
ஓ எங்கள் கிளாரா
கடந்த நூற்றாண்டின் கனல் பொறியே
காலகாலத்திற்குமான அணையாத தீபமே
ஓர் எண்ணத்தின் விதை ஊன்றப்பட்டதில்
உலகு கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகளிர் தினத்தை
உரிமைகளின் ஆவேச உருவமே
உணர்வுகளின் தூரிகைத் தீற்றலே
நூற்றாண்டு நிறைவின் சிலிர்ப்பில் விடிகிறது இந்த மார்ச் எட்டு...
உழைக்கும் பெண்களின் ஓங்கிய குரலே
உணர்ச்சிகளின் காவியப் பெருக்கே
கோபன்ஹெகனில் நடந்த கூட்டத்திற்கு வயது நூற்றியொன்று
தீப் பற்றி எரிந்த டிரயாங்கில் தொழிற்சாலையின்
வெளியேற இயலாத சுவர்களுக்குள்
இரும்புக் கதவுகளுக்குள்
தகர்த்தெறிய முடியாதுபோன சாளரங்களுக்குள்
சிக்கித் திணறிய பெண் தொழிலாளரிடமிருந்து
குமுறிப் புறப்பட்ட கதறல்களை-
நெருப்பில் வீழ்ந்து கொதித்த கண்ணீர்த் துளிகளை -
அவற்றிலிருந்து சினந்து கிளர்ந்த பதாகைகளில் ஏந்தினீர்கள்
சமத்துவ வேட்கையின் நெடிய மூச்சே
பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமே
எதிரொலிக்கிறது பெண்களின் எழுச்சி கீதம் இப்போது மேற்காசியாவிலும்....
சுதந்திரத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் நீதியின் பெயரால்
நம்பிக்கை வானத்துத் தாரகையே
கரை கடந்து சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளமே
ஓ எங்கள் கிளாரா ஜெட்கின்
மகளிர் தின நூற்றாண்டு சிவந்து விடிகிறது
உனது நினைவுகளின் கிளர்ச்சியோடு!
- எஸ் வி வேணுகோபாலன் ( 9445259691 / svvenu@gmail.com)
நண்பர்களே, சமையற்கூடங்களிலும், சடங்குகளிலும் இன்னும் முடக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்திற்கு இக்கவிதை கேள்விகளை விட்டெறிகிறது. இன்னும் ”அவள் பெண்” என்று பகடி செய்பவர்களை இக்கவிதை தன் எழுச்சி வீச்சால் ஏதோ செய்யும்.
ஆண்டுதோறும் கடந்து செல்கிற ஒரு தினமல்ல மார்ச் 8. கரைகிற ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு மகளிரையாவது அவர்களை “அவர்களாக” இருக்க விட சபதமேற்க வேண்டிய நாள். ஒரு கிளாரா ஜெட்கினால் ஏற்பட்ட மாற்றங்களின் துவக்க நிலையே இன்னும் தேக்க நிலையாக இருக்கிறது.
தேக்க நிலை களைந்து இன்னும் பெண்கள் பீடு நடை போட, பல்வேறு காரணிகளால் புரையோடி போயிருக்கும் இச்சமூகத்தை மாற்றிட அவர்கள் ஆண்களையும் கைபிடித்து அழைத்து செல்லட்டும் . தாய் கைபற்றி போகும் குழந்தைகள் நம்பிக்கையோடு, மகிழ்வோடு, பயமில்லாமல் செல்வதை இவ்வுலகம் நன்கறியும்.
Comments
நன்றி