
பொதுவாகவே புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தினை அது ஏதாவது வகையிலும் ஏற்படுத்த வல்லவை. ஒரு சில நம்முள் அதிர்வுகள் ஏற்படுத்தலாம், அசைத்தும் போடலாம். சிலவே நம்மை புரட்டி போட, நம்மை முற்றாக குலைத்து விட மிகுந்த சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானது (அநேகமாக எல்லாமும்), எளிய மக்களின் ஏழ்மையைம், அவமானங்களையும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முற்றாக சுரண்டுதலையும், சுரண்டலை, அவமானங்களை எதிர்த்து விடுதலை வேண்டி அவர்களின் கூட்டு போராட்ட நிகழ்வையும், உணர்வையுமே சொல்பவனவாக உள்ளன. சில அவ்வாறான எளிய மனிதர்களாக இருந்து பின் பெரும் தலைவர்களாக அவர்கள் மாறிய வாழ்க்கை வரலாற்றினையும், பலகோடி எளிய மனிதர்களுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்த பல புரட்சி நாயகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கை முன்னெடுக்க வல்ல தத்துவ நூல்களாகவும் உள்ளன.
இவ்வகையான புத்தகங்களில் பலருக்கும் பலவித தேர்வுகள் இருக்கலாம். சிலருக்கு ஏன், பலருக்கும் ”மார்க்ஸிம் கார்க்கியின் அழியா காவியம் தாய்”, நிரஞ்சனாவின் அற்புத படைப்பு “நினைவுகள் அழிவதில்லை”, காந்தியின் நேர்மைக்காக ”சத்திய சோதனை”, தகழியின் “தோட்டியின் மகன்”, என இத்தகைய நூல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேற்சொன்னவையோடு, பஷீரின் “பாத்துமோவாட ஆடு”, “எங்கள் வீட்டில் ஒரு வெள்ளை யானை இருந்தது”, ”மதிலுகள்” ; எம்.டி.வாசுதேவன் நாயரின் “இரண்டாம் இடம்”, ருஷ்ய நாவலான “வானவில்”, “ஒரு உண்மை மனிதனின் கதை” என என்னுடைய பட்டியலும் நீள்கிறது. இருந்தும், வெகு சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த, புரட்டிபோட்ட, உணவருந்த இயலாதவாறு, குறிப்பாக தேநீர் கோப்பை கையில் வாங்கி சில கணங்கள் தயங்கி, ஏங்கி, கண்களில் நீர் மல்க அருந்த வைத்த அந்த நாவல், டேனியலின் ஆங்கில நூலினை மிக அற்புதமாக முருகவேள் மொழிபெயர்த்த விடியலின் வெளியீடான “எரியும் பனிக்காடு”. இப்புத்தகத்தினை எழுத்தாளர், கவிஞர் ஆதவன் தீட்சண்யா இவ்வாறாக குறிப்பிடுகின்றார், “கதகதப்பிற்காக நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் தேயிலை தோட்டங்களில் உரிமைகள், உணர்வுகள் மறுக்கப்பட்டு வாழ்வை தொலைத்த எம்மக்களின் உதிரம் உள்ளதை இப்புத்தகம் சொல்கிறது”.
