Skip to main content

Dear Mrs. Naidu - என் வாசிப்பு அனுபவத்தில்

குழந்தை இலக்கியம் குறித்து கருத்து சொல்லவெல்லாம் நான் இல்லை. இருந்தாலும் கடினமாக வார்த்தைகளை, தொடர் சங்கிலிகளாக வாக்கியங்களை அமைத்தல் என்பதை SMS காலத்தில் குழந்தைகள் பெரிதும் விரும்புவதில்லை என்பது என் கணிப்பு. இவையெல்லாம் தாண்டி வாசிக்க வைக்க வேண்டுமென்றால், ஒன்று அவை சித்திரக்கதையாக இருக்க வேண்டும் அல்லது விஷ்ணுபுரம் சரவணின் வாத்து ராஜா போல் மிகவும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும். என் வீட்டில் அப்படித்தான், இப்படியே எங்கும் என நான் சொல்லவில்லை. என் அனுமானம் படியே Dear Mrs. Naidu இருக்கிறது. 12-13 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் எளிதாக படிக்கக் கூடிய புத்தகம்தான்.


பெங்களூர் மாநகரில் ஒருகாக்கா முட்டைகுழந்தை. பெண் குழந்தை. 12வயதான சரோஜினி. அவள் தன் பள்ளியில் கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்களில் ஒன்றாக ஒரு பிரபலத்திற்கு கடிதம் எழுதுகிறாள். அது ஆன்னி மிஸ்ஸால் கொடுக்கப்பட்டது. சுற்றுச்சுவர், கேட் போன்றவை இல்லாத வழக்கமான அம்பேத்கர் கார்ப்பரேஷன் ஸ்கூலில் பிராஜெக்ட் கொடுப்பது என்றால் அது அவர்களால் மட்டுமே முடியும். ஏன் என்றால் அவர்கள் மட்டுமே அந்த பள்ளிக்கு நேரத்திற்கு வருபவர். தலைமை ஆசிரியரோ அல்லது மற்ற ஆசிரியர்களோ எப்போதுமே ஒரு சில நாள் மட்டுமே வரும் பள்ளியில் ஆன்னி மிஸ் மட்டுமே தொடர்ச்சியாக வருகிறார், பள்ளியை நடத்துகிறார். சரோஜினிக்கு அவள் தாய் வீட்டு வேலை செய்யும் இடத்தின் வக்கீல் விமலாராவ் மேடம் எப்போதோ கொடுத்த புத்தகம் ஒன்று கவிக்குயில் சரோஜினி நாயுடு பற்றியது. எப்போதும் பெரும்பாலும் காமிக்ஸ் படிக்க விரும்பும் குழந்தை சரோஜினி தன் பெயர் கொண்ட ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை படித்து மிகவும் பிடித்துவிட தன் பள்ளி பிராஜெக்ட ஆக அவருக்கு கடிதம் எழுத துவங்குகிறாள். கடிதத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறாள். அவளது குடும்ப சூழலையும் தனது குடும்ப சூழலையும் ஒப்பிட்டு எழுதுகிறாள், கழிவிரக்கம் இல்லாமல். நாயுடுவின் தாயைப் போலவே சரோஜினியின் தாயும் உறுதிமிக்கவராக, தீர்மானங்கள் எடுப்பதில் நெஞ்சுரம் கொண்டவராக இருப்பதை ஒப்பிடுகிறாள். இப்படியாக கடிதம் நீள்கிறது.

தன் சக இருப்பிட நண்பன் அமீர் அருகிலிருக்கும் தனியார் பள்ளியில் சேர்ந்துவிட(அவரது அப்பாவுக்கு காசு கொஞ்சம் கிடைச்சுதாம்), தானும் எப்படியாவது அப்பள்ளியில் தன் நண்பனோடு சேர்ந்துவிட துடிக்கிறாள். தன் வாழிடத்தில் அருகிருக்கும் பகுதியில் நடைபெற்ற (அது பாஸ்ட் டென்ஸ் தானே!) நடைபெற்றுகொண்டிருக்கும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்திலிருந்து கிடைத்த தன் தோழி தீப்தி வந்தபின்னும் தொடர்கிறது அவளது ஆசை. ஆன்னி மிஸ் ஒருநாள் பள்ளியில் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து சொல்ல, அங்கிருந்து கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த செய்தி அவளுக்கு கிடைக்கிறது. அச்சட்டம் தனியார் பள்ளிகள் 25 சதமான ஏழை குழந்தைகளை கட்டணம் இல்லாமல் சேர்க்க வேண்டும் என்ற சரத்தினை சொல்கிறது என்பதை கண்ட சரோஜினி தம் அம்மாவிடம் சொல்கிறாள், தானும் தனியார் பள்ளியில் (அமீர் படிக்கும் பள்ளி என்றெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை) சேரவேண்டும் என்று. அம்மாவும் தன் குழந்தையை கூட்டிக்கொண்டு க்ரீன்ஹில் தனியார் பள்ளிக்கு (அங்கேதான் அமீர் படிக்கிறான்!)செல்கிறாள்.

