Skip to main content

அரசு ஊழியர்களின் ஒழுங்கு ...


நேற்று அந்த செய்தி பிரதானமாக தொலைக்காட்சிகளில், குறிப்பாகத் தனியார் தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது. இன்று காலை (02.09.09) செய்திதாள்களிலும் (ஆங்கிலம்) முதல் பக்கத்தில் அதே செய்தி. என்ன அது? நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. பங்குசந்தை சிதம்பரம் அவர்கள் டெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் BIO-METRIC வருகை பதிவேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் உட்பட இனி ஒருவரும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக இனி அவரது துறை அலுவலகத்திலுள்ள அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்யாமல் வீடு திரும்ப முடியாது. "புரட்சி", சிதம்பர சாகசம்" என்று ஊடகங்கள் புகழாரம் செய்கின்றன. இதை இந்தியா முழுமையும் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கிகள் பயன்படுத்தினால் அந்நியன் திரைப்படத்தில் ஒரு தாத்தா வெளிநாட்டிலுள்ள தன் மகனிடம் பேசுவது போல "உங்க ஊர் என்னடா பெரிய ஊரு, இந்தியாவைப் பாரு, சொர்க்கம்டா" என்கிற நிலை வரும் என்பது போல் ஊடகங்கள் அலறுகின்றன.
சரி, மேற்சொன்ன செய்தியை எவ்வாறு பலரும் பார்ப்பார்கள்? வெகுவாரியாக தனியார் துறையில், முறை சாரா துறையில் பணி செய்பவர்கள் இந்த செய்தி உண்மையாகி, இந்தியா மாற்றம் காணாதா என விழைவார்கள். சோ வகையறாக்களும், அரசுத்துறையில் பணியாற்றும் பலரும் இதெல்லாம் சரி வராது. இந்த மாதி எத்தனை பார்த்திருக்கிறோம் என நினைப்பார்கள். தன்னை சுயவிமர்சனம் செய்யாமல் விமர்சனம் மட்டுமே எப்போதும் செய்யும் மத்தியதர வர்க்கத்தினர், இதையும் ஒருவித அசட்டையுடனே சரி என சொல்வோரிடத்து சரியில்லை என்றும், சரியில்லை என்போரிடம் சரி என்றும் விவாதம் மட்டுமே செய்து அன்றைய பொழுதை கழிப்பார்கள். தினக்கூலிகளும், விவசாயிகளும், ஏழைகளும் எப்போதும் போல இதை செவிமடுக்க நேரமில்லாது தங்களை வறுமையின் பிடிகளுக்குள் தாங்கள் இன்னும் இறுகாமல் தப்பிக்க உழைத்திருப்பார்கள்.


தொழிற்சங்கப் பிரதிநிதிகள், "அப்படியென்னங்க, அரசு ஊழியர்கள் வேலை செய்யாமலா இந்தியா இவ்வளவு மாற்றத்தை கண்டிருக்கிறது? ஒரு குழல் விளக்கு தெருவிளக்காக இருந்த நிலை மாறி இன்று கண்ணை மயக்கும் நியான் விளக்குகள் வரவில்லையா? இவ்வாறாக ஏகப்பட்டது சொல்லலாம். பெருகி வரும் மக்கள் தொகைக்கு கொஞ்சமாவது ஈடு கொடுக்கும் வகையில் மின்சாரமும், குடிதண்ணீரும், மருத்துவமும் வரவில்லையா? 30 வருடங்களுக்கு முன் உங்கள் ஊர் இருந்த நிலைக்கும் இன்றைக்கும் எத்தனை மாற்றங்கள் என யோசிக்கும் வேளையில், அவை அரசு ஊழியர்களின் உழைப்பில்லாமலா வந்தது என கேட்க தோன்றும். ஒரேயடியாக, அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்பதெல்லாம் காய்ச்சி வடிகட்டின பொய். புதிய ஆள் நியமனம் இல்லை, ரிடையர் ஆகும் பதவிடங்கள் நிரப்பப்படாமல் 10 வருடங்களாக இருக்கும்போது எத்தனை பேர் அவர்கள் வீட்டுக்கு இரவு வேளையில் செல்வதும், விடுமுறை நாட்களில் வேலை செய்வதும் நிகழ்கிறது தெரியுமா? அரசு ஊழியர்கள் வேலை செய்கிறார்களே அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கிடைக்கிறதா? பிரமோஷன் என்பதை வெறும் வார்த்தையிலே பார்த்து வாழ்க்கையில் பார்க்காமல் ஓய்வு பெற்றவர்கள் அநேகர் அரசுப் பணியிலே இருக்கின்றனர். ஒவ்வொரு ஊதிய உயர்வுக்கும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. கேட்டது ஒன்று, கிடைக்கும் என்று சொன்னது ஒன்று, கையில் கிடைக்கும்போது அது ஒன்றாக அல்லவா ஊதிய உயர்வு இருக்கிறது?

