Thursday, 1 October 2009

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்
ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும் (குழந்தைகள் உட்பட) சலனப்படவில்லை. அமைதியாக ஒரு ஒழுங்கில் ரயில் ஏறினர், மரணத்தை வரவேற்று.................."நான் குழந்தைகளை, அவர்கள் இன்றிருக்கும் நிலை குறித்து கனிவோடும், அவர்களின் எதிர்காலம் குறித்த மரியாதையுடனும் அணுகுகிறேன். நாம் அவர்களின் எதிர்காலத்திற்காக, இன்று அவர்களை மகிழ்விக்கும்‍; அழவைக்கும்; வியக்கவைக்கும்; கோபப்படவைக்கும்; ஆர்வப்படவைக்கும் எல்லாத்தையும் மதிக்க தவறுகிறோம், அவர்களின் இன்றைய பொழுதுகளை மூர்க்கமாக களவாடுகிறோம்.

குழந்தைகள் நாளைய மனிதர்கள் அல்ல; மாறாக அவர்கள் இன்றையவர்கள். அவர்களை கவனிக்கவும், கனிவுடனும், மரியாதையுடனும் பழகவும் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் அறியாமையை மதிக்க நாம் கற்க வேண்டும். நீங்கள் இன்னும் வளரவேண்டும்; பாருங்கள், நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்லும்போது குழந்தைகள் நாம் ஒன்றுக்கும் பயனில்லை, நாம் எப்போது வளர்வோம்" என்கிற ஏக்கத்தை நீங்களே வளர்க்காதீர்கள்.

குழந்தைகள் பெரியவர்களுடைய கடினமான, குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை புரிந்து கொள்வதில்லை என்பதாலேயே அவர்களை அவமதிப்பு செய்யாதீர்கள். உங்களுடைய கவலை; மகிழ்ச்சி; வியப்பு; கோபம் ஆகியவற்றின் ஊற்றுக்கண் அவர்களுக்கு தெரியாது. அவர்களின் உலகம் எளிதானது, நேர்மையானது. குழந்தைகளை இந்த இடத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் விதிகளை அறியாத, வேற்று மொழி அந்நியர் போல நினைக்க வேண்டும். அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், மகிழ்ச்சியாகவும் விடை வேண்டும்.

குழந்தைகளின் அறிவு பெரியவர்களின் அறிவினைக் காட்டிலும் குறைவானதும் அல்ல, குறையானதும் அல்ல. அவர்கள் அறிவோடு இல்லாமல் உண‌ர்வுகளோடு சிந்திக்கிறார்கள். அதனாலேயே அவர்களோடு உரையாடுவது என்பது ஒரு கடினமான கலையாகவே உள்ளது. உலகில் எத்தனையோ மோசமான விஷயங்கள் உண்டு. ஆனாலும், தந்தையோடும், தாயோடும், ஆசிரியரோடும் குழந்தைகள் அன்போடும், நம்பிக்கையோடும் இருப்பது பதிலாக அச்சப்படுவதுபோல் மோசமானது எதுவும் இல்லை.

நாம் எதோ ஒரு கோபத்தில்/அறியாமையில் குழந்தைகளுடைய பையில் காணப்படும் அவர்களின் விளையாட்டுப் பொருட்களான சோழி, தீப்பெட்டி, சின்ன வயர், பஸ் டிக்கெட், ஆணி, ரப்பர் பேண்டு, உடைந்து போன பேனா முதலிய பலவற்றை தேவையற்றது என தூக்கிபோட்டு விடுகிறோம். ஒவ்வொரு சின்ன பொருளிற்கும் ஒரு வரலாறும், அவை குழந்தைகளின் கனவோடு சம்பந்தப்பட்டது என்பதையும் முற்றாக மறுதலிக்கிறோம். மனிதத் தன்மையற்ற முறையில் அவர்களின் உடமைகளை தூக்கியெறிந்த நாம் அவர்களிடம் என்ன மாதிரியான பண்புகளை எதிர்பார்க்க முடியும்? நாம் தூக்கியெறிந்தது வீணான பொருட்கள் அல்ல, குழந்தைகளின் கனவுகளையும், ஆசைகளையும்.

குழந்தைகளை நாம் நம்மை தொந்தரவு படுத்தும்போதும், தடங்கல் செய்யும்போதுமே கவனிக்கிறோம். மாறாக அவர்களின் பசுமையான, புதுமையான, அரூபமான தனிமைப் பொழுதுகளை கவனித்திருக்கிறோமா? குழந்தைகள் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அந்த விந்தையான கணங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம். இறுதியாக குழந்தைகள் நம் வாழ்வில் விவரிக்க இயலாத ஒரு கவிதை அமைதியை கொண்டு வருகிறார்கள்.

மேற்சொன்ன குழந்தைகள் குறித்த சிந்தனைகளை மீண்டும் ஒரு முறை வாய்விட்டு வாசித்துவிட்டு வாருங்கள். இப்பதிவின் முதல் பத்திக்கும் அடுத்து வந்த பத்திகளுக்கும் உள்ள தொடர்பை இனி நான் சொல்கிறேன். மரணத்தை நோக்கி அநாதை குழந்தைகளோடு பேரணியாய் சென்ற அந்த மனிதனின் பெயர் ஜானுஸ் கோர்சாக்-Janusz Korczak. ஒரு மருத்துவராய் தன் வாழ்க்கை துவக்கிய அம்மனிதர் பின்னர் வந்த நாளில் குழந்தைகளின் உளவியலாளர் ஆனார். இவரின் "LOVING EVERY CHILD" என்கிற நூலில் உள்ள விஷயங்களே நான் சொன்னது.

இவரின் வாழ்க்கை வரலாற்றினை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(குறிப்பு : இவரின் இந்த நூலினை முழுமையாக இந்த வலை இணைப்பில் படிக்கலாம். நன்றி சொல்லுங்கள் அரவிந்த குப்தா என்னும் மனிதருக்கு. http://vidyaonline.org/arvindgupta/loveeverychild.pdf}

4 comments: