Skip to main content

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். .........

ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது.



"நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில் போலந்து நாட்டு உயரிய இலக்கிய விருதான பெதரெவ்ஸ்கி விருது பெறுகிறார். விருது பெற வேண்டி தன் பெயரை ஜானுஸ் கோர்சாக் என்று மாற்றிக் கொள்கிறார்.

எழுத்து, மருத்துவம் இவையிரண்டில் இயல்பாகவே அவர் மருத்துவத்துறையே தேர்ந்து எடுக்கிறார். அதற்கு அவர் சொல்வது, "எழுதுவது வெறும் வார்த்தைகள் மட்டுமே, மருந்துகளே செய்கைகள்". 1905 முதலாம் உலக போரின்பொழுது ரஷ்ய படையின் மருத்துவராக பணிபுரிகிறார். போர் காலங்களில், பல்வேறு துன்பங்களையும், கொடுஞ்செயல்களையும் பார்த்த அவர், " போர் என்பது வெறுக்கத்தக்கதே. ஏனென்றால், போர் காலங்களில் எத்தனை குழந்தைகள் இறந்தன, உறுப்புகள் இழந்தன, பட்டினியாயின, தனியாயின என்பதை யாரும் சொல்வதேயில்லை." குழந்தைகளுடைய இயல்பான உரிமையான மகிழ்ச்சியினை எந்த காரணம் கொண்ட போர் ஆயினும் அதற்கு அனுமதியில்லை" என முழங்குகிறார்.

போர் காலம் முடிந்து போலந்து திரும்பிய அவர் பிரபலமான மருத்துவர் ஆனார். செல்வந்தர்களுக்கு மிக அதிக கட்டணமும், வறியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் செய்தார். குறிப்பாக 1912ல் தான் அவரது கல்விசிந்தனைகள் வெளிப்பட்டன. போலந்து நாட்டின் பல விடுதிகளுக்கு நடுவே இவரின் விடுதி மட்டுமே அன்பினை, மகிழ்ச்சியை கொண்டிருந்தது.அவர் தலைமை நிர்வாகியாக தன் வாழ்நாள் முழுதும் ஊதியம் வாங்காமல் பணிபுரிந்த அனாதை விடுதியில் கல்வி/கற்பித்தல் குறித்த பல முயற்சிகள், சோதனைகள் செய்யப்பட்டன. குழந்தைகள் உளத்தினை படிப்பதில் தேர்ச்சி பெறலானார். எழுத்தாளராகி, பின் மருத்துவராகி, அனாதை விடுதியின் தலைமை நிர்வாகியாக பதவியேற்பதற்கும் ஒரு காரணம் வைத்துள்ளார். அது, "ஒரு தேக்கரண்டி மருந்து வறுமைக்கும், பெற்றோரின்மைக்கு நிவாரணமல்ல", என்பதே.

கோர்சாக் தனது விடுதியில் எப்போதும் குழந்தைகளை மதிக்க வேண்டும் என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். ஒரு நல்ல பயிற்சியாளர் என்பவர் குழந்தைகளுடைய வேலையில் அவர்களை முன்னேற்றவும், அவர்களை அவர்களது இயல்பில் இருக்கவிட்டு அவர்களிடமிருந்து தான் நிறைய கற்க வேண்டும் என்கிறார், கோர்சாக். அவரது விடுதியில் 5 குழந்தை நீதிபதிகள் கொண்ட குழந்தைகள் நீதிமன்றத்தை ஏற்படுத்தினார். அங்கு ஒரு ஆசிரியர் குமாஸ்தா வேலை மட்டுமே பார்த்தார். அந்த நீதிமன்றத்தில் குழந்தைகளும், ஆசிரியர்களும் சமம். இதில் வினோதம் என்னவென்றால் , கோர்சாக் ஆறு மாத கால இடைவெளியில் குறைந்தது 5 முறைகளாவது குற்றவாளி ஆனார். அந்த முயற்சி வெற்றி பெற்று அடுத்த 50 ஆன்டுகளில் இது போன்ற நீதிமன்றங்கள் ஏற்படவேண்டும், குழந்தைகள் விடுதலை பெற வேண்டும், நீதி மற்றும் தனிமனித உரிமை குறித்தும் அறிவு பெற வேண்டும் என்கிற அவரது கனா நிறைவேறியதா?

அவரது அடுத்த முயற்சியாக 'லிட்டில் ரிவியூ'(little review) என்கிற குழந்தைகளால், குழந்தைகளுக்கான வார பத்திரிகை ஒன்றினை 1926 ஆல் ஆரம்பித்தார். அது இரண்டாம் உலக போரின் தொடக்கமான 1939ஆம் வருடம் வரை இடைவிடாமல் வந்தது. இந்த பத்திரிகைக்கு மூன்று ஆசிரியர்கள், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு முதியவர். இவர்கள் உட்பட பத்திரிகைக்காக உழைத்த அனைவருக்கும் சிறு தொகை ஊதியமாக வழங்கப்பட்டது. போலந்து நாடு முழுவதும் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டு குழந்தைகளுடைய படைப்புகள் பெறப்பட்டன. ஒரு சில மாதங்களிலேயே இரண்டு பக்கமாக துவங்கப்பட்ட பத்திரிகை நான்கு, ஆறு பக்கங்களாக வளர்ச்சி கண்டது. நாடெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான மடல்கள் வந்தன. அந்த பத்திரிகை குழந்தைகளிடையே போட்டிகள் வைத்தது, அறிவியல் சொன்னது, வருடத்தில் நான்கு முறை திரைப்படங்கள் திரையிட்டது; ஆண்டுக்கு ஒரு முறை மாநாடும் கண்டது. நாடெங்கும் சுமார் 2000 ரிப்போர்ட்டர்கள் கௌரவமாக வேலை செய்தனர். இந்த பத்திரிகையில் கோர்சாக் எப்போது ஒரு முறை மட்டுமே எழுதுவார். "இந்த பத்திரிகையே உலகில் மிகவும் ஜனநாயகமான ஒன்று" , என்கிறார் கோர்சாக்.

1939 ஆண்டு பிறந்த்து. இரண்டாம் உலக போர் வெடித்தது. ஹிட்லர் என்கிற கொடுங்கோலன் தனது ஜெர்மானிய படையோடு பல திக்கும் போரிட்டு வெற்றி வெறி கொண்டிருந்த காலம் அது. போலந்து நாட்டையும் படையெடுத்தான். 1940 செப்டம்பர் 1 அன்று அங்கிருந்த அத்தனை விடுதிகளையும் காலி செய்து "கெட்டோ" என்கிற ஒரு பட்டியில் அடைத்தான். கோர்சாக்கிற்கு தெரிந்தது முடிவு வருகிறதென்று. கெட்டொக்களின் நிலைமை மிக மோசமானது, பசியும், பட்டினியும், நோயும் மிகுதியாக இருந்தது. ஹிட்லர் படையெடுத்த் நாடுகளைப் போலவே போலந்து நாட்டு வீதிகளில் பிணக்குவியல்கள் இருந்தன. கோர்சாக் இந்த நிலைமையிலும் சாக்குப் பையை ஒன்றினை முதுகில் சுமந்து கொண்டு வீதிகளில் உணவிற்கும், மருந்திற்கும் பிச்சை எடுக்கலானார், தன் வசம் இருந்த அந்தக் குழந்தைகளுக்காக. நிராதவற்றவர்களுக்காக அவர் பிச்சைக்காரர் ஆனார். மிகுந்த துயரத்தோடு முடிந்த மட்டிலும் மடிந்த குழந்தைகளுக்காக கல்லறைகள் கட்டினார், அவர்கள் இறந்த பிறகும் அவர்களது சுயமரியாதைக்காக.

அவரை அந்த நாட்டினை விட்டு வெளியேறுமாறு பலரும் வற்புறுத்தினர். அவரோ, "உங்கள் குழந்தைகள் நோய் கொண்டு அபாயத்தில் இருக்கும்பொது நீங்கள் இப்படித்தான் செய்வீர்களா" என்று கோபம் கொண்டு இரைந்து "என்னால் இந்த 200 குழந்தைகளை விட்டு விட முடியாது" என்றார். அவர் தனது "கெட்டோ டைரி"யில் இவ்வாறு எழுதுகிறார். " எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது; நான் யாருக்கும் துன்பம் நேரட்டும் என சிந்திக்க மாட்டேன்; என்னால் எப்படி முடியும்; எனால் இயலாது; எனக்கு புரியவில்லை எப்படி ஒருவரால் அடுத்தவர்க்கு துன்பம் நினைக்க முடிகிறது என்று?; எல்லா வரும் மனிதத் தன்மையற்று நடந்தாலும், ஒருவர் மிகுந்த மனிதத் தன்மையுடன் நடக்க வேன்டும், அதுதான் சரி".

இதற்கு அடுத்த நடந்தவைகளை என்னுடைய முந்தைய பதிவின் முதல் பத்தியில் மிக சுருக்கமாக எழுதியிருக்கிறேன், படித்துக் கொள்ளவும். மீண்டும் எழுத எனக்கு தைரியமில்லை. நண்பர்களே, இத்தனை நாள் தாமதத்திற்கு காரணம், நான் அழாமல் இவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ய வேண்டி முயற்சி செய்தேன். இம்முறையும் தோற்றுப் போகிறேன்.....................




Comments

அன்புத் தோழா

உலுக்கி விட்டீர்கள் என் இளம் தோழா...

அதிர்சியும், கொடுமையும் நிறைந்த வரலாற்றுச் செய்தி ஒன்றின் பின்னால் மகத்தான ஒரு மனிதனின் தூய்மை நிறைந்த கல்விப் பணியும், குழந்தைகளின் அருமை குறித்த தத்துவார்த்தமும் புதைந்து கிடப்பதைக் குடைந்து எடுத்து வந்து தந்திருக்கிறீர்கள்.

உங்கள் பதிவின் கனமும், அழுத்தமும், எழுத்தின் வலிமையும் கூடிக் கொண்டே செல்கிறது.
எங்கள் (தோழர் ராஜி நேரடியாக உங்களிடம் சொல்லிவிட்டார் அல்லவா, அவர்களையும் சேர்த்துத் தான்)உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பதிவு செய்கிறோம் எமது வாழ்த்துக்களை....

எஸ் வி வேணுகோபாலன்
nalla azhuththamaana pathivu.manithasamugam ivar pondravargalaaldhan uyargirthu.paaraattukkal.
hariharan said…
இக்கட்டுரையை ப்டிக்கும் பொழுது எவராலும் அழாமல் இருக்கமுடியாது. கீதாபிரியன் வலைப்பூவில் இன்று தான் “ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்டமிட்ட இனப்படுகொலை” ப்டித்தேன். அதிக தகவல்களும் வீடியோக்களும் உள்ளன.http://geethappriyan.blogspot.com/2009/10/blog-post_28.html
ramgopal said…
எப்போதும் வாசித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தோழர் வேணுகோபாலனுக்கும், புதுவை ஞானகுமாரனுக்கும், என் மிகவும் பிரியத்துக்குரிய அறிவொளி இயக்கத்தின் ஹரிஹரன் தோழருக்கும் மிக்க நன்றி.
அறியாத்தகவல்கள் தரும் பதிவு இது. முழுக்க முழுக்க மனிதம் தோய்ந்த வார்த்தைகள் இது. அருமை ராம்கோபால்.


" எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது; நான் யாருக்கும் துன்பம் நேரட்டும் என சிந்திக்க மாட்டேன்; என்னால் எப்படி முடியும்; எனால் இயலாது; எனக்கு புரியவில்லை எப்படி ஒருவரால் அடுத்தவர்க்கு துன்பம் நினைக்க முடிகிறது என்று?; எல்லா வரும் மனிதத் தன்மையற்று நடந்தாலும், ஒருவர் மிகுந்த மனிதத் தன்மையுடன் நடக்க வேன்டும், அதுதான் சரி".

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...