Skip to main content

கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்....




ஆனந்தமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு டவலால் தலையைத் துவட்டிக் கொண்டே ஹாலுக்கு வருகிறார் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்। மின் விசிறியைச் சுழலவிட்டு அதன் கீழே தலைமுடியை “ஆற’ வைக்கத் துவங்குகிற போது அந்த டவலுக்கு அடுத்த வேலை ஆரம்பிக்கிறது। யாரிடமாவது பேசிக்கொண்டே அந்த மெல்லிய வெள்ளை துவாலையின் நுனியை இலேசாக உருட்டித் திரட்டி காதுக்குள் அதைச் செலுத்திக் குடைந்து பார்ப்பதும், வெளியே அதை எடுத்து சூடான நீரின் வெதுமையோடு அதில் அழுக்கு படிந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வதும் முக்கியமான கட்டங்கள். “அப்பாடா, இப்பதான் எல்லாம் கிளியரா கேக்குது” என்று திருப்தியோடு அந்தக் காட்சி முடிகிறது.

சிலர் சாவிக்கொத்தில் ஞாபகமாக ஒரு காதுக்குரும்பியும் வைத்திருப்பார்கள்। பயணத்தில், பூங்காவில் ஓய்வு கொள்ளும் பொழுதுகளில் குருப்மிக்கு வேலை நிறைய இருக்கும்। போட்டுக் குடைந்தெடுத்து விடுவார்கள்.


போதாதற்கு, சாலைகளில் “காது சுத்தம் செய்கிறேன்” என்று விதவிதமான வளைவுகளும், கொக்கிகளும் கொண்ட இரும்பு ஆயுதங்களோடு அலைகிற நடைபாதை ENT ஸ்பெஷலிஸ்டுகள் வேறு.


இவையல்லாமல் நவீன மோஸ்தரில் “பட்”ஸ் (BUDDS) வாங்கி அனுபவிக்கிறவர்களும் உண்டு. அதன் எளிய வடிவமான பஞ்சையும், தென்னங்குச்சியையும் இணைத்து சொந்த ஏற்பாடுகள் வைத்திருப்பவர்கலின் “ஆலாபனை” தனிக்கதை.


காதுகளை இந்தப் பாடுபடுத்த வேண்டாம் என்று முதற்கண் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். தம்மைத்தாமே தூய்மைப்படுத்திக் கொள்ள அவற்றால் முடியும் என்பதையும் உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். மேற்படி தென்னங்குச்சி, குரும்பி, சே·ப்டி பின், ‘மினி” துரடு, டவலாயுதம் போன்ற யாதொரு பயங்கரக் கருவியையும் கையாள வேண்டாம் என்றும், இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.


காதின் பலவகை உபாதைகளுக்கு தீர்வு எனக் கருதி எண்ணெய் ஊற்றிக் கழுவும் அன்பர்கள், விளைவுகளுக்கு கம்பெனி ஜவாப்தாரியல்ல என்பதை உணர வேண்டும். சூடான எண்ணெய் ஊற்றிக் கொண்டு முழுமையாகக் காது கேளாமலேயே போய்விட்ட முன்னோரின் தியாக வரலாற்றை மறக்க வேண்டாம் என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறோம். பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் வேதம் காதில் விழக்கூடாது, விழுந்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்பதான மனுவின் அராஜக போதனைகள் இருந்த காலமும் ஒன்றிருந்தது.


காது சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நல்ல சிந்தனை. ஆனால் சுத்தமாகக் “காதே” இல்லலது போய்விடக்கூடாது அல்லவா? காது தன்னை சுத்தப்படுத்துகிற வேலையை வெளியாருக்கு “அவுட்சோர்சிங்” செய்வதில்லை. பசி உள்ளே புகுந்தாலும் நீரைப் பெருக்கி அதைத்தானே வெளியேற்றி விடுகிற கண்ணுக்குப் பக்கத்து வீடு தானே காது! அவருக்கும் அத்தனை பொறுப்பு உண்டு! அழுக்குகளை அது நாமறியாமல் வெளியேற்றிவிடும்.


நாம் குறுக்கீடு செய்வது, செவிப்பறையை பாதிக்கும். உள்ளிருக்கும் மென்மையான சவ்வு போன்றவை நமது தாக்குதலுக்குத் தாக்குபிடிக்க முடியாது சிரமப்படும். பஞ்சு போட்டு துடைப்பவர்கள், வெளியே எவ்வளவு வந்தது, உள்ளேயே எத்தனை ‘செட்டில்’ ஆகிவிட்டது என்பதையும் கணக்குப் பார்த்தால் புரியும்.


காதுகுள் “வேக்ஸ்” எனப்படும் ஒருவித பிசினி உருவாகிறது. குறிபாக, தொண்டையில் சளி அல்லது டான்சில்ஸ் இந்த மாதிசி சமயங்களில் “மெழுகு’ அதிகமாக உருவகிறது. வயிற்றில் அமில எரிச்சல் ஏற்படும் போதும் “பிசின்” உருவாகிறது. அதுதான் நாம், பசி காதை அடைக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பது. சளி பிரச்சினையோ, டான்சில்ஸ் உபத்திரவமோ இருந்தால் அதற்கேற்ற சிகிச்சைக்கு வழிபார்க்க வேண்டும். அதைவிடுத்து காதைப் பிடித்துக் சுரண்டிக் கொண்டிருப்பது நியாயமா சொல்லுங்கள்.


இப்படித்தான் ஒரு நண்பர் மருத்துவரிடம் போய் காது ரொம்ப அடைக்குது. கொஞ்சம் ‘கிளியர்’ பண்ணிக்கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.


“அப்படியா, கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வந்துருங்க, பார்க்கபாம்” என்றிருக்கிறார் மருத்துவர். சரியாய்ப் போச்சு, மருத்துவருக்கே காது “அவுட்” போலிருக்கிறது என்ற எண்ணிய நண்பர் தனக்குக் காதுதான் பிரச்சினை என்று சைகை செய்து காட்டியிருக்கிறார்.


மருத்துவர் சிரித்துக்கொண்டே, “எனக்கும் காது கேட்கவில்லை என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறதே, உங்க வேலை நேரம், பணிச்சூழல், பொறுப்பு எல்லாம் தெரிந்ததால்தான் சொல்கிறேன். நீங்க காலை உணவு சரியாக எடுத்துக்கறதில்ல. சாப்பாடு போதரதில்ல. அதான் காது அடைக்கிறது. முதலில் போய் நண்றாகச் சாப்பிடுங்கள்” என்றாராம்.


“செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்ற திருக்குறளைக் கொஞ்சம் மறுவாசிப்பு செய்து பார்த்தால், அதில் மருத்துவக் குறிப்புகள் மறைந்திருக்கிற மாதிரி தெரிகிறது.


காதை, வெளிப்புறம் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமானது, உள்சுத்தம், பாதுக்காப்பு அம்சங்களைச் சார்ந்தது. செய்யக்கூடாத சில குறிப்புகளை உள்ளடக்கியது அது.


காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒரு ஜனநாயக உட்போக்குக் கூட்டணி அமைத்திருப்பவை. மூன்றையும் ஒருவருக்கொருவர் உறுத்தாமல், வருத்தாமல் நாம் அனுசரித்துப் போவது நமக்கு நல்லது, உதாரணமாக, மூக்கைச் சிந்தும்போது ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு இன்னொரு பாதை வழியாக சிந்தவேண்டும். இரண்டு பக்கமாகவும் ஒரே நேரத்தில் சிந்தினால் காதை பதிக்கும். ஒழுங்காய் ‘சிந்திக்கப்’ பழகணும். அடுத்தது, சளியை உள்நோக்கி உறிஞ்சி நிம்மதி தேடுகிற வேலை! ஏழு கடலையும் உறிஞ்சிய அகத்தியர் நினைப்பில் இழுத்து உறியவும் கூடாது.


“சீ இதெல்லாம் ஒரு தேர்தலா” என்று கோபம் வந்தால் அதற்கு எதிர்ப்பை ஆரோக்கியமான வழியில் காட்ட வேண்டுமே தவிர, (தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி நாபிக் கமலத்திலிருந்து) காறி எடுத்துத் துப்பக் கூடாது. இதெல்லாம் காதுகளுக்குள் இருக்கும் மென்மையான ஏற்பாடுகளை அலறடித்துக் காயப்படுத்துகின்றன.


அதேபோல் நீரில் மூழ்கி ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடும்’ போது காதுகளுக்குத் தற்காலிகமாக மூடுவிழா செய்வது நல்லது. குழந்தைக்குப் பால் புகட்டும்போது உதடுகளில் வழியும் பால், முகம் சாய்க்கும்போது காதில் சேகரமாகி உள்ளே தங்கி சில தொல்லைகளை ஏற்படுத்தும். அப்படி நேராது பார்த்துத் துடைத்திட வேண்டும்.


தொடர்ச்சியான எரிச்சல், சீழ் இவற்றால் அவதியுறுவோர் தொண்டையில் சளி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டான்சில்ஸ் பிரச்சினை உள்ளவர்களும், தொண்டையில் சளி சேராது பார்த்துக் கொள்ள வேண்டும்.


சுத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், சத்தம் அதிகம் வாட்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சும்மா அதிருதுல்ல என்று வீட்டில் ஹோம்தியேட்டர், டபுள் ஸ்பீக்கர், தொலைக்காட்சியில் உச்ச சத்தம், எப்போதும் செல்போனும், காதும், செல்போன் இல்லாத போது சங்கீத வெள்ளத்திற்கு மாட்டப்படும் ஏற்பாடுகள் என்று செவுள் பிய்ந்துகோகும்படி ஓர் அலறல் வாழ்க்கை தேவை இல்லையே... அப்புறம் ‘செவி இல்லை இங்கொரு இசை எதற்கு’ என்று பாட வேண்டியதாகிவிடும்.


கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிடே இருங்க என்பது மட்டுமல்ல செவியின் வேலை! கொஞ்சம் அமைதியும் அதற்குத் தேவைப்படுகிறது. மௌனத்தின் மொழி காதுகளைக் குளிர வைக்கும். சில சத்தங்களில் பழகியவர்களுக்கு உதாரணமாக ரயிலடி அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்போருக்கும், விமான நிலையத்தில் அருகே வாழ விதிக்கப்பட்டோருக்கும் அது கொஞ்ச நாளில் இயல்பாகி விடும். ஆனால் பாதிப்பு இருக்கும். பிறகு ஆள் அரவமற்ற இடத்தில் அவர்கள் நடக்க நேரும்போது, அந்த சுகம் அவர்களுக்கு சொர்க்கம் என்றால் என்ன என்பதை அர்த்தப்படுத்தும்.


அருமையான பாடல்களை அடுத்த முறை கேட்கும்போது கவனியுங்கள், இசையில் இடையே எங்காவது சிறிய இடைவெளி இருக்கும் இடம் எத்தனை இன்பமாய் அமைகிறது எனத் தெரியும். சில பள்ளிகளில் ‘அமைதி வகுப்பு’ (Silent Hour) என்றே ஒரு பீரியட் இருகும். அது அத்தனை ரம்மியமானதாக இருக்கும். நூலக அமைதியை ரசிப்பவர்களுக்கு இது புரியும்.


எப்போதும் காதில் ‘வொய்ங்...’ என்று சத்தம் கேட்பதாக உணர்பவர்களும் உண்டு. அவர்கள் இதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


மலைப்பாதையின் அழுத்தம் நிறைந்த உயரத்திலிருந்து இறங்கும் போது, பேசிக்கொண்டே கடப்பவர்களுக்குக் காது இறைச்சல் குறையுமாம். இடி இடிக்கிறபோது செவிப்பறை பாதிப்பைக் கட்டுப்படுத்தத்தான் அந்தக் காலத்தில், அர்ஜுனா, அர்ஜுனா என்று குரலெழுப்பி இருக்கிறார்கள் என்றும் கருத இடமிருக்கிது. (அய்யோ, அய்யோ என்றும் கத்தலாம், சகிக்காதே தவிர, இதன் உள்ளார்த்தம், Balancing the Sound - சத்தத்தை சமன்படுத்தல் என்ற அடிப்படையில் செவிப்பறையைக் காப்பதுதான்).


நிறைவாக, எதைச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாத மனிதராக நாம் இருந்துவிடக் கூடாது. தேவையற்ற இடம் வரை காதை நீட்டும் வேலையையும் வேண்டாம். தேர்தல் நேரத்தில் எழுப்பப்படும் கூச்சல்கள், போலி வாக்குறுதிகள் காதுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் பாழாக்கும் என்பதால் மக்களுக்கான உண்மையான குரல்கள் வரும் திசையில், அதாவது “இடது” பக்கம் காதைத் தீட்டிக் கொள்வது சந்ததிக்கும் நல்லது.


காதும் காதும் வைத்த மாதிரி முடிக்கிற வேலைகள் சதி வேலைகளாக இருக்கக்கூடாது. எங்கே, எதற்கு, எப்போது தேவையோ அங்கே சத்தம் எழுப்பத் தயங்கவும் கூடாது. தோழமை வளர்த்தெடுக்க வேண்டிய இடத்தில் தேவையில்லாமல் குரலை உயர்த்திப் பேசுவது எதிரே இருப்பவரது காதுகளை மட்டுமல்ல, உள்ளத்தையும் புண்படுத்தும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


இதெற்கெல்லாம் கொஞ்சம் செவி சாய்ப்பீர்கள்தானே!


எஸ்.வி.வேணுகோபாலன்


மருத்துவர் எம்.வெங்கட்ராமன், எம்.டி(ஓமியோபதி) அவர்கள் குறிப்புகளுடன்

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற