம் இது. வாழும் மூதாதையர்கள் - தமிழக பழங்குடி மக்கள் என்னும் நூல் நிச்சயம் வாசிக்கத்தக்க ஒன்று.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...