Skip to main content

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....


அன்பு அம்மாவிற்கு,

என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான்.

அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள்.

அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன், இரண்டு பெண் குழந்தைங்க இருக்கு. சொந்தமா வீடும் இருக்கு. நான் நல்லாத்தான் இருக்கேன். சங்க செக்ரடரி என்ற முறையிலும் நல்ல பேர் இருக்கு.


இந்த பிரச்சனை என் பெரிய குழந்தை பெரியவளானதிலிருந்து சில காலமாக தொடர்கிறது. அவளுக்கு பூய்பெய்தும் சடங்கு ஏதும் வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியும் அம்மா நீங்க ஏன் கேட்க மாட்டேங்கறீங்க? அது ஒரு இயற்கையான நிகழ்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது. வீணாக அதை ஒரு விழாவாக எடுப்பது என்பது ஏன்? புரிந்து கொள்ளுங்களேன் அம்மா, நான் ஒரு முற்போக்கானவன். என் சங்கம் அப்படிதான் என்னை செதுக்கியிருக்கிறது. என் அரசியல் புரிதல்களும் அப்படியே. பெண்கள் பூய்பெய்தும் சடங்கு என்பது ரொம்ப தவறானது. அக்குழந்தையை அது பெரிதும் மனதளவில் காயப்படுத்தும். என் குழந்தை மனதளவில் இன்னும் குழந்தைதான். என்னப்பா வாங்கி வந்தே என்று என்னை நாள்தோறும் வீட்டு வாசலில் இன்றும் கால் பிடிக்கும் குழந்தை அவள். பெண்களை அடிமைப்படுத்தும் எந்த செய்கையும் நான் கண்டிக்கிறபோது எப்படி என் வீட்டிலேயே அனுமதிக்க முடியும்? இந்த கேடு கெட்ட சமூகம் கட்டிவைத்துள்ள அகம்பாவ ஆண் அதிகாரத்தின் குறியீட்டு சடங்குகளை எப்போதுதான் நாம் எதிர்க்க போகிறோம்?

அம்மா, என் குழந்தை பருவம் முழுமையும் நான் முதலாக வரவேண்டும், ஜெயிக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பியவள், அதற்காகவே உன்னை முழுசாக கரைத்தவள் நீங்கள். பின் ஏன் இப்படி? படித்து முடித்து இந்த வேலையில் சேர்ந்து இந்த சங்கத்தில் சேர்ந்த அந்தக் காலம் முதல் தானே நான் சமூக அக்கறை கொண்டவனாக ஆனேன். அவ்வளவு ஏன், என்னையன்றி ஒரு சமூகமும் இருக்கிறது அதில் ஒரு பிரதிதான் நான் என்கிற புரிதலை கொடுத்து என்னை மனிதனாக கௌரவப்படுத்தியது இந்த சங்கம்தானே. இன்றைக்கு தோழர்தான் எங்களுக்கு வழிகாட்டி, அவர் உதவியால்தான் நாங்க இப்ப நல்லா இருக்கிறோம் என்று எவரும் உன்னிடம் என்னைப்பற்றி சொல்லும்போது பெருமையால் நீங்கள் கண்ணீர் சிந்தியதை நானே எத்தனை முறை பார்த்திருக்கிறேன்? நானும் கவனித்து வருகிறேன், எப்போதெல்லாம் இந்த சடங்கு சம்பிரதாயத்தையெல்லாம் நான் கேள்வி கேட்கிறேனோ, அதற்கு உடன்பட மறுக்கிறேனோ நீதான் முதல் ஆளாய் எதிர்க்கிறாய். என் மனைவி உன்னிடமிருந்து பலம் பெற்று அவளும் எதிர்க்கிறாள்.

என் கல்யாணத்தன்றே நீங்களும் அப்பாவும் வருத்தப்படக்கூடாதே என்றுதான் நீங்கள் சொன்ன எல்லா சடங்குகளுக்கும் உடன்பட்டேன். அப்போது எனக்கு கலாச்சார நடவடிக்கைகள் குறித்து ஒரு தெளிவு இல்லாததும் ஒரு காரணம். அதில் தொடங்கியது இன்று வரை தொடர்கிறது. என் குழந்தை பெயர் வைப்பதில் தொடங்கி என் புதுமனை புகுவிழா வரை நீங்கள் காயப்படக்கூடாதே என்று நான் மௌனமாய் என் காயங்களோடு இருந்திருக்கிறேன். முதலில் நீங்கள், அப்பா, மனைவி, என் அடுத்த பெற்றோரான என் மனைவியின் பெற்றோர் என் ஒவ்வொருவராய் வருத்தப்படக்கூடாதே என்று நான் இதுவரை உங்கள் எல்லாவரோடும் பலவற்றிற்கு உடன்பட்டது என் தப்பு என்று ஒவ்வொரு கணமும் நீங்கள் புரிய வைக்கிறீர்கள். உன் தரப்பு கேள்விகள்தான் என்ன?

"உள்ளூரோ வெளியூரோ 2 நாளோ 3 நாளோ சங்க மாநாட்டிற்கு, கட்சி மாநாட்டிற்கு நீ போனியே, நாங்கள் எதாவது சொன்னோமா? வீட்டில் உன் நண்பன் மாதிரி இல்லாம‌ மே 1 கொடியேற்றுகிறாயே அதற்கும் தடை சொன்னோமா? நீ சொல்லித்தானே உன் வீட்டில் மட்டுமல்ல என் வீட்டிலும் தீக்கதிர் பத்திரிகை வரவழைக்கிறோம்? உங்க‌ சங்கத்திற்கும், கட்சிக்கும் பலமுறை நன்கொடை உன் முகத்துக்காக‌த்தானே கொடுத்தோம்? உன் கூட வேலை பார்க்கிறவர்கள் எல்லாரும் தினமும் 5:30, 6:00 மணிக்கே வீட்டிற்கு வரும்போது நீ மட்டும் 8 மணிக்கும் 9 மணிக்கும் வருவதாய் உன் மனைவி எங்களிடம் சொல்லி புலம்பியபோது, அவனுக்கு வேலை நிறைய இருக்கும் என்று அவளிடம் சமாதானம் சொன்னோமா இல்லையா? நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கபாரு. அதற்கெல்லாம் தடை சொல்லலில்ல, ஏன் நீ நாங்க கேட்கறதை செய்ய தயங்கற?"

அம்மா, உன்னோட கேள்வி அனைத்திற்கும் நான் எத்தனையோ தடவை சொல்லியாச்சு. இந்த முறை அப்படியல்ல. என் மனைவியோடு நான் பேசி பேசி அவளும் இச்சடங்கிற்கு விருப்பம் காட்டல. அவள் பெற்றோரிடமும் எதிர்ப்பு காட்டியிருக்காங்க. நீ தான் உடும்பு புடியா இருக்கிற. சரிம்மா, நீ சொல்ற மாதிரியே செய்கிறேன் என்று சொல்ல வாய் வரல்லே. நீ உன் முதுமையையும், பாசத்தையும் எனக்கு எதிரா வைக்கிற. அதை காரணம் காட்டியே என்னை சம்மதிக்க வைக்கலாம் என்று நினைக்கிறே. அது இம்முறை முடியாது என்று என்னால உறுதியா சொல்ல இயலாது என்பது உனக்கு நல்லா தெரியும். நான் என் மற்ற தோழர்கள் முன்னும் சமூகத்தின் முன்னும் தோற்கத்தான் போகிறேன். என் தோழர்கள் கொஞ்ச பேராவது என்னை புரிஞ்சுப்பாங்க. ஆனா, நான் முடிவு பண்ணிவிட்டேன். இனி என் மனைவியோடும் குழந்தைகளோடும் நிறைய பேசப்போறேன். இத்தனை நாளாய் இல்லாது என் மனைவி என்னை புரிந்து கொள்ள முயலுகிறாள் என்பதே எனது கொள்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. என் குழந்தைகளும் என் பின்னால் வருவார்கள் என்பதும் எனக்கு தெரிகிறது.

அம்மா, நிச்சயமாய் நீயும் தோற்கத்தான் போகிறாய். இந்த சமூகம் கட்டமைத்துள்ள அநியாயமான, அராஜகமான சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து விடுபடாமல் நீ தோற்கத்தான் போகிறாய். இந்த விஷயத்தில் நீ தோல்வியை நேசிப்பது எனக்கு ஆச்சரியமாய் இல்லை. எனக்கு ஒரு வருத்தமே இருக்கிறது. என் கொள்கைகளை, தெளிவுகளை உனக்கு புரிய வைக்கும் என்னோடு முயற்சியில் நான் இம்முறையும் தோல்வியே கண்டிருக்கிறேன். பரவாயில்லை, தொடர்ந்து முயல்வேன்.

அம்மா, இந்த கடிதம் உன்னை காயப்படுத்தும் என்றுதான் நீ அறிந்திராத இந்த வலைத்தளத்தில் பதிகிறேன். உன்னோட காயங்களையும், வருத்தங்களையும் நான் எப்போதும் தாங்க மாட்டேன்.

அன்புடன்,



Comments

அருமையாகப் பகிர்ந்தும் ,பதிந்துமிருக்கிறீர்கள் உணர்வை....தோற்றது நீங்களா அம்மாவா இந்த முறை?
பூங்கொத்து.!
முற்போக்கு சிந்தனைகளுக்கு இந்த சமூகத்தில்
அங்கிகாரம் கிடைக்காதா தோழா..
வீணான‌ ச‌ட‌ங்குக‌ளும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளும்
அறிவை ம‌ழுக்கும் மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளும்
இல்லாத பொன்னுல‌க‌ம் நாம் காண முடியாதா
தோழா..
தோழா
பெண்களின் சடங்கு சம்பிரதாயங்கள்
பற்றிய சிந்தனைகள் வரவேற்கத்தகுந்ததே மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் வரவேண்டும் அனால்
தாயிடம் மகன் தோற்றதாக சொல்லி இருப்பது தான் ஏற்க முடியவில்லை
அந்த காலத்தில் அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி
உங்களை போன்று சொல்லிகொடுக்க இயக்கங்கள் இல்லை
நீங்கள் தான் சொல்லி புரிய வைக்க வேண்டும்
தாய்க்கும் சேய்க்கும் இடையில் வெற்றி தோல்வி ஏது
ramgopal said…
பதிவினை வாசித்த செல்லம்ம, அன்புடன் அருணா, மற்றும் இராம்ஜி அவர்களுக்கு நன்றி. தோழர்களே, இதில் அம்மா என்னிடம் தோற்றதாக இல்லை. மாறாக சமூகத்தில் புறையோடி இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களிடமிருந்து தப்ப இயலாமல் தோற்றார். தொடர்ந்து வருகை புரிய வேண்டுகிறேன்.
தோழரே!

இது தங்களின் தாயாரின் குற்றமல்ல. காலம் காலமாய் இருந்துவரும் பழக்க வழக்கங்களில் ஒன்று. சமூகத்திற்குள் ஆழமாய் வேர் பாய்ந்திருக்கும் சடங்கு. அதுகுறித்து மறுசிந்தனைகளும், உரையாடல்களும் இப்போதுதானே தொடங்கியிருக்கின்றன...! இதுவும் ஒருவகை போராட்டமே... அனபாகவும், மென்மையாகவும் நடத்த வேண்டிய போராட்டம்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற