
கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம்.
அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது", என சற்றே இழுத்து தொடங்கும்போது வானொலியை நோக்கி நம் கவனம் முழுமையும் இழுப்பவர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தென்கச்சிநத்தம் என்கிற ச சிற்றூரில் பிறந்தவர். படித்தது விவசாயம். வானொலியில் பணி கிடைத்ததும் விவசாயத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே. அதுநாள் வரை விவசாய அறிவிப்புகளை "நெல் பயிரில் கும்பகோணம் பகுதியில் பூச்சிகடி அதிகம் தென்படுகிறது, அதற்கு ......... போடவும்" என்கிற ஏதோ வேதாகமம் படிக்கும் பாதிரியின் குரலில் ஒலித்ததை மாற்றி "ஆங்.. கும்பகோணம் பகுதியில் இருக்கும் விவசாயிகளே, உங்க அருமையான உழைப்பில் விளைந்திருக்கும் நெற் பயிரிலே பூச்சிங்க தொல்லை அதிகமாக இருக்குதாமா, என்ன?, நீங்க அந்த........ பூச்சி மருந்தை போடுங்க, கட்டுப்படுத்திடலாம், ஒன்னும் கவலையில்ல, விளைச்சல் அமோகமா இருக்குமுங்க" என்கிற தொனியில் விவசாயிகளோடு தோள் நின்று முதன்முதலில் வானொலியில் சொன்னவர். இது ஏதோ எளிதான விஷயம் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாஸ்திரிய சங்கீதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நாட்டுப்புற கலைகளை சவலைப்பிள்ளையாக கவனிக்கும் வானொலியில் இத்தகைய மாற்றத்திற்கெல்லாம் பெரிய போராட்டத்தினை நடத்தியாக வேண்டும். அந்த வகையில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியவர் தென்கசசியார்.
இதற்குப்பிறகே அவருக்கு புகழினை தந்த "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியின் தொடக்கம். சென்னை வானொலியில் அவர் பணியாற்றி வந்த சமயத்தில்தான் இந்த நிகழ்ச்சியை அவரே குறிப்பிடுவதை போல் அபபோதைய சென்னை வானொலியின் இயக்குநர் திரு.கோ.செல்வம் என்பவரது முன்முயற்சியால் துவங்கியது. ஒரு முறை அவருடைய நண்பரோடு பேசும்போது தெரிய வந்தது, இந்த நிகழ்ச்சி ஒரு "ஃபில்லர்" (ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதிக்கும், அடுத்த நிகழ்ச்சியின் துவக்கத்திற்கும் இடையே உள்ள சில மணித்துளிகள்) என்கிற அடிப்படையிலேயே துவங்கப்பட்டது. பின்பு வந்த காலங்களில் தென்கச்சியாரின் உழைப்பினாலும், தொடர்ச்சியான வாசிப்பினாலும் அந்த நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை ஈட்டித்தந்த நிகழ்ச்சியாக பரிணமித்தது. வானொலி வரலாற்றிலேயே சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து வந்த நிகழ்ச்சி அது ஒன்றே. ஒரு செய்தியை குட்டிக் கதையாக்கி, இறுதியில் ஒரு நகைச்சுவை துணுக்கோடு 3 முதல் 4 நிமிடங்களில் சுவைப்பட சொல்ல முடிந்தது தென்கச்சியாரின் திறமை..
தென்கச்சியாரின் உழைப்பும் வானொலியின் அவரது பற்றும் வியப்பிற்குரியது. வானொலி நிகழ்ச்சிகளெல்லாம் சுமார் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்துகொள்ள வேண்டும். அப்போதெல்லாம் கணிப்பொறி வராத காலம். வட்டமாய மிக அழகாய் ஒரு ஒழுங்கோடு சுழலும் இந்து என்ற பெயர் கொண்ட டேப் கொண்டே நிகழ்ச்சிகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். திடீரென்று அறுந்துவிட்டால் ஓடிச்சென்று அறுந்த இடத்தை ஒட்டி பின் மீண்டும் துவங்க வேண்டும். அது எப்போது அறுந்து விடும் என்பது தெரியாது. நாம் பேசும்போது மிக கவனமாக பிசிறில்லாமல் பேசிவிட வேண்டும். அதற்காகவே பலமுறை ரிகர்சல் எல்லாம் செய்துகொண்டு பேசுவார்கள். தென்கச்சியார் ஒரு டேக்கிலேயே முடித்து விடுவாராம். இப்போது டேப் இல்லை. பேச்சின் நடுவில் தும்மினாலும், இருமினாலும், கனைத்தாலும் எடிட்டிங் செய்துவிடலாம். ஒவ்வொரு நாள் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியின் துவக்கத்தில் பதட்டத்தோடே இருப்பாராம். முடிந்ததும் தான் தண்ணீர் குடிப்பாராம். இந்த பதட்டம் மிகச்சிறந்த பாடகர்களுக்குகூட ஒவ்வொரு மேடை கச்சேரிக்கும் முன்னரும் இருக்குமாம்.
வானொலியில் ஒரு நிகழ்ச்சி பதிவு செய்வதென்பது ஒரு நபர் வேலையல்ல. சுழலும் டேப் முன்னர் ஒருவர் அமர்ந்து பதிவுக்கருவியை இயக்க வேண்டும். பேசுகிறவர் ஸ்டுடியோவில் பேச வேண்டும். அப்போதுதான் சாத்தியம். ஆனால் தென்கச்சியார் அவரது நிகழ்ச்சிகளை தனியாகவே பதிவு செய்வாராம். அதுவும் அதிகாலை 6:30 மணிக்கே. ஒரு முறை அவர் நிகழ்ச்சியை பதிவு செய்துகொண்டிருந்தபோது துப்புரவு செய்யும் பெண் அந்த காலைப்பொழுதில் அவர் தனியாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்து பயந்தேவிட்டாராம். தென்கச்சியாரை "ஏன் தனியாய் பதிவு செய்கிறீர்கள்? யாரும் கேட்டுவிடப்போகிறார்கள் என்கிற பயமா?" என கேட்டபொழுது, "எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். யாரும் எதிரில் இருந்தால் பேசவராது, அதனாலே நானே தனியாகவே பதிவு செய்யத் தொடங்கினேன்" என்றாம் பல்லாயிரக்கணக்கான வானொலி நேயர்களை காற்றலையின் மூலம் தன் குரலில் கவர்ந்தவர்.
இன்று தென்கச்சி கோ.சுவாமிநாதன் நம்மோடு இல்லை. அவர் குரல் நம் குட்டிக்காலத்து நினைவுகளாக நம்மோடு பலகாலம் இருக்கும்.
Comments