சரி, அப்படியே இருக்கட்டும். இந்த நாட்டில் வருமான வரி ஒழுங்காக ஏமாற்றாமல் செலுத்துபவர்கள் அரசு ஊழியர்கள் தவிர வேறு யார்? ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கோடி வருமான வரி பெருமுதலாளிகளிடம் வசூலிக்காமல் விட்டது என்று பாராளுமன்றத்தில் சொல்லியும், அவர்களுக்கு வரி சலுகைகள் அள்ளிக் கொடுத்துவிட்டு அரசு ஊழியர்கள் கிள்ளியும் , அதுகூட இல்லை தடவியும் கொடுக்கிறதே அரசு, அது நியாயமா? அவர்களிடம் எதிர்பார்க்காத சமூகக் கடமைகளை அரசு ஊழியர்களிடம் மட்டும் எதிர்பார்ப்பது சரியா? இந்த நாட்டில் அரசியல்வாதிகளின் யோக்கியதையை சொல்லவே வேண்டாம், இடதுசாரிகளைத் தவிர. ஹும், நீதிபதிகள் கூட தங்கள் சொத்தை வெளியில் சொல்ல யோசிக்கும் அவலம் இங்கேதானே இருக்கிறது! என் தந்தை அன்றைக்கு ஒரு சென்ட் நிலம் வாங்க பணம் இல்லாமல் இருந்தது போலத்தானே இன்றைக்கும் நான் இருக்கிறேன்?

கொஞ்சம், யோசித்தால் ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியும். இம்முயற்சி திட்டமிட்டு தொழிற்சங்கங்களை காலி பண்ணுகிற வேலை. தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிற்சங்க வேலை நிமித்தமாக வெளியே செல்வதை தடுக்கும் ஒரு மோசடி இத்திட்டம். தங்களது வேலையை முடித்துக் கொண்டே அவர்கள் தொழிற்சங்க பணியை செய்கிறார்கள் என்பதை வசதியாய் மறந்து அவர்களை இவ்வருகைப் பதிவேடு மூலமாக தண்டிக்கிற நினைக்கிற முதலாளித்துவ வசதி. 8 மணி நேரம் இருப்பதாலே வேலை நடந்துவிடுவதுமில்லை, ஒவ்வொரு வேலைநாளிலும் 8 மணி நேரத்திற்கான வேலை இருப்பதில்லை என்பது திரு. பங்குசந்தை சிதம்பரம் அவர்களுக்கு தெரியாமலா போயிற்று?"

இனி என்னோட கருத்து. இந்த மாதிரி வருகைப் பதிவேட்டு முறை என்பது தேவையற்றது என்பது ஒருபுறமிருக்க இது பின்னே இருக்கும் சில விஷயங்களையும் கவனிப்போமே. எத்தனை அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்கு குறித்த நேரத்திற்கு செல்கிறார்கள்? சொந்த வேலைக்கு நடுவில் அரசு வேலை செய்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? டில்லியில் நீங்கள் பார்க்கலாம், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் காலை 11 மணி முன்னரும், மாலை 4:30மணிக்கு பின்னரும் பெரும்பாலானோர் இருப்பதில்லை. மதிய உணவு இடைவேளை என்பது சுமார் 1 மணி முதல் 3 மணி வரை. இந்த விதிகளுக்கு வங்கிகளும், எல்.ஐ.சி போன்றவையும் விதிவிலக்குகள்.

ஒரு வகையில் தொழிற்சங்கங்களுக்கு இது எச்சரிக்கை மணி. ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, மாற்றல், கூடுதல் அகவிலைப்படி, ஓய்வூதியம் போன்ற காரணிகளால் மட்டுமே காலம் நகர்த்தி வரும் பெரும்பாலான தொழிற்சங்கங்களுக்கு குறிப்பாக, அரசுப்பணியாளர் தொழிற்சங்கங்க‌ளுக்கு அவர்கள் விழித்தெழ ஊதப்பட்ட சங்கு. இது இடதுசாரி தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும். ஊழியர்கள் அவர்கள் நலனுக்கு சலுகைகளையும், உரிமைகளையும் மட்டுமே வாங்கி தருவது தொழிற்சங்க வளர்ச்சிக்கு உதவாது. கூட்டுப் பேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் உதவாது. ஊழியர்களை அரசியலாக்குவதுதான் தொழிற்சங்க வளர்ச்சிக்கு முக்கிய தேவை. இருந்த போதிலும் குறைந்தபட்சம் அவர்களிடம் அவர்கள் கடமைகள் குறித்தும் அவர்களிடம் பேசலாமே. தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் தவிர வேறு எப்போதும் ஊழியர்களிடம் பேசுகிற மாதிரி தெரிவதில்லை. ஒன்றாய் பணி செய்கின்ற அந்த தருணத்தில், கேண்டீனில் என எப்போதாவது அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர, ஒழுங்காக வேலை செய்ய பேசல முயலலாமே. என் அப்பா, எஸ்.வி.வி, ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றோரிடம் நான் பேசிய பொழுதுகளில் அவர்களும் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் புதுவை மாநில செயலர் தோழர் திரு. இராம்ஜி அவர்கள் அலுவலகத்தில் யாராவது காலை 10 மணிக்கு மேல் தாமதமாக வந்தால் அலுவலக மேனேஜருக்கு முன்பாக அவர்களை கேட்பார், கடிந்து கொள்வார். "ஏன் தோழர், மேனேஜரே கேட்கலையே, ஒரு பத்து நிமிடம் தானே தாமதாகத்தானே வந்தார், நீங்கள் கேட்கணுமா, சங்கத்தை விட்டே போய்விடப்போகிறார்? என்ற போது, அவர் சொன்னதுதான் இந்தக் கட்டுரைக்கு முடிவுரை. "தோழர், ஒரு உண்மையை தெரிஞ்சு கொள்ளுங்க. நிர்வாகம் ஒழுங்கீனங்களை கண்டு கொள்ளாமல் விடுவது என்பது பின்னால் அவர்கள் கொடி பிடிக்கும்போது உன்னை என்னைக்காவது லேட்டா வந்தீங்களா என்று கேட்டானா, பின் ஏன் எப்படி என்று தொடங்கி அவர்களது பலவீனங்களை பெரிதாக படம் வரைந்து வீழ்த்துவதற்காக. மேலும், எத்தனையோ கோடி பேர் வேலையில்லாமல், பசியோடும் இருக்க இவர்களுக்கு இந்த சூழ்நிலைக்கு நடுவிலும் சலுகைகளை உரிமைகளை கடுமையாக போராடி வாங்கித் தருகிற தொழிற்சங்கம் அவர்கள் அலுவலக வேலையை சரியாக செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி தவறாகும்?".









Comments

சென்ற பாராளுமன்றத்தில் நிதியமைச்சராக இருந்த போது பட்ஜெட் வாசிப்பதற்கு
மட்டுமே அவைக்கு செல்வார். அதேப்போல் இப்போதோ பட்ஜெட் வாசிக்கும் போது
அவையில் இருப்பார். மற்ற காலங்களில் அவைக்கே போகாதவர்.முதலில் இவரிடம் உள்ள இந்த ஒழுங்கீனத்தை கலைந்து விட்டு அலுவலக ஊழியர்களின் வருகைபதிவை சரிசெய்யட்டும்.. நன்றாகத் தான் இடித்துரைத்திருகிறீர்கள்.. தொழிற்சங்க கடமையை தடுப்பதற்கும் தொழிற்சங்க உரிமையை பறிப்பதற்குமான முயற்சி தான் என்பதில் இயமில்லை.. நாம் போராடாமலிருந்தால் நம் இடுப்பிலிருக்கும் துணியை அவிழ்த்து விடுவார்கள் பாவிகள்..
romba avasiyamaana katturaithozhilaalar uzhiyargalukku ethiraay eppadi ellaam seyalpadalaamendu sindhippathil killaadi pa.si.thozhar ramji kurittha thagaval nandru.paaraattukkal.
hariharan said…
இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் ஒழுக்கத்தையும் அரசு அலுவலங்களில் நிலவும் லஞ்சத்தையும் எதிர்த்து அவற்றை கழைந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
ramgopal said…
தோழர்கள் மூவருக்கும் நன்றி. தோழர் ஹரிஹரனின் வரவு நல்வரவாகுக. தொடர்ந்து நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கவும்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற