
அஞ்சலி: கு அசோகன்
கோவையிலிருந்து தான் அந்த முதல் தகவல் எனக்கு வந்தது. அது ஆகஸ்டு 21ம் தேதி. இன்றைக்குச் சரியாக 12 நாள் முன்பாக. அது வேறு செய்தி. இன்ப அதிர்ச்சியான தகவல் அது. தோழன் அசோகனுக்குத் திருமணம் என்பது. 45 வயதைக் கடந்த நிலையில், எத்தனையோ பேரை ஈர்க்கும் இனிய தோழமை நெஞ்சம் படைத்த அந்த அற்புத மனிதன் குடும்பச் சூழலின்மீது பழி போட்டு பல்லாண்டுகளாக மறுத்து வந்த இல்லற வாழ்விற்கு உடன்பட்டார் என்பதே மகிழ்ச்சியாயிருந்தது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரான அவரது பணியிடமும், வாழிடமும் என்னருகே சென்னை தலைமை அலுவலகத்தில்தான் என்றாலும், அவரது திருமணத் தகவல் அயலூரிலிருந்துதான் வந்தது. மெதுவாக அவரிடம் அணுகி ஏதாவது செய்தி உண்டா என்றால் ஒன்றுமில்லையே என்பதாக இருந்தது பதில். மறுநாள், 22ம் தேதி, பொறுக்க மாட்டாது, "ஏய் ஆகஸ்ட் 30ம் தேதி எனக்கு ஏதும் வேலை வைக்காதே, நான் வேறிடம் போக வேண்டியிருக்கும்..." என்று சொன்னபோது, திடுக்கிட்டவராய், "தோழர் உங்களுக்குத் தகவல் வந்திருச்சாம்........நானே சொல்லணும்னு காத்திருக்கேன். இன்னும் பத்திரிகை கூட அடிக்கல. அடுத்த ஞாயிறு எனக்குத் திருமணம், சேலத்தில்..." என்றார் அசோகன். இளம் பொன்னிற உடலும், ஓயாத புன்னகைக்கும் முகமும், அடக்கமான மொழியும், மிடுக்கான நடையுமாக எந்த வேறுபாடுமின்றி எல்லாத் தரப்பு ஊழியரையும் காந்தம் போல் வžகரிப்பவராக வலம் வந்த அசோகன் திருமணம் இந்த ஆகஸ்ட் 30ம் தேதி சேலத்தில் நடக்கவே செய்தது....நாங்களும் உல்லாசமாகப் போய்க் கலந்துகொண்டு திரும்பியிருந்தோம்.
இன்று காலைதான் அந்த முதல் தகவல் வந்தது, மீண்டும் கோவையிலிருந்து. ஞாயிற்றுக் கிழமை திருமணம் முடிந்த கையோடு அடுத்தநாள் மனைவியின் இல்லத்திற்கு உதகமண்டலம் சென்று இரண்டு இன்ப தினங்கள் மகிழ்ச்சியாகக் கடக்கவும் செய்தன. மூன்றாம் நாள் அதிகாலை வேதனையோடு புலரத் துடித்தது. குளிர்பிரதேசத்தின் எந்த இல்லத்திலும் காலை நேரத்து விளக்கெரியுமுன், நெஞ்சு வலி என்று துடித்த அசோக ஜோதி அடுத்த சில நிமிடங்களில் அணைந்தே போய்விட்டது. திருமணச் செய்தியையே முழுதாக அறிவித்து முடிக்குமுன், காலம் வேறு கொடிய செய்தியைக் கையில் திணித்துவிட்டு உலர்ந்த பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 30 அதிகாலை கோவை எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க அலறியடித்துக் கொண்டு எழுந்திருந்த போது எத்தனை உற்சாகமான விடியல் அது. நண்பகலில் அங்கு போய்ச் சேர்ந்து புது மண மக்களை கோட்டா செய்து ஒன்றாக உட்கார வைத்துச் சாப்பிட வைத்த கணங்கள் எத்தனை ரம்மியமானவை..புதுச்சட்டை, புது வேட்டியில் கண் கொள்ளாக் காட்சியாய் நின்ற அந்த மணமகன் மூன்றாம் நாளில் இல்லாது போயிருக்க, இப்போது எங்கே போய்த் தேடுவது...
அசோகன் சுறுசுறுப்பும், துடிப்பும் உடைய இளைஞராகத் தான் சங்கத்திற்கு அறிமுகமானவர். அப்படியே இருந்தவரும்கூட. தனக்குத் தெரியாதவை பற்றிய பாசங்கு இருந்ததில்லை அவரிடம். சமரசமற்ற கருத்துக்கள். தேர்ந்தெடுத்த திரைப்படங்கள்வசம் உயிர். திரைப் பைத்தியம் கிடையாது. வேலுபிரபாகரனின் புரட்சிக்காரன் படத்தைப் பார்த்துவிட்டு அப்படி மனத்தைப் பறிகொடுத்திருந்தார். கடவுள் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அலுவலகத்தில் வெள்ளிகிழமை பூஜை செய்வதை நிர்த்தாண்சயமாகக் கண்டிப்பார். பொதுத்துறை அலுவலகத்தில் குறிப்பிட்ட மதக் கடவுளுக்கென்ன தனி மரியாதை என்பார். காசைப் பற்றிக் கவலைப்படாதவர், சாமி சமாச்சாரத்திற்குத் தம்படி கொடுக்கமுடியாதென்று நேரடியாகச் சொல்லிவிடுவார். இசையில் ரசனை கொள்வார். செய்தித்தாள் தவறாது தீர்க்கமாக வாசிப்பார். செய்தி பரிமாற்றத்தில் கற்பூரம் மாதிரி சட்டென்று பற்றிக் கொள்வார். எதிரே இருப்பவர் திட்டங்களைச் சடுதியில் யூகித்துவிடுவார்.
அசோகனின் தீர்மானமான சில நிலைப்பாடுகள் அவரது பிடிவாதமாக அறியப்பட்டிருந்தது. முகஸ்துதி மறுக்கப்பட்டிருந்த அவரது செயல்பாடுகளில், அடிமட்ட மனிதர்களுக்கான கருணை வற்றாது சுரந்து கொண்டிருந்தது. உதவி கோரும் தனிநபர்கள் யாரென்றாலும், ஆலோசனைக் கடலாக இருந்தது அவரது அனுபவ வளம். வங்கி ஊழியர் பணி நிலைமைகள், சலுகைகள், ஊதிய நிலைகள், கடன் திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஞானம் அபாரமானது. தவறிழைக்கும் ஊழியரைத் தனிமையில் கடிவதும், மேற்சென்று இடிப்பதுமாகவும், சங்க ரீதியாக எப்படியாவது பாதுகாத்துவிடவேண்டுமென்று தவிப்பதுமாகவும் இருந்தது அவரது புரிதல்.
சகஜமான பழகுதன்மையில் ஆண் பெண் பேதமற்று எதையும், எப்படியும் அவர்கள்முன் பேசிவிடுகிற துணிவு இருந்த அசோகனுக்கு, இடதுசாரி நெறியிலும், மார்க்சிய தத்துவத்திலும் அலாதியான நம்பிக்கை இருந்தது. மார்க்சிய வளர்ச்சிக்கான நிதி திரட்டுதலில் ஒரு வெறியும், வேகமும் காணப்படும் அவரிடம். பந்தயக் குதிரையாக முன் நிற்கவேண்டும் இதில் அவருக்கு.
சேலம் நேஷனல் ஓட்டலில், ஆகஸ்ட் 30 மாலை நடந்த கலகலப்பான திருமண வரவேற்பு நிகழ்வில், பாராட்டு வாழ்த்துரைகளை அள்ளித் தெளித்தார்கள் பலரும். எந்தப் பதட்டமோ, கலக்கமோ இன்றி இருந்தனர் மணமக்கள் இருவரும். சுஜாதா, பாரத ஸ்டேட் வங்கியின் உதகமண்டலக் கிளை ஊழியர், முக மலர்ச்சியோடு இருந்தார். கணவனாக வாய்த்தவனின் அருமை பெருமைகளை அவரது தோழர்கள் அடுக்கிக் கொண்டிருக்கும்போது அவர் முகத்தில் தவழ்ந்த பெருமித புன்னகை இனி ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை.
கண்ணகி - கோவலன் இல்லற இன்ப வாழ்வை எழுதிய இளங்கோவின் செய்யுள் ஒன்று இப்படி முடிகிறது:
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்ணின்மேல்
நிலையாமை கண்டார்போ மற்று.
இரண்டு நாளே இணைந்திருந்த அந்தப் புது மண உறவு ஒரு நெஞ்சுவலியால் திடீர் முடிவிற்கு வந்துவிட்டது ஆறுதல் வழங்கமுடியாத சோகம்.
தந்தையை இளம்வயதிலேயே பறிகொடுத்திருந்த அசோகன் தமது இளவல்களைக் கரையேற்றாது தன்னலம் பார்த்துக் கொள்ளக் கூடாது என்றே வளர்ந்திருந்தார். கால் முறிவிற்குப்பின் கண்புஞஸ சிந்திய நிலையில் இருந்த அவரது தாயார் மூத்த மகனைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கத் துடித்தார். உளமாற இணங்கிய நிலையில் நடந்து முடிந்த திருமணத்தின்போது அவரது நிறைவு பூத்த முகம் இப்போது என்ன கதியில் சிதறி இருக்கும் என்று எண்ணவே நெஞ்சு நடுங்குகிறது.
கோவை தோழர்கள் உடனே புறப்பட்டுப்போய் உதகையிலிருந்து அழைத்தபோது, உறங்கிய நிலையில் இருக்கிறார் அசோகன் என்று சொன்ன வார்த்தைகள் žறிச் žறி அடங்கிக் கொண்டிருந்த துக்கத்தை இன்னொரு முறையும் உடைத்துப் பீறிட வைத்தன.
காட்சிக்கெளியன், கடுஞ்சொல்லற்றவன், கண்ணிலே நல்ல குணம், ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல்லாளன்...தோழன் அசோகனை எப்படி மறப்பது, செவ்வணக்கம் என் இனிய தோழா...................
எஸ் வி வேணுகோபாலன்
Comments
நான் எதிர்பார்க்கவே இல்லை, அசோகன் பற்றிய பதிவை உங்கள் வலைப்பதிவில் நீங்கள் சேர்த்திருபீர்கள் என்று. நெகிழ்ச்சி கலந்த நன்றி. அசோகனை அறியாத போதே உங்கள் உணர்ச்சிகள் இப்படி அலைமோதும்போது, நீங்கள் மட்டும் அந்த அற்புதமான தோழனோடு பழகி இருந்தால்....
எஸ் வி வி