முதலிலேயே சொல்லிடறேன் ஆமா, இது புத்தக விமர்சனம் அல்ல. இது மட்டுமல்ல இதற்கு முன் நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவும் இனி வருபவையும் அப்படியே. ஒரு புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன பதிய தோன்றுமோ, அதையே பதிவிடுகிறேன். (அப்பாடா..!).
ரொம்ப ரொம்ப தயங்கித்தான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அஞ்ஞாடிக்கு விருதெல்லாம் கொடுத்தது தெரிந்த பிறகுமே எனக்கு தயக்கந்தான். ஏனென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னவோ தோணி புத்தகம் எடுத்தேன். ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியவுடன் அப்புத்தகத்தை படிப்பதெல்லாம் உடனே சாத்தியப்படுவதில்லை. சில நேரங்களில் அபூர்வமாக உடனே படிப்பதும் உண்டு. அது புத்தகத்தின் அளவினை பொறுத்தது.
முதல் 10 பக்கங்களை படித்து முடிப்பதற்குள் ரொம்ப சிரமாகிவிட்டது. இப்படியே இன்னும், 25 பக்கங்கள் போனால் அவ்வளவுதான். 180 பக்கமே உள்ள இந்த நாவல் மட்டுமல்ல, இனி பூமணி அவர்களுக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று கூட எண்ணந்தான். சென்னையை ஒட்டிய குட்டி நகரமான காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்து இதோ இனி வரும் காலமும் கூட புதுவையிலே என்றான எனக்கு அதாவது முழுக்க முழுக்க வட தமிழகத்துகாரனுக்கு தென் திசை தமிழ் கஷ்டம்தான். அதுவும் கிராமம் என்றால் என்ன என்பதை சினிமாவிலும் பேருந்தில் கடக்கையில் ஒரு நிறுத்தமாக பழக்கம் உள்ள ஒருவனுக்கு இக்கதை களம் சிரமமாகவே இருந்தது.
என்னடா இது, சினிமா ஒபனிங் மாதிரி ஒரு கொலை, சேசிங், குண்டுவெடிப்பு என அமர்க்களமாக தொடங்கிய (இது மாதிரி வேறு ஏதேனும் நாவல் துவங்குதா என்ன?, துப்பறியும் நாவல் தவிர) இந்நாவல் கோவில்பட்டி பகுதி(?) தமிழால் சுவாரசியமில்லாமல் போய்விடுமோ என்ற என் பயமும் தயக்கமும் 20 பக்கங்கள் கடந்த பின் காணாமல் போனதா தெரியவில்லை, புத்தகத்தை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இன்னும் அடுத்து அடுத்து என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பும் இரண்டு மூன்று சிட்டிங்கிலேயே நாவலை முடிக்க வைத்தது. புத்தகத்தை முடித்த பின்பும் சில வார்த்தைகள் அர்த்தம் புரியாமலே இருக்கின்றன. யோசிக்கையில் ஒன்றும் பிரச்சனையில்லை, ரஷ்ய நாவல்களில் எத்தனை வார்த்தைகள் புரியாமல் பல படித்திருக்கிறேன். ஆக, வார்த்தைகள் அல்ல உணர்வுகளே புத்தகத்தை கடத்துகின்றன போலும்.
சரி, நாவல் பத்தி என்ன சொல்ல? அது வந்து பல வருஷம் ஆயிட்டுது. ஆனாலும் எனக்கு புதுசுதான். அது மாதிரியே இன்னும் பூமணி என்ற ஆளுமையை அறியாத ஆட்கள் போய் வாங்கி படியுங்க.. வாட்ஸப், டவுன்லோட், டேட்டாஸ்பீட், ஆன்லைன் என சலித்து போன வாழ்க்கையில் சற்று ஆசுவாசம் கொள்ள, வாழ்க்கை சுவாரசியமானதுதான் என சொல்ல வைக்க தமிழ் மண் சார்ந்த எழுத்துக்கள் உதவுகின்றன. நன்றி பூமணி சார். இப்போது, அஞ்ஞாடி படித்துவிடும் ஆசை வந்துட்டுது, ஆனாலும் அளவுதான் பிரச்சனை.
நாவலில் ஒரு இடத்தில் இப்படி ஓர் அம்மா சொல்கிறாள்: "எதுக்கு ஆடு மேய்க்க வேண்டும், நேரத்துக்கு சாப்பிட வராம.. பேசாம வீட்டிலேயே இருக்கலாமா இல்லையா? ".பிறந்த குழந்தையை எப்படி நீட் தேர்வுக்கு தயார் செய்வது என யோசிக்கிற மத்தியதர வர்க்கம் இருக்கையிலே இந்த எளிய தாயின் பெரிய கவலை தான் நாவலை சுவாரசியம் ஆக்கியது எனக்கு..
இந்த அனுபவம் அசுரன் படம் வருவதற்கு வெகு காலம் முன்பு. 2018 டிசம்பரில்.
Comments