ஆம், மிகவும் உண்மைதான். சுமார் 700 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தினை தொடர்ச்சியாக வாசிப்பது மிகவும் கஷ்டம். பலகீன இதயங்கள் இக்காட்சியை காண வேண்டாம் என்று சொல்வார்களே, அவ்வாறே மிகவும் தைரியம், உறுதி வேண்டும் இப்புத்தகத்தை படிக்க. கதையின் நாயகர்கள் வள்ளியும் கந்தனும் எங்கே சொந்த மண்ணை விட்டு எஸ்டேட் சென்று என்னென்ன அவதியுற போகிறார்களோ என்றஞ்சி அவர்கள் ஊரை விட்டு செல்லும் அந்த இடத்தில் புத்தகத்தினை மூடிவிட்டு இரண்டு நாட்கள் மன உளைச்சலுக்குப்பின்னே மீதியையும் படித்து முடித்தேன். படித்து விட்டு “என்ன சார், உடம்பு சரியில்லையா?, என்னாச்சு? என்று என்னிடம் எறியப்பட்ட கேள்விகளோடு சுமார் 10 நாட்கள் கழித்தேன். பின்பே இயல்பு நிலைக்கு திரும்பினேன். இன்றும் தேநீர் அருந்துகையில் வள்ளியையும், கந்தனையும் அதில் காண்கிறேன். நிச்சயமாக சொல்லலாம், வெள்ளைத்துரைமார்களின் பெருமைகளை, “அவன் கிட்டேயே இந்த நாடு இருந்திருக்கலாம்” என்பவர்களின் முகத்தில் காரியுமிழும் உண்மை நிகழ்வின் கதை. ச. பாலமுருகனின் “சோளகர் தொட்டி” போலவேதான் இந்த நாவலும், நம்மை அதிர, அழ, வெட்கப்பட, வேதனைப்பட வைக்கிறது.
வெளிவந்து பல மாதங்கள் கழித்தே இந்த நாவலை படித்தேன். இடதுசாரி அரசியலோடும், எழுத்துக்களோடும் ஈடுபாடும் தொடர்பும் உள்ள என்னைப் போல பலரும் மற்றும் வாசித்து மகிழும் சுகானுபவத்தை வழக்கமாக கொண்டிருப்பவர்களும், இந்நாவலினை மிகவும் தாமதமாகவோ, சிலர் இன்னும் படிக்காமலோ, சிலர் கேள்விப்பட்டிராதவர்களாகவோ இருக்கக் கூடும். நம்மை வெட்கப்பட்டு, நாணி கூச வைக்க ஒரு நிகழ்வு நடந்துவிட்டது.
ஈரோடு மாவட்டம் கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் 7வது படிக்கும் நிவேதிதா என்கிற பெண் குழந்தை இப்புத்தகத்தினை படித்துவிட்டாள். அதுவும் அரையாண்டு பரீட்சைக்கு படித்து கொண்டும், கிடைத்த சில இடைவெளியில் இந்நாவலினை வாசித்துவிட்டாள். படித்து முடித்துவிட்டு அழுதிருக்கிறாள், நாவலை வாசித்த அநேக அவளது தாத்தாக்கள், பாட்டிக்கள், மாமாக்கள், அத்தைகள், அண்ணன்கள் போலவே. ஆங்கில வழி பள்ளியில் படித்துக் கொண்டு சுமார் 700 பக்கங்கள் உள்ள மிகவும் கனமான நிகழ்வினை கொண்ட ஒரு தமிழ் நாவலினை அவள் படித்து விட்டாள் என்பதே எத்துனை ஆச்சரியமான, ஆனந்தமான, நெஞ்சுக்கு இதமான நிகழ்ச்சி. அவள் அழுதிருக்கிறாள் என்றால், அவள் கதையோடு நிகழ்வோடு ஒன்றிருக்கிறாள் என்பதுதானே அர்த்தம். முருகவேளின் மொழிபெயர்ப்பும், விடியலின் வெளியீட்டின் இலக்கும் அநேகமாக நிறைவேறிவிட்டது என்றே நம்புகிறேன். 2010 வருடத்தில் இவள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
இது குறித்து இவளது தந்தை (என்னிடம் தான் முதலில் சொன்னார்!) சொல்லும்போது, “தோழா, முதலில் பார்த்திபன் கனவுதான் படிக்க குடுத்தேன். அவள் அதை முடித்துவிட்டு மிகவும் நன்றாக இருந்தது என்றாள். நாந்தான் அப்புத்தகம் வேறு வித பாணி, இப்புத்தகத்தினை படி என்றுதான் குடுத்தேன்; அவள் இவ்வளவு சீக்கிரம் படித்து விடுவாள் என்று நான் எண்ணவில்லை; படித்து அவள் அழ, அவங்க பாட்டி என்னமா கண்ணு அழுகிற என்று கேட்க அவள் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் மட்டும் விஷயத்தினை சொன்னாள்; அடுத்த புத்தகம் கொடு என்று கேட்டிருக்கிறாள்”. வழக்கமாக பல செய்திகளை குறுஞ்செய்தியாக பலருக்கும் வழக்கம் கொண்டிருக்கும் நான் இம்முறை இவ்விஷயத்தை உடனே தொலைபேசி செய்து பலருக்கும் சொன்னேன், சொல்லி முடித்த பின்பே என் நெஞ்சு படபடப்பு நின்றது. ஒரு மகிழ்ச்சியான நிறைவு வந்தது. என்னதான் இருந்தாலும் என்னோடு 6, 7 வயதுகளில் விளையாடிய குழந்தை அவள். நான் தூக்கியும் இருக்கிறேன். பெருமிதம் எனக்கும் இருக்காதா என்ன?
சொல்லவில்லையே, அவளது தந்தை, என்ன காரணத்தாலோ பரபரப்பாக பேசப்படாத “காரா, பேருந்தா?” என்கிற நூலினையும், சமீபத்தில் படித்த அனைவராலும் வெகுவாக சிலாகிக்கப்பட்ட “பள்ளிக்கூட தேர்தல்” என்கிற நூலினையும் எழுதிய என்னுடைய நண்பர், தோழர், ஈரோடு கலைக் கல்லூரியின் பேராசிரியர் ந. மணி. இவரை மட்டும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், நிவேதிதாவின் வாசிப்பிற்கு மற்றொரு காரணம் அவரது தாய் காந்திமதி டீச்சர். நானும், வரதனும், மோகன சுந்தரமும், மணிதோழர் வீட்டில் இரவு ஒன்று மட்டும் பேசிக் கலைகிற வரையில் தூங்காமல் எங்களின் பேச்சினை கவனித்திருப்பார். சில நேரங்களில் நிவேதிதா 12மணி வரை கூட விழித்திருந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. உணர்ச்சிகளின் கலவையில் இதோ முடிக்கத் தெரியாமல் முடிக்கிறேன். மணியின் எண் : 94433 05040. காந்திமதி டீச்சரின் எண் : 94439 83977. பூக்குட்டி நிவேதிதா இப்போது என் நெஞ்சு நிறைத்திருக்கிறாள். அவள் கையில் இப்போது “அலை ஓசை” தவழுகிறது.
Comments
அற்புதமான இடுகைக்கு முதலில் உற்சாகமான வாழ்த்துக்கள்....
பூக்குட்டி நிவேதிதாவின் வாசிப்பு உங்களைத் திணறடித்ததன் பிரதிபலிப்பு உங்களது வீச்சான எழுத்தில் தெறிக்கிறது. வாழ்த்துக்கள்.
முக்கியமாக ஒரு நன்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். புத்தகம் பேசுது ஜனவரி இதழுக்காக, குழந்திகளும் வாசிப்பும் என்ற பொருளில் கட்டுரை எழுத இருந்த நேரத்தில் உங்களிடமிருந்து கிடைத்த அலைபேசிச் செய்தி என்னை எத்தனை ஊக்குவித்தது என்பதை, அந்தக் கட்டுரை கையில் கிடைக்கும்போது நீங்கள் உணரக் கூடும்.
நேற்று இரவு, இரா முருகவேள் அவர்களை அழைத்துப் பேசியபோது, அவர் அடைந்த இன்ப அதிர்ச்சியைச் சொல்லில் விளக்க முடியாது. பிறகு அவரது எண்ணை பேராசிரியர் மணிக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் இருவரது அன்பின் பரிமாற்றம் ஏற்கெனவே நிகழ்ந்திருப்பது. நிவேதிதா வாசிப்பின் பின்புலத்தில் அது ஒரு புத்துரு பெற்று விட்டது.
எரியும் பனிக்காடு இன்னும் என்னெதிரில் தான் இருக்கிறது. வெட்கமற்று நானும் அதிக கடந்து போய்க் கொண்டிருந்தேன். தோழர் ராஜ் வாசித்து விட்டார், எப்போதோ. விரைவில் படித்து விட்டு அழைக்கிறேன்.
தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள்...
எஸ் வி வேணுகோபாலன் .