ஏதோ ஜவுளி கடையில் நுழைந்தது போன்ற உணர்வை அப்பள்ளி அங்கிருக்கும் கண்ணாடி சுவர்கள் மூலம் அவர்களுக்கு ஊட்டியது. தயக்கத்துடனே உள்ளே சென்றவர்களுக்கு கர்நாடகாவில் நர்சரிக்கு முன் வரை மட்டுமே அந்த இடஒதுக்கீடு என சொல்லி பள்ளி நிராகரிக்கிறது. இப்படியான ஒற்றை வாக்கியத்தில் அந்நிகழ்வினை எளிதில் கடந்துவிட முடியாது. குழந்தை மற்றும் தாயின் தயக்கம், செக்ரட்டரியின் அலட்சியம், திமிர் பார்வை, பிரபலர் சிபாரிசில் வந்தாலும் ஏகடியம், வருமான சான்றிதழ் குறித்த சந்தேகம்,(எல்லோரும் பணக்காரராக இருக்க ஆசைப்படும்போது ஒருவர் தான் ஏழையாக ஏன் நடிக்க வேண்டும், ஏன் வருமான சான்றிதழின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்று சரோஜினி எண்ணுகிறாள்), ஏழையுடன் கை கொடுத்தவுடன் டெட்டால் ஊற்றி கை கழுவும் நாகரிகம் என்னும் அப்பட்டமான மனித விரோத செயல்பாடு என்பவனவற்றையெல்லாம் நீங்கள் புத்தகம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஆசிரியரின் எழுத்து வண்ணம் திறம் கொள்ளும் மற்றொரு இடம் இது. வழக்கமாக கை கோர்த்து நடக்கும் தாய், தன்னை சற்றேறக்குறைய இழுத்தபடி தனியார் பள்ளியை விட்டு வெளியேற, குழந்தை சரோஜினி சிறிது நேரம் கழித்து நிதானித்த தாயிடம் கேட்கிறாள், என்னம்மா? அம்மா சொல்கிறாள், “I need some fresh air”. சாரிம்மா, என்னால் தானே நீ அவமானப்பட நேர்ந்தது என சரோஜினி சொல்ல, “ஆசைப்படும் ஒன்று கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படாதே, என்றுமே கிடைக்காது என்று மன்னிப்பு கோராதே, வேறு ஒரு வழியை கண்டுபிடிஎன்கிறாள் தாய்.
பின் என்ன நடக்கும், அவள் எப்படியோ போராடி அந்த தனியார் பள்ளியில் சேர்ந்துவிட்டாள் என்றுதானே! அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற வல்லமை கொண்டதாக கருதப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் எத்தனை மோசடித்தனமானது என்பதை இக்கதையின் பின் நிகழும் நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன. என்னதான் தனியார் பள்ளியில் 25 சத ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் தலித் மாணவர்கள் எய்ம்ஸ் வரை அனுபவிக்கும் சாதிய தீண்டாமை போலவே வறுமையின் தீண்டாமையும் தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு மட்டுமே கோரும் அரசியல் கட்சிகளும், மாணவர் சங்கங்களும், அச்சட்டத்தின் முக்கிய அம்சமான அரசுப் பள்ளியை வலுப்படுத்துதல் என்பதை புறம் தள்ளி நிற்கும் அவலத்தையும் சுட்டுகிறது. ஆம், சரோஜினி பின் தான் படிக்கும் அரசுப் பள்ளியின் முகத்தை மாற்ற முனைகிறாள். வறுமையின் பிடியில் இருந்தாலும் மனிதம் துளிர்க்க உதவிகள் பல இடத்தும் அவளுக்கு கிடைக்கின்றன. ஆனாலும், அக்குழந்தை சரோஜினி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் ஏன் வாலண்டரி சர்வீஸ் பெற்று செய்ய வேண்டும் என்றொரு முக்கிய வினாவினைத் தொடுத்து அரசையும் நாடுகிறாள். இப்படியாக கதை சுவைபட தொடர்கிறது.
என்னடா இது, கதை அரைகுறையாக முடிந்துவிட்டதோ என எண்ணலாம். கதை சொல்வது என் நோக்கமல்ல. கதையாசிரியரின் மொழி நடையும், வசனங்களும், யதார்த்த சித்தரிப்புகளுமே இக்கதையின் வலு சேர்க்கும் விஷயங்களாகின்றன. இக்கட்டுரையின் துவக்கத்தில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டிருக்கும். அவ்வாறே அந்த நாவலிலும் பல இடங்கள் வருகின்றன. அது ஒரு குழந்தை ஒரு கட்டுரை/கடிதம் எழுதும்போது அடித்தல் திருத்தல்களோடு எழுதுமே அச்சாயல். இது அக்கடிதத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. நாவலாசிரியர் மாதங்கி சுப்ரமணியன் கடிதம் மூலம் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை கதையாக சொல்கிறார் என்றே முதலில் எண்ணினேன். ஆனால் நாவலாசிரியர் சரோஜினியின் கடிதம் வாயிலாக பெண்களின் உறுதி, தீர்மானிக்கும் திறன், தனியார் பள்ளிகளின் இரக்கமற்ற முகம், அரசுப் பள்ளிகளின் அவலம், ஆட்சியுள் உள்ளோர்களின் அரசுப் பள்ளிகள் குறித்த பாராமுகம், வறுமை என்றாலும் அங்கு எப்போதும் நீக்கமற படர்ந்திருக்கும் மானுடம், பாசம், சூழல் மறந்த குழந்தைகளின் நட்பு என பலவும் பேசுகின்றன. இந்நாவல் வெற்றியை கோரும் இடங்களாக அவற்றையே நான் பார்க்கிறேன். அப்படியே என் நண்பர்கள் பலரும் பார்ப்பதால் நான் இந்நாவல் குறித்து இங்கு பேசுகிறேன்.
இது ஒரு யங் ஜுபான் புக்ஸ் வெளியீடு. இறுதி வரிகளாய் இப்புத்தகத்தில் இருப்பவை, இவை- “It feels like forgetting the earth. It feels like moving the skies.“